இல்லம் நடத்தி சேவை புரிந்த மனம் இன்று முதியோர் உதவித்தொகையுடன் காலந்தள்ளுகிறது

முதியோர் பலருக்கு ஆதரவளித்துவந்த நாமக்கல்லைச் சேர்ந்த மேரியம்மாள், இப்போது நோய்வாய்ப்பட்டு அரசு தரும் முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயைக் கொண்டு காலம் கழித்து வருகிறார்.
மேரியம்மாள்
மேரியம்மாள்

கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தெருக்களில் சுற்றித் திரியும் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற முதியோர், கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு ஆதரவளித்துப் பாதுகாத்து வந்தவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மேரியம்மாள்.

ஆனால், தற்போது 74 வயதான நிலையில் நோய்வாய்ப்பட்டு, தனக்கு அரசு அளிக்கும் முதியோர் உதவித்தொகை ஆயிரத்தைக் கொண்டு தனது மகளின் பாதுகாப்பில் காலந்தள்ளி வருகிறார்.

தற்போதும் தள்ளாத வயதிலும் தான் உண்டு, தனது சுகம் உண்டு என்று இருந்துவிடாமல், முதியோர் இல்லங்களுக்குச் சென்று ஆதரவற்ற முதியோர்களைப் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் காலத்தை நகர்த்துகிறார் என்பது நெகிழ வைக்கிறது. 

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மாறி, தனி குடும்ப முறைக்கு மாற்றம், இயந்திரமான வாழ்க்கை, நவீனமயமாக்கல், மேலைநாடுகளின் கலாசாரம், கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வேலைப்பளு, நேரப் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கொஞ்சி விளையாடும் நேரங்கள்கூட குறைந்துகொண்டே வருகின்றன. இதனால் தற்போதெல்லாம் பிஞ்சுக் குழந்தைகளோ பராமரிப்பு இல்லங்களையும் ஆயாக்களையும் நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகப் பிள்ளைகளுக்குப் பெற்றோர் மீது பாசம், அன்பு குறைந்து, வளர்ந்து பெரியவர்களாக ஆன நிலையில், முதியோர்களைக் கண்டுகொள்வதில்லை. இதனால் தங்களது பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் கலாச்சாரம் வந்துவிட்டது.

மேலும், மாமியார், மாமனாரை சொந்த பெற்றோராக கருதி மதித்து நடக்கும் மருமகள்கள் மன நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் கிட்டத்தட்ட மக்கள்தொகையில் 10 சதவீதம் முதியோர்கள் இருப்பார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகிறது.  இந்த முதியோர்களில் பாதிப்பேர் போதிய உணவு, உடை, உறைவிடம் ஆகிய வசதிகளின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆதரவற்றோரை ஆதரித்து வாழ்வளித்த  மேரியம்மாள்

இத்தகைய நிலையில், மேரியம்மாளின் தொண்டு நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் ஆதரவற்றோருக்காகக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு சிரமங்களுக்கிடையே அடைக்கலம் கொடுத்து சேவை இல்லம் நடத்தி வந்தவர் மேரியம்மாள் (74).

நகரில் யார் ஆதரவற்று சுற்றித்திரிந்து வந்தாலும், சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சிசுவானாலும், குப்பைமேட்டில் கிடந்த பெண் சிசுவானாலும் பொதுமக்கள் உடனடியாக அழைப்பது மேரியம்மாளைத்தான். தனி ஒரு ஆளாக, உதவி செய்வோர் யாருமின்றி இதுபோன்ற சேவையை வாடகை இல்லத்தில் இருந்து சப்தமின்றி நடத்திவந்தார் மேரியம்மாள்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான மேரியம்மாள், திருமணமாகி ராசிபுரம் வந்த நிலையில், சில ஆண்டுகளிலேயே ஆதரவற்றோருக்கு சேவை செய்வதிலேயே நாட்டம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஆதரவற்றோருக்கு தொண்டு இல்லம் நடத்த இவரது மனம் பாதை வகுத்தது. ஆனால், அப்போதைய சூழல் அதற்கு வழிவகுக்காததால், குடும்பத்துடன் இருந்தவாறே ஆங்காங்கே சேவையாற்றி வந்தார்.

சாலையோரம் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும் வாழ்வளித்த மேரி

சாலையோரம் சுற்றித்திரியும் மனநிலை பிறழ்ந்தோர், ஆதரவற்றோர், தெருக்களில் பிச்சையெடுத்துத் திரியும் முதியோர், உணவுக்கு வழியின்றி சாலையோரம் கிடப்போர், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர் போன்றவர்களை அழைத்து வந்து, முடிவெட்டி,  குளிப்பாட்டி, புத்தாடை கொடுத்து இல்லத்தில் அடைக்கலம் கொடுத்து வந்தார்.  இவர் நடத்தி வந்த இல்லத்திற்கு எத்தனையோ பேர் வந்துபோயுள்ளனர்.

இவற்றில் குறிப்பிடத் தக்க ஒரு விஷயம், இல்லத்தில் வந்தவர்களில் பலருக்கு மகன்கள், மகள்கள் இருந்தும் இரக்கமில்லாமல் வீட்டை விட்டு அனுப்பப்பட்டவர்களும் உண்டு. வேதனைகளை மனதில் சுமந்து, இவர்கள் இந்த இல்லத்தில் தங்கி தங்கள் காலத்தை கழித்து வந்தனர்.

தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண் சிசுக்கள்

மேரியம்மாள் இல்லம் ஏதும் நடத்த வழியில்லாதபோது, இதுபோன்ற ஆதரவற்றோர்களை அரவணைத்து அரசு ஆதரவுடன் செயல்படும் ஆங்காங்கேயுள்ள முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடுவார். அதேபோல, நாமக்கல், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழைத் தம்பதியினரின் குழந்தை, தவறான முறையில் பெறப்பட்ட குழந்தை, பெண் சிசுவை தொப்புள் கொடியுடன் இவரது இல்லத்தின் வாயிலில் விட்டுச்செல்வர். இதுபோன்று விட்டுச்சென்ற பெண் சிசுவை இவர் எடுத்து பராமரித்து, அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைத்து வருகிறார். இதுவரை இவரிடம் விட்டுச்சென்ற 50-க்கும் மேற்பட்ட பெண் சிசுக்களை அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் கொண்டு சேர்த்துள்ளார்.

அரசின் நிதி ஏதும் இல்லை

இவ்வளவு சேவைகள் செய்த  இவருக்கு இதுவரை அரசின் உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆதவற்றோர் இல்லத்தை அறக்கட்டளையாகப் பதிவு செய்வது, கணக்கு பராமரிப்பு, ஆடிட்டர் சான்றிதழ் பெறுவது,  நடைமுறை சட்டதிட்டங்கள்படி விண்ணப்பம் கொடுத்து செய்து முடிப்பது போன்றவை இவருக்கு வராது என்பதால், அரசின் எந்த உதவியும் இதுவரை இவருக்குக் கைகூடவில்லை.

தொண்டுள்ளம் கொண்டோர், சேவை அமைப்பினர் பலர் இவருக்கு அவ்வப்போது செய்யும் நிதியுதவியைக் கொண்டுதான் இவரது இல்லத்தில் அடைக்கலம் இருந்த அனைவரின் பசியையையும் போக்கி வந்தார்.

நடக்கக்கூட முடியாத ஆதவற்ற மூதாட்டிகள், பார்வையற்ற பாட்டிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் போன்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தற்போதைய சமுதாய சூழலில் சேவையாற்றுவது அரிதிலும் அரிது.

இந்த சேவைகள் மட்டுமின்றிப் பல முதியோர்களுக்கு அரசின் முதியோர் ஓய்வூதியமும் பெற்றுத் தந்துள்ளார்.  இந்த நிலையில்தான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு பதிவு பெற்ற முதியோர் இல்லமாக இது இல்லாததால், இதனை மூட சமூகநலத் துறை அலுவலர்கள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து வேறு வழியின்றி வேதனையுடன் அவரது இல்லத்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களை அரசு இல்லங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

தற்போது முதியோருக்கு அரசு வழங்கும் மாதம் ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு மகளின் ஆதரவில் நோய்வாய்ப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து மேரியம்மாளிடம் பேசியபோது, நோய்வாய்ப்பட்டு மருந்து மாத்திரைகளுடன் மகள் வீட்டில் இருந்தாலும், ஏதாவது முதியோர் இல்லங்களுக்குச் சென்று சேவையாற்ற வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் தற்போதும் சேவையாற்ற தயாராக உள்ளேன். அரசு நினைத்திருந்தால், அந்த முதியோர் இல்லத்தைத் தொடர்ந்து நடத்தியிருப்பேன். அரசின் ஆதரவும் அங்கீகாரமும் இல்லை என்பது வருத்தம் தான் என்றார்.

எவ்வளவோ சேவைகளுக்குச் சொந்தக்காரர் மேரியம்மாள். இன்று முடக்கிப் போடப்பட்டுள்ளார். இவரால் காப்பாற்றப்பட்டோர் இப்போது எங்கெங்கோ. காப்பாற்றப்பட வேண்டியவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால், காலம் கைகொடுக்கவில்லை. வேதனையுடன் வேடிக்கைதான் பார்க்க முடிகிறது மேரியம்மாளால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com