2050-ல் மூன்று மடங்காகும் முதியோர் இல்லங்களின் தேவை

உலகில் மூத்தவர்களாக வாழ்ந்தாலும் சமூகத்தில் ஒருதலைப்பட்சமாக நடத்தப்படும் முதியவர்களின் குறைகளைக் களைவதே நாளைய முதியவர்களாகும் நாம் செய்யும் கடமை.
கோப்பிலிருந்து
கோப்பிலிருந்து

மனித வாழ்வு என்பது பலதரப்பட்ட பருவங்களைக் கொண்டது. குழந்தையாகத் தொடங்கும் மனித வாழ்வு பருவ வயதைக் கடந்து இளைஞனாகப் பயணித்து முதுமையில் நிறைவு பெறுகிறது.

ஒரு நாட்டிற்கு எப்படி இளைஞர்கள் சக்தி தேவைப்படுகிறதோ, அதேபோல் முதியவர்களின் அனுபவ வழிகாட்டுதல்களும் அவசியப்படுகிறது.

எனினும், தற்போதுள்ள சூழலில் கால ஓட்டத்தில் முதியவர்களின் தேவையைச் சமகால தலைமுறை உணர மறுக்கிறது என்பதை அதிகரித்து வரும் முதியோர் இல்லங்களும் ஆதரவின்றித் தெருக்களில் விடப்படும் முதியோர்கள் எண்ணிக்கையும் நமக்கு உணர்த்துகின்றன.

ஒரு பக்கம் மனித ஆயுளை அதிகரிக்க நமது அரசுகளும் அறிவியலும் பாடுபட்டபோதும், சமூகத்திலோ வயது முதிர்ந்தவர்கள் பல இன்னல்களை த்தான் சந்தித்து வருகின்றனர். ஒருகாலத்தில் 30-க்குள் சுருங்கிய மனித ஆயுள்காலம் இன்றைக்கு எழுபதைத் தாண்டியுள்ளது. அதேபோல முதியவர்களின் பாதுகாப்பு இல்லங்களின் எண்ணிக்கையும் சமூகத்தின் போக்குகளை வெளிச்சமிடுகின்றன.

இந்தியாவில் உள்ள முதியோர் இல்லங்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் முதியோர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

உலகில் முதியவர்களுக்கான பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முதியோர் வாழத் தகுதி இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தில் உள்ளது.

2019 கணக்கெடுப்பின்படி, மனிதனின் சராசரி ஆயுள் காலமானது உலகளவில் 72.6 ஆண்டுகளாக இருந்தது. அதிகபட்சமாக ஜப்பானில் 84.6 ஆண்டுகளும், குறைந்தபட்சமாக மத்திய ஆப்ரிக்க குடியரசில் 53.3 ஆண்டுகளுமாகவுள்ளது. இந்தியாவில் 69.7 ஆண்டுகள்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், 1970 இல் உலகின் சராசரி ஆயுள்காலமானது 56.9 ஆண்டுகளாக இருந்தது. அதிகபட்சமாக ஸ்வீடனில் 74.5 ஆண்டுகளும், குறைந்தபட்சமாக மாலியில் 32.4 ஆண்டுகளாகவும் இருந்தது. இந்தியாவில் 47.7 ஆண்டுகளாக இருந்தது.

இதுவே, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் 1921இல், கணக்கிடப்பட்ட நாடுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 61 ஆண்டுகளும், குறைந்தபட்சமாக ரஷியாவில் 20.5 ஆண்டுகளாகவும் இருந்தது.

இந்தியாவிலோ தற்போதுள்ள ஆயுள்காலத்தைவிட 3 மடங்கு குறைவாக 24.9 ஆண்டுகளாக இருந்தது, எத்தனை கொடுமை?

இந்திய அரசு 2016 இல் வெளியிட்ட அறிக்கையின்படி, 65 வயதுக்கு மேல் உயிர்வாழ்பவர்களில் ஆண்கள் 66.78 சதவீதமும், பெண்கள் 74.71 சதவீதமும் உள்ளனர்.

2019 இன் ஆய்வின்படி, கேரளத்தில் அதிகபட்ச ஆயுள்காலமாக 75.1 ஆண்டுகளும், அதில் ஆண்கள் 72.2 சதவீதம், பெண்கள் 79.9 சதவீதமும் உள்ளனர்.

தமிழகத்தின் சராசரி ஆயுள்காலமானது, 71.4 ஆண்டுகளும், அதில் ஆண்கள் 68.5 ஆண்டுகளும், பெண்கள் 74.8 ஆண்களும் ஆகும். 

30 ஆண்டுகளுக்குப் பின் 2050 இல், மனிதர்களின் சராசரி ஆயுள்காலமானது உலகளவில் 77.1 ஆண்டுகளாக இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுவே, இந்தியாவில் 77.15 ஆண்டுகளாகவும், அதில் ஆண்களுக்கு 75.30 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 79.40 ஆண்டுகளாகவும் ஆயுள்காலம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

2050 ஆம் ஆண்டு 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 7.7 கோடி பேர் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் வெளியிட்ட தரவுகளின்படி, தற்போது உலக அளவில் 7.3 கோடி பேர் 65 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக மக்கள்தொகையில் 11 பேரில் ஒருவர்.

அதிகபட்சமாக கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியப் பகுதியில் 26.1 கோடி பேர் 65 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர்.

வயது முதிர்ந்தவர்கள் சந்திக்கும் பொருளாதார, சமூக மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்னைகளை கவனிக்க மறுக்கும் போக்குகள் அவர்களை அலட்சியமாக நடத்தும் முக்கிய களமாக நமது வாழ்க்கையை மாற்றியுள்ளது.

2050 ஆம் ஆண்டு உலகளவில் 150 கோடி பேர் 65 வயதைக் கடந்திருப்பார்கள் எனவும், மக்கள்தொகையில் 6 பேரில் ஒருவர் முதியவராக இருப்பார்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டின்படி, மக்கள்தொகையின் 6.38 சதவீதம் பேர் முதியவர்களாக உள்ளனர், இதுவே 2050 ஆம் ஆண்டு 7.7 கோடி பேர் 65 வயதைக் கடந்திருப்பார்கள்.

தென்னிந்தியாவைப் பொருத்தவரை 2050 ஆம் ஆண்டின் மக்கள்தொகையில் 65 வயதைக் கடந்தவர்கள், அதிகபட்சமாக ஆந்திரத்தில் 30 சதவீதம், தெலங்கானாவில் 25 சதவீதம், கர்நாடகத்தில் 24.6 சதவீதம் மற்றும் தமிழகத்தில் 20.8 சதவீதம் பேர் இருப்பார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இந்தியா முழுவதும் தற்போது 1,176 முதியோர் இல்லங்களில் கிட்டத்திட்ட ஒரு லட்சம் முதியோர்கள் வாழ்ந்து வருகின்றனர், அதில் அதிகபட்சமாக கேரளத்தில் 182 முதியோர் இல்லங்கள் உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 151 முதியோர் இல்லங்கள் உள்ளன, இதில் அரசாங்க நிதியுதவி பெற்று தன்னார்வ அமைப்புகள் 25 முதியோர் இல்லங்களை இலவசமாக நடத்தி வருகின்றனர். அவற்றில் சுமார் 1,000 முதியவர்கள் வசித்து வருகின்றனர்.

2050 இல் முதியோர் இல்லங்களின் தேவையானது தற்போது உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த எதிர்வரும் காலத்தை இட்டு நிரப்ப உள்ள சமகால இளைஞர்களும் தற்கால முதியவர்களை நம்மைப் போல் உணர்ந்து அவர்களுக்குண்டான தேவைகளை நிறைவு செய்து கொடுப்பது கடமையாகும்.

எப்படி ஒரு நாட்டில் இளைஞர்கள், குழந்தைகளின் எண்ணிக்கை கருத்தில் கொள்ளப்பட வேண்டுமோ அதேபோல் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கையும் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். பல தலைமுறைகளுடன் பயணப்படும் அவர்களை அடிப்படைத்  தேவைகளுக்கே   அலைக்கழிக்க விடாமல் மரியாதையுடன் சமமாக மதிக்க வேண்டும்.

வாழ்வாகாது மூத்தவர்களை மதிக்காதவர்களின் வாழ்வு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com