100 வயதில் தடம் பதிக்கும் சேவை புரிந்த எளிய மருத்துவர்!

முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கவழக்கங்களை முறைப்படுத்தி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் அருணகிரி.
மருத்துவர் அருணகிரி
மருத்துவர் அருணகிரி

சாதனைக்கு வயது தடையில்லை எனலாம். முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்தி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துவருபவர் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் அருணகிரி, 100 வயது.

இவர் கடந்த ஆண்டு வரை, 99 வயதிலும் மருத்துவ சேவை புரிந்துவிட்டு, சிறு சிறு உடற்பயிற்சிகளைச் செய்து எந்தவித நோயின்றி வாழலாம் என்பதற்கு முன்னுதாரணமாக 100 வயதைக் கடந்து எளிமையாக நல்ல நினைவாற்றலுடன் வாழ்ந்து வருகிறார்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஜெகநாதன் பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் தம்பதிக்கு, 1920 ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் தினத்தில் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ஜெ. அருணகிரி.

பள்ளிப்படிப்பை சிறுமலர் பள்ளியிலும், இன்டர்மீடியட் படிப்பைத் திருச்சி நேஷனல் கல்லூரியிலும் படித்தார். 1937 இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார்.

1943-ல் எம்.பி.பி.எஸ். முடித்தவுடன் ராணுவத்தில் சேர்ந்து பர்மாவில் இரண்டாம் உலகப் போரில் மருத்துவச் சேவை புரிந்தார். போரில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்தார்.

சுமார் மூன்றரை ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, விருப்ப ஓய்வு பெற்று சேலம் திரும்பினார். 1946 இல் சேலம் திரும்பிய இவர், ஓமலூர் பகுதியில் கிளினிக் தொடங்கினார். சேலம் அரிசிபாளையம் தம்மண்ணன் சாலையில் அவரது பெயரிலேயே சிறிய கிளினிக் ஒன்றை ஆரம்பித்தார். 

அதேகால கட்டத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். எந்தவித ஊதியம் பெறாமல் மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, கிராம மக்களுக்கு மருத்துவ சேவை புரியும் வகையில் ஓமலூர் கிளினிக் தொடங்கி அங்குள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். 

சேலம் அரிசிபாளையம் அருகே இயங்கி வந்த கிளினிக்கைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு அருணகிரி பேருந்து நிறுத்தம் என்ற பெயர் வந்தது. 2020 ஜனவரி 15 ஆம் தேதியுடன் நூறு வயதை எட்டிய மருத்துவர் அருணகிரி, இன்றும் அதே துடிப்புடன் இருந்து வருகிறார்.

கடந்த 2019 வரை தனது கிளினிக்கிற்கு சென்று மருத்துவ சேவை புரிந்துவந்த இவர் தற்போது முதுமை காரணமாக சேலம் நான்கு சாலையில் உள்ள அவரது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

தனது மருத்துவ சேவை அனுபவம் குறித்து ஜெ. அருணகிரி கூறியது:

"எனது தந்தை மிகப் பெரிய நில உரிமையாளராக இருந்தார். நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தேன். அப்போது அந்த ஒரு கல்லூரிதான் இருந்தது. சிறு வயது முதல் விளையாட்டில் ஆர்வமாக இருப்பேன். படிப்புடன் சேர்த்து விளையாட்டுக்கு நேரத்தைச் செலவிடுவேன்.

"என்னிடம் சிகிச்சை பெற வரும் பலர் தங்களது குடும்ப விவரங்களைத் தெரிவித்து, என்ன படிக்கலாம் என ஆலோசனை கேட்பார்கள். நானும் பலருக்கு ஆலோசனை கூறியுள்ளேன். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் மாறிவிட்டது. அந்தக் காலத்தில் சிகிச்சைக்கு வருபவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் பெற்று வந்தேன். கடந்த 2019 இல் 100 ரூபாய் கட்டணம் பெற்று சிகிச்சை பார்த்து வந்தேன்.

"வாழ்க்கையில் அனைவரும் காலை 6 மணிக்கு முன்னதாக எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். சரியான நேரத்திற்கு உறங்கச் செல்ல வேண்டும். இதுபோன்ற பழக்கவழக்கங்களை முறைப்படுத்தி வாழ்ந்தால் நம்மை எந்த நோயும் தாக்காது.

"எனக்கு 100 வயது கடந்துவிட்டாலும் தற்போதும் காலையில் சீக்கிரம் எழுந்து சிறு, சிறு உடற்பயிற்சிகளைச் செய்து வருகிறேன். அதன் காரணமாகவே எனது கை, கால் மூட்டு உள்ளிட்டவை எந்த வலி, வீக்கமின்றி இருக்கின்றன. இந்தப் பழக்க வழக்கங்களை இளைய தலைமுறையினர் எல்லோரும் பின்பற்ற வேண்டும்" என்றார் அருணகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com