நாகரிகத்தின் நிலை மொழி!

மொழி, ஒரு நாட்டில் வாழும் மக்களின் தொடர்புக்கு மட்டுமன்றி அவர்களின் நிலையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் ஆயுதமாகவே இருந்துள்ளது.
தமிழ்மொழி கல்வெட்டு
தமிழ்மொழி கல்வெட்டு

மக்களின் நாகரிகத்தின்  நிலை மொழி தான்!...
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி,
தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே.”
                                                                         (தொல்காப்பியம்
:880)

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில்  செந்தமிழ் நிலத்து மக்கள் என்று கூறி தமிழின் பழமைக்கும், தமிழரின்  பெருமைக்கும் மகுடம் சூட்டியுள்ளார் புலவர் தொல்காப்பியர்.

மொழி எனப்படுவது ஒரு நாட்டில் வாழும் மக்களின் தொடர்புக்கு மட்டுமன்றி அவர்களின் நிலையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் ஆயுதமாகவே இருந்துள்ளது. உள்ளத்து சிந்தனைகள் அனைத்தும் ஒவ்வொருவருக்குள்ளும் உருவாகுவது அவரவர் தாய் மொழியில் தான்.

மொழியின் தனித்தன்மைப் போற்றும் வகையிலும், பழமையை பாதுகாக்கும் வகையிலும்  பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.  1999 யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை.

தாய்மொழியில் யார் பேசினாலும் நம் தாயிடம் பேசியதைப் போல மட்டற்ற மகிழ்ச்சி நமக்குள் ஏற்படுகிறது!. நம்மை இணைக்கவும், ஒருமைப்பட வைக்கவும், புரிய வைக்கவும் தாய்மொழி உதவுவதால் எமது மொழி தாய்க்கு நிகரானது என்று சொல்லப்படுகின்றது.

தாய் மொழியில் சிறந்து விளங்கும் மனிதரிடம்  நுண்ணறிவு அதிகம் இருக்கும். மேலும், படைப்பாற்றல் மிகுந்து, உலகை புதுப்பார்வை கொண்டு அறியப்படுவார் என்று பாரசீக கவிஞர் உமர் கயாம் கூறிகிறார்.

ஒரு மனிதன் தன்னுடைய கருத்து மற்றும் உணர்வுகளை சக மனிதர்களிடம் மொழி மூலமாவே தெரிவிக்கிறான். உலகம் தோன்றியது முதல் இன்று வரை ஒருவருக்கொருவர் தங்களின் எண்ணத்தையும் தகவலையும் வெளிப்படுத்துவதற்காக ஆதி மனிதன் ஓவியத்தால் பேசி பின்னர்  சமிக்ஞையாக உருமாறி அதுவே பின்னாளில் வாய்மொழியாக மாறியது.

ஓவியமும், சமிக்ஞையுமே  மனிதனின் முதல் மொழி. மனிதர்கள் தங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் தாய்மொழிக்கும் பரிணாம வளர்ச்சி தந்தார்கள்.

ஆதி மனிதர் தன் நாகரிக வாழ்கையை நகர்த்துவதில் மட்டும் முக்கியத்துவம் காட்டவில்லை. மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பெரும்பங்கை செய்துள்ளார்கள்.

பின்பு நாள்டைவில் மொழிக்கு வடிவம் வகுத்து அதற்கு இலக்கணம் வகுத்து, பல இலக்கியங்களை உருவாக்கினர். உலகளவில் நூல்கள் பல இருக்கும் மொழிகளில் முன்னணியில் உள்ளது நம் தாய்மொழியாம் தமிழ்மொழி.

பின்னே நின்று என்னே பிறவிபெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே

                                                                    (திருமந்திரம்:81)

பின்னால் தயங்கி நின்று மக்கள் மீண்டும் ஏன் பிறவியைப் பெறுகின்றனர்? முந்தைய பிறவிகளில் நன்கு முயன்று தவம் செய்யாத காரணத்தினால்!. நான் நல்ல தவம் செய்திருந்தேன். இறைவன் எனக்கு நல்ல பிறவி தந்தான். தன்னைப் பற்றித் தமிழில் நூல் செய்யப் பணித்து, எனக்கு நல்ல பிறவியும், அதற்குத் தேவையான ஞானத்தையும் நல்கினான் என் குரு சிவபெருமான் என்று  திருமூலர் கூறுகிறார்.

வளர்ந்து வரும் நவீன நாகரிக உலகில் தாய் மொழியை தவிர்த்து பிற மொழி பேசும் நாகரிகம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிற மொழி பேசுவதில் தவறில்லை. ஆனால்,  தமிழ்நாட்டில் உள்ளவர்களிடமே பிற மொழியில் பேசினால்தான் கெளரவம் என்று நினைக்கும் இளைய சமுதாயம் நாளை தாய் மொழியை மறந்தால் கூட ஆச்சரியமில்லை.

இன்றும் தமிழ் நாட்டில் பல தனியார் பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் என்ற நிலையில் தான் உள்ளது. நாகரிகம் மாறுவது அதன் பண்பு. ஆனால், நம் தாய் மொழியான தமிழை  போற்றுவது நம் மாண்பு. சங்கம் வைத்து வளர்த்த தமிழ் மொழியை சங்கடமின்றி பேச பழக வேண்டும்.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;"

என்ற பாரதியார் பாடலுக்கேற்ப பல நல்ல நூல்களை
தமிழில் மொழி பெயர்த்தால், நவீன உலகில் இருக்கும்
மக்கள் தமிழ் மொழி மீதும் கவனம் செலுத்துவார்கள்.

மனிதர்கள் தங்களது பாரம்பரிய அறிவினையும், பண்பாட்டினையும் நிலைநிறுத்திக் கொள்ள தங்களது தாய்மொழியினைக் காத்துக் கொள்வது அவசியம்.

தாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை என்ற தீப்பொறி நம் இளைய சமுதாயத்தின் உள்ளத்தில் பற்றிக்கொள்ள தேவையான பணிகளைச் செய்வதே தாய்மொழிக்கு நாம் ஆற்றும் சேவை.

                                      (இன்று ''உலக தாய்மொழி நாள்'')

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com