பாமகவை சு(ழ)ற்றும் அரசியல் கணக்கு!

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பாமக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த விதமான அரசியல் நகர்வை மேற்கொள்ளும் என்பதை அரசியல் பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
பாமகவை சு(ழ)ற்றும் அரசியல் கணக்கு!



தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பாமக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த விதமான அரசியல் நகர்வை மேற்கொள்ளும் என்பதை அரசியல் பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற முழக்கத்துடன், பல்வேறு ஜாதி சங்கங்களையும் ஒருங்கிணைந்து சென்னையில் 16.7.1989-இல் பாட்டாளி மக்கள் கட்சியை (பாமக) ராமதாஸ் தொடங்கினார். 1989-இல் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் 36 தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றியின்றி 6 சதவீத வாக்குகளைப் பெற்று, அரசியல் சக்தியாக பாமக உருவெடுத்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை காரணமாக அனுதாப அலை வீசிய 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக  தனித்துப் போட்டியிட்டு, 5.9 சதவீத வாக்கு வங்கியுடன் ஒரு தொகுதியை வென்றது. 1996 மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதல்முறையாக வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து, 20 மக்களவைத் தொகுதிகள், 104 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஆண்டிமடம், பென்னாகரம், எடப்பாடி, தாரமங்கலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக, திமுக என மாறி மாறி பாமக பயணிக்கத் தொடங்கினாலும், பாமகவின் வாக்கு வங்கி பெரிய அளவில் சேதாரம் ஆகவில்லை. 1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு 30 தொகுதிகள், 1999 தேர்தலில் திமுக அணிக்கு 26 தொகுதிகள் என பாமக அங்கம் வகித்த அணிக்கே பெரும்பான்மை தொகுதிகள் கிடைத்தன.

இதன்மூலம், வட மாவட்டங்களில் பாமக இன்றி எந்தக் கூட்டணியும் வெற்றி பெற முடியாது என்ற கருத்துருவாக்கம் தமிழக அரசியலில் உருவானது. இந்த இருமுறையும் வாஜ்பாய் அமைச்சரவையில் பாமக இடம்பிடித்து தேசிய அரசியலிலும் கோலோச்சியது.

திடீரென மத்திய அமைச்சரவையிலிருந்தும், திமுக கூட்டணியிலிருந்தும் விலகி, 2001 சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளைப் பெற்று, 5.6 சதவீத வாக்குகளுடன், 20 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாமகவின் வளர்ச்சிக்கு அடுத்தகட்ட வியூகத்தை வளர்த்தார் ராமதாஸ்.

2004-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுக அணிக்கு தாவிய பாமக,  6.7 சதவீத வாக்குகளுடன், போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மாநிலங்களவை எம்.பி.யாகிய அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரானார். இந்தத் தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாமகவுக்கு எதிராக தனித்துப் போட்டியிட்ட திருமாவளவன் 2,55,773 வாக்குகளைப் பெற்று அதிமுக, திமுக கவனத்தை ஈர்த்தார்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு விசிக தாவிய நிலையில், திமுக கூட்டணியில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை பாமக வென்றது. வாக்கு வங்கியை (5.6 சதவீதம்) பாமக இழக்காவிட்டாலும், 2001 தேர்தலைவிட 2 தொகுதிகள் குறைவாகவே பாமகவால் பெற முடிந்தது. அதிமுக கூட்டணியில் விசிக இணைந்ததால் வட மாவட்டங்களில் பட்டியலின வாக்குகள் அதிமுக அணி வசம் குவிந்து, 13 தொகுதிகளில் பாமகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு மாறி, 5 தொகுதிகளில் போட்டியிட்டது பாமக. இருப்பினும், திமுக கூட்டணியில் விசிக இணைந்ததால், வட மாவட்டங்களில் பட்டியலின மக்களின் வாக்கு வங்கி பாமகவுக்கு எதிராகத் திரும்பியதன் காரணமாக, போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பாமக தோல்வியடைந்தது. 

விசிகவை பயன்படுத்தி பாமகவை அரசியல் ரீதியாக வீழ்த்த அதிமுக, திமுக வியூகம் அமைத்துவிட்டதை உணர்ந்த ராமதாஸ், திருமாவளவனுடன் கைகோத்து தனது அரசியல் வியூகத்தை மாற்றிக்கொண்டார். 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக, விசிக இணைந்தாலும், அது எலி - தவளை  நட்பாகவே இருந்ததை தேர்தல் முடிவுகள் உணர்த்தின. 30 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால், பாமக 5.2 சதவீத வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கியை மட்டும் தக்கவைத்துக் கொண்டது.

மீண்டும் விசிகவுக்கு எதிராகவும், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற வியூகத்திலும் இருந்த ராமதாஸூக்கு 2014 மக்களவைத் தேர்தல் கைகொடுத்தது. தமிழகத்தில் முதல்முறையாக வலுவான மூன்றாவது அணியில் பாஜக, தேமுதிக, மதிமுகவுடன் பாமகவும் இணைந்தது. அப்போது ஒரு தொகுதியில் அதாவது, தருமபுரியில் மட்டும் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். பாமகவும் 4.4 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது.

மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காதது, அன்புமணியை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்றுக்கொள்ளாதது ஆகிய காரணங்களால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி" என்ற கோஷத்துடன் முதல்முறையாக எண்ம தொழில்நுட்ப (டிஜிட்டல்) பிரசார முறையில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களமிறங்கியது பாமக.

இந்தத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரான அன்புமணி தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் 2-ஆவது இடத்தையே பெற முடிந்தது. போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை தழுவினாலும், 5.36 சதவீத வாக்கு வங்கியுடன் பாமக அரசியல் சக்தியாக தொடர்ந்தது.

2019 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக பெரிய அணியை கட்டமைக்க வேண்டிய நெருக்கடி, டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுகவின் வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டியது என பல்வேறு தேவை அதிமுகவுக்கு இருந்த நிலையில், அதை பாமகவும் சாதுர்யமாக பயன்படுத்தி மீண்டும் கூட்டணியாக களத்தில் இறங்கினாலும் மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வியடைந்தது.

தனக்கு செல்வாக்கு மிகுந்த தருமபுரி தொகுதியைக்கூட பாமக இழந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் தருமபுரியில் வெற்றி பெற்ற அன்புமணி 42.51 சதவீத வாக்குகளையும், 2-ஆவது இடம்பிடித்த அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.மோகன் 35.51 சதவீத வாக்குகளையும், திமுக வேட்பாளர் ஆர்.தாமரைச்செல்வன் 16.37 சதவீத வாக்குகளையும் பெற்றனர். ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக 56.16 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதிமுக, பாஜக கூட்டணியில் அன்புமணி 41.12 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார்.

2014 தேர்தலில் எதிர்ப்பு வாக்குகள் சிதறியதால் அன்புமணி எளிதாக வெற்றி பெற முடிந்தது. 2019-இல் இருமுனைப் போட்டியில் பட்டியலின, பிற்பட்டோர் வாக்குகள், திமுக அணிக்கு ஒருமுகமாக குவிந்ததால் பாமக தோல்வியைத் தழுவியது. இருந்தாலும், பாமகவின் வாக்கு வங்கியில் பெரிய அளவில் சேதாரமாகவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

2009 முதல் இதுவரை அரசியல் களத்தில் அதிமுகவும், திமுகவும் மாற்றி மாற்றி பாமகவுக்கு எதிராக வியூகம் அமைத்துச் செயல்படுவதால் 10 ஆண்டுகளாகவே பாமக தேர்தல் களத்தில் பின்னடைவைச் சந்திக்கிறது. பலமுனை போட்டி உருவாகி எதிர்ப்பு வாக்குகள் சிதறினால் மட்டுமே பாமகவுக்கு வெற்றி என்பதை 1996, 2014 தேர்தல்கள் உணர்த்துகின்றன.

தமிழக அரசியலில் இப்போது ஆளுமைகள் இல்லாத சூழலில், தன்னைச் சுற்றி நடக்கும் அரசியல் சுழற்சியைக் கணித்து, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த வழியில் பாமக பயணிக்கப் போகிறது என்பது சில மாதங்களில் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com