'நம்பிக்கை இருந்தால் வெல்லலாம்'

அசாத்திய நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், எத்தகைய புற்றுநோய் என்றாலும் அதனை வென்று ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும் என்பதை மெய்ப்பிக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அசாத்திய நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், எத்தகைய புற்றுநோய் என்றாலும் அதனை வென்று ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும் என்பதை மெய்ப்பித்துக் கொண்டுள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர்.

ஈரோடு ரங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணன் (54).  ஏற்றுமதி, இறக்குமதி ஆலோசகரான இவரது மனைவி காயத்ரி (45) தனியார்  வர்த்தக ஆய்வாளர். திருமணமாகி 22 ஆண்டுகளான நிலையில் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஈரோட்டிலுள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு இறுதியாண்டு முடித்துள்ளார். இளைய மகன் திருச்சியிலுள்ள கல்லூரியில் பி.காம் முதலாண்டு படித்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தப் புற்றுநோயிலேயே மிகவும் அரிய வகையான அக்கியுட் மிலாய்ட் லுக்கேமியா (ஏஎம்எல்) எனும் நோயால் பாதிக்கப்பட்டு 99 சதவிகிதம் அபாய கட்டத்துக்குச் சென்றிருந்த காய்த்ரி, தனது திடமான நம்பிக்கையாலும், மருத்துவர்களின் உயரிய சிகிச்சைகளாலும் நோயிலிருந்து முழுமையாக மீண்டு தற்போது தனது வழக்கமான பணிகளை தொடர்வது மட்டுமின்றி, தனது மகன்களின் எதிர்காலத்துக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார்.

காயத்ரியின் இந்த நம்பிக்கையை இந்த ரோஜா தினத்தில் அறிவது எல்லோருக்குமான நம்பிக்கையாக அமையும் என்றால் ஐயமில்லை.

இதுகுறித்து காயத்ரி நம்மிடம் பகிர்ந்துகொண்டது: கடந்த 2014 ஆம் ஆண்டுவாக்கில் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தேன், சற்றுத்  தொலைவாக பயணம் செய்தாலே தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. அப்போது ஈரோட்டில் உள்ள ஒரு மருத்துவரை அணுகியபோது எனக்கு நரம்பு சார்ந்த பிரச்னை உள்ளதாக கூறினார்.

2015 இல் மற்றொரு நரம்பியல் மருத்துவரைச் சந்தித்தபோது மூளைக்கும் கழுத்துக்கும் இடையே ரத்தம் சரிவர சென்றுவரவில்லை எனக் கூறினார். 2017 இல் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவரை அணுகியபோது, ஹீமோகுளோபின் குறைபாடு என தெரிவித்தார். அடுத்தடுத்து அவர்கள் அளித்த மருந்துகளை எடுத்துக்கொண்டபோதும் குணமாகவில்லை.

இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில் தலைமுடிகள் அதிகளவில் உதிரத் தொடங்கின. இதையடுத்து, நண்பர் ஒருவர் கூறியதன்பேரில் அதே ஆண்டு மே மாதம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவரை அணுகிபோது, அவர் எனது ரத்தத்தைப் பரிசோதனை செய்துவிட்டு ரத்தப்புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். அவர் கூறிய அந்த நேரத்தில் எனக்கு ஹீமோகுளோபின் அளவும் ஒரு சதவீதமாக குறைந்திருந்ததால் தாமதிக்காமல் பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூறினார்.

அன்றே திருச்சியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், எனக்கு ரத்தப் புற்றுநோயில் அரியவகையான அக்கியுட் மிலாய்ட் லுகேமியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதற்கு உடனடியாக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் அறிவுறுத்தினர். அதன்பேரில், அதேநாள் நள்ளிரவில் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு, எனக்கு அக்கியுட் மிலாய்ட் லுகேமியா வகை ரத்தப்புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும், அதுவும் 99 சதவீதம் அபாயகட்டத்தில் இருப்பதையும் உறுதி செய்தனர். இந்த நோயாலிருந்து மீள வேண்டும் என்றால் பல லட்ச ரூபாய் செலவாகும் என்பதையும் தெரிவித்தனர். அதன்பேரில், சொந்த பணம், உறவினர்கள், நண்பர்கள் உதவி செய்த தொகைகளைக் கொண்டும், மத்திய, மாநில அரசுகளின் காப்பீட்டு நிதி மூலமாகவும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, முதல் ஒரு மாதத்துக்கு எனக்கு 5 முறை ஹீமோதெரபி அளிக்கப்பட்டதன் மூலம் அபாய கட்டத்தில் இருந்து மீண்டேன். பின்னர், எனது சகோதரியின் உடலில் இருந்து 2 முறை தானமாகப் பெறப்பட்ட ஸ்டெம்செல் மூலம் என் உடலில் இருந்த பழைய ரத்தத்தை மாற்றி புதிய ரத்தம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து சில வாரங்களிலேயே முழுமையாகக்  குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்.

தற்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இது இன்னும் சில மாதங்களுக்கு, பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்தால் போதும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

புற்றுநோய் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் குடும்பத்தில் சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது போன்றவற்றில் ஈடுபடுவதுடன், கடந்த 2 மாதங்களாக வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் எனது வழக்கமான வர்த்தக ஆய்வாளர் பணியிலும் ஈடுபட்டுள்ளேன்" என்றார் காயத்ரி.

காயத்ரியின் கணவர் வெங்கட்ரமணன் கூறியது:

"புற்றுநோயின் அபாய கட்டமான நிலையில் இருந்து காயத்ரி இந்தளவுக்கு முன்னேறி வந்துள்ளார் என்றால் அதற்கு அவரது முழுநம்பிக்கையும், மருத்துவர்களின் சிகிச்சையுமே முக்கிய காரணங்களாகும்.

"ஒரு நடுத்தர குடும்பம் என்ற ரீதியில் அவ்வளவு செலவு செய்ய இயலாத நிலையிலும், எனது மனைவி மட்டுமின்றி எனது குழந்தைகளுக்குத் தாயான காயத்ரியை எப்படியும் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அத்தனை செலவுகளையும் ஏற்க துணிந்தேன். அந்த நம்பிக்கை வீணாகவில்லை. புற்றுநோய் என்றால் அது குணப்படுத்த முடியாத நோய் என்றும், பல லட்சங்கள் செலவாகும், அது நம்மால் இயலாது என்றும் மக்களிடையே அவநம்பிக்கை உள்ளது. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு உரிய நேரத்தில் சரியான மருத்துவமனையைத் தேர்வு செய்து நம்பிக்கையுடன் செயல்பட்டாலே எத்தகைய அபாயகட்டமான புற்றுநோயிலிருந்தும் மீண்டு வரலாம் என்பதற்கு எனது மனைவி காயத்ரியே சாட்சி" என்றார்.

இத்தகைய புற்றுநோய் சிகிச்சைக்காக மத்திய, மாநில அரசுகளின் காப்பீடு நிதிகள் இருப்பதுடன், பல்வேறு தனியார் நிறுவனங்களும் நிதியுதவி செய்து வருகின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு எத்தகைய புற்றுநோயாக இருந்தாலும் அவற்றில் இருந்து மீண்டு வந்துவிடமுடியும். இவற்றுக்கு எல்லாம் ஒரே தேவை நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com