'மகன்கள் வேண்டாம், சாலையோர வாழ்க்கையே நிம்மதி'

சொந்தத் தொழில் செய்யும் இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்தும், மனைவி இறந்த பிறகு துரத்திவிடப்பட்ட முதியவர் ஒருவர் சாலையோர வாழ்க்கையையே விரும்பி ஏற்று வாழ்ந்து வருகிறார்.
முதியவர் சுப்பிரமணி
முதியவர் சுப்பிரமணி

சொந்தத் தொழில் செய்யும் இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்தும், மனைவி இறந்த பிறகு துரத்திவிடப்பட்ட முதியவர் ஒருவர் சாலையோர வாழ்க்கையையே விரும்பி ஏற்று வாழ்ந்து வருகிறார்.

மழலைச் சிரிப்பால் ஆனந்தம் தந்த பாச மகன், வயோதிக காலத்தில் உதறி, ஒதுக்கித் தள்ளினால், ஏற்படுகிற சோகம் கொடுமையானது. பிள்ளைகளாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டுப் பொது இடங்களில் தஞ்சமடையும் முதியோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

வாழ்க்கையின் கடைசிக் காலத்தை நினைத்து தினமும் வேதனையுறும் முதியவர்கள் பெரும்பாலானவர்கள் உள்ள நிலையில், இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஏற்று வாழ்ந்து வருகிறார் 65 வயதான முதியவர்.

ஈரோடு - பவானி சாலையில் சாமியார் போல சுற்றித் திரிந்த முதியவர் ஒருவரிடம் பேசியபோது கூறியதாவது:

"என் பெயர் சுப்பிரமணி,  கோவை மாவட்டம் துடியலூர்தான் எனது ஊர். எனக்கு 2 மகன், ஒரு மகள். ஒரு மகன் சென்னையிலும் மற்றொரு மகன் கரூரிலும் சொந்தத் தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். மகளை ஈரோட்டில் திருமணம் செய்து கொடுத்துள்ளேன். மனைவி  உடல்நலக் குறைவால் 4 ஆண்டுகளுக்கு முன்பு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு கவனிக்க ஆள் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்.

"கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து, எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைத்துப் பிள்ளைகளை வளர்த்தேன். ஆனாலும் அவர்கள் என்னை மறந்துவிட்டனர். மனைவி இறந்த பிறகு, கட்டட வேலைக்குச் சென்று சம்பாதித்தேன். ஆனால், இன்று என்னால் உழைக்க முடியாது. மகன்களிடம் தஞ்சமடையலாம் என 4 ஆண்டுகளுக்கு முன்பு மகன்கள் வீட்டுக்குச் சென்றேன்.  

"எங்களுக்கே போதுமான இடவசதி இல்லை, நீ எங்கு இருப்பாய்?’ எனக் கூறி விரட்டிவிட்டனர்.  அதன் பிறகு ஊர் ஊராகச் சுற்றினேன்.  ஈரோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதியில் கோயில், சாலையோரங்களில் கிடந்து 4 ஆண்டுகளைக் கழித்து விட்டேன்.

"இப்போது கோயில் வாசல், டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு பிச்சை எடுத்து அதில் வரும் பணத்தைக் கொண்டு தினமும் இரவில் மது அருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்குகிறேன். 3 குழந்தைகளும் என்னை தெருவில் விட்டு விட்டார்கள் என்ற கவலையை மறந்து மது போதையில் நிம்மதியாகத் தூங்குகிறேன். வாழப்போகும் நாள்களில் என்னுடைய பிள்ளைகளுக்கு பாரமாக இல்லாமல் வாழ்ந்து விட்டு போக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.  அநாதையாக இறந்துவிடுவேன் என்ற கவலை இருந்தது.  இப்போது இறந்த பிறகு எனக்கு என்ன தெரியப் போகிறது என்ற மனோதிடம் வந்துவிட்டது" என்றார்.

அவரிடம் பேசிவிட்டு விடைபெறும்போது, அவ்வழியாகச் சென்ற புதிய நகைக் கடை விளம்பர வாகனத்தில் ஒலித்தது ஒரு பாடல் பொருத்தமாக -  “எனக்கு ராஜாவா நான் வாழுறேன். எதுவும் இல்லேன்னாலும் ஆளுறேன்.”

பெற்ற பிள்ளைகள், உறவினர்களால் கைவிடப்பட்ட இவர்கள், ஒருகாலத்தில் தங்களுக்குக் குழந்தை பிறந்தபோது, எனக்கு மகன் பிறந்திருக்கிறான், மகள் பிறந்திருக்கிறாள் என இனிப்புக் கொடுத்து மகிழ்ந்தவர்கள் என்பதை மறக்காதீர்கள். தன் உடலை வருத்தி உழைத்து சம்பாதித்துக் குடும்பத்தை நடத்திய தந்தையையும், 10 மாதம் சுமந்து பெற்று, தன் உதிரத்தைப் பாலாக்கி ஊட்டி பல தியாகங்களைச் செய்து வளர்த்த தாயையும் வயதான காலத்தில் கண்டுகொள்ளாமல் ஒதுக்குவது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கதும்கூட. இதுபோன்ற பிள்ளைகள் மீது நீதிமன்றத்தில் பெற்றோர் வழக்கு தொடரலாம்.  

வயதான பெற்றோரை ஒதுக்கித் தள்ளும் குற்றத்திற்கான தண்டனை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழக்குரைஞர் ஜி. தனலட்சுமி கூறுகையில், பெற்றோரைக் கவனிக்காமல் ஒதுக்கும் பிள்ளைகள் மீது வழக்கு தொடரலாம். முதியோர் பராமரிப்பு திருத்தச் சட்டம் 2019 இன்படி 6 மாத சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்கிறார்.

மனம் செய்யாத விரும்பாத ஒன்றைச் சட்டம் வந்தா செய்துவிடப் போகிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com