1952 புயலைப் பாடலாகவே வர்ணிக்கும் 72 வயது முதியவர்!

'பையர் நந்தனம் ஆண்டிலே கார்த்திகை பதினஞ்சிலே ஞாயிறன்ற தினத்திலே...' என கழுத்து நரம்புகள் புடைக்கப் புடைக்கப் பாடுகிறார் 72 வயது முதியவர் மூக்கையா.
மூக்கையா
மூக்கையா

'பையர் நந்தனம் ஆண்டிலே கார்த்திகை பதினஞ்சிலே ஞாயிறன்ற தினத்திலே...' என கழுத்து நரம்புகள் புடைக்கப் புடைக்கப் பாடுகிறார் 72 வயது முதியவர் மூக்கையா. புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த, அவர் படித்தது வெறும் இரண்டாம் வகுப்புதான்.

சற்றேறக்குறைய 5 நிமிடங்கள் அந்தப் பாட்டு.

'அடுப்பில் உலை ஏறல... படுக்கவும் இடம் நேரல... வரகரிசியும் வேகல... மாங்காய் காய்த்த மரமெல்லாம் மலை மலையாய் சாய்ந்ததே... தேங்காய் காய்த்த மரமெல்லாம் தேரு தேராய் சாய்ந்ததே... சோலையான சவுக்கெல்லாம் தூறு தூறாய் காய்ந்ததே... உலக்கை உரல இடிக்கல... அம்மிய குழவி அரைக்கல.. பேசும்படக் கொட்டாய் எல்லாம் பேர்த்துக்கிட்டுப் போச்சுதே...

மொத்தக் காட்சியையும் படம்பிடித்துக் காட்டும் பாடல் அது. வேறெந்த ஆவணமும் இப்படியான புயல் ஒன்றைப் பதிவு செய்திருக்குமா எனத் தெரியவில்லை. புதுக்கோட்டையைப் புரட்டிப் போட்ட கஜாவுக்கு முந்தைய புயல் அது என்கிறார்கள். அவர் பிறந்த அந்தக் காலத்தில் யாரோ ஒருவர் எழுதிய பாடலைத்தான் அவர் மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டும். கும்பகோணம் குருசாமிதாஸ் உள்ளிட்ட பலரது பெயரையும் கூறுகிறார்.

இப்பாடல் மட்டுமல்ல, மகாபாரதக் கதைப் பாடல், பாகவதர் மகிமை, மாணிக்கக் குலப்பாட்டு, அம்மன் பாட்டு, காதல் பாட்டு... எனக் களை கட்டுகிறது மூக்கையாவின் குரல்.

5 ஆம் வயதிலேயே தாய், தந்தையை இழந்துவிட்டதாகக் கூறுகிறார் மூக்கையா. இரண்டாம் வகுப்புக்குப் பிறகு பள்ளியில் படிக்கவில்லை. ஆனால், இப்போது வரை கையில் கிடைக்கும் அத்தனைத் துண்டுச் சீட்டுகளையும் படித்து முடித்துவிடுகிறார்.

மூட்டை மூட்டையாகச் சேகரித்தும் வைத்திருக்கிறார்.

மகாத்மா காந்தி உதவிபெறும் தொடக்கப் பள்ளிக் கட்டடம்தான் மூக்கையாவின் வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாமே. அம்பலகாரரின் உதவியால் தனக்கு அரசாங்கப் பணம் ஓஏபி ஆயிரம் ரூபாய் கிடைத்து வருவதாகக் கூறும் மூக்கையா, 'அது போதும் எனக்கு, என்ன செய்யப் போறேன்' என்கிறார்.

உற்சாகமாய் ஒவ்வொரு பாடலையும் பாடிக் காட்டிய பிறகு வாய் திறந்து மகிழ்ச்சியாய் சிரிக்கிறார். எந்தக் கள்ளங்கபடமும் இல்லாத சிரிப்பு அது. சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த இவர், திருமணமும் செய்து கொள்ளவில்லை. இவரது மொத்த உறவும் தடையின்றிக் கொட்டும் பாடல்களும் வெள்ளமாய் கரைபுரண்டோடும் மகிழ்ச்சியும்தான்.

இந்த வயதில் இத்தனை உற்சாகமாய் அவர் இருக்கிறார் என்பதே பெரும் பேறுதான்.

2005 இல் அழகான கையெழுத்தில் தனக்கு இடிந்து போன வீீட்டைக் கட்டிக் கொள்ள நிதி உதவி செய்ய வேண்டுமெனக் கேட்டு வட்டாட்சியருக்கு மனு அளித்திருக்கிறார். எந்த உதவியும் வந்துசேரவில்லை. அதனால் அவரது வாழ்க்கையில் எந்தத் தடையும் ஏற்படவில்லை.

கிடைத்ததை உண்டு, நினைவில் உள்ளவற்றைப் பாடி மகிழ்ச்சியாய் இருக்கிறார்.

அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்யும் இந்தக் காலத்தில், தேர்வு முடிந்தவுடன் சுத்தமாகப் பாடத்தையே மறந்து போகும் இந்தக் காலத்தில்... மூக்கையா ஒரு முன்னுதாரணம். பாடல்களாக, கதைகளாகக் கேட்டும், தேடித் தேடிப் படித்தும் கிடைக்கும் அறிவுதான் நிலையானது என்பதை உணர்த்துகிறார்.

இன்னமும் மூக்கையாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், கிராமங்களில் உற்சாகத் தொகுதிகளாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com