சிறார்களுக்கு வழிகாட்டியாக வைணவக் கதைகள் சொல்லித் தரும் சிறுமி!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அனுக்கிரகஸ்ரீ என்ற 13 வயது சிறுமி, 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வைணவக் கதைகளை சொல்லித் தருகிறார். 
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் வைணவ நாள்காட்டியைக் காட்டும் சிறுமி அனுக்கிரகஸ்ரீ.
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் வைணவ நாள்காட்டியைக் காட்டும் சிறுமி அனுக்கிரகஸ்ரீ.

ஆழ்வார் பெருமக்களால் பாடப்பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் 47-வது கோயிலாக இருந்து வருகிறது காஞ்சிபுரத்தில் உள்ள அழகிய சிங்கப் பெருமாள் கோயில். இக்கோயிலில் பட்டாச்சாரியாக இருந்து வரும் ரெங்கராஜனின் மகள் அனுக்கிரகஸ்ரீ(13).

கோயில் சந்நிதி தெருவில் வசித்து வரும் இச்சிறுமி அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு வைணவக் கதைகள் சொல்லிக்கொடுத்து வருகிறார். பள்ளி விடுமுறை நாள்களில் நேரடியாகவும் சில சமயங்களில் இணையம் வாயிலாகவும் இலவச ஆன்மீக வகுப்பாகவே நடத்தி வருகிறார்.

இவரிடம் வைணவக் கதைகளையும், திருப்பாவைப் பாடல்களையும் தெரிந்து கொண்ட சிறார்கள் அவற்றை மடை திறந்த வெள்ளம்போல சொல்லுவதும் பாடுவதும் வியப்பாகவே இருக்கிறது.

சின்னஞ்சிறு வயதிலேயே பல சிறார்களுக்கு வழிகாட்டியாக இருந்து வரும் இச்சிறுமி பேசியதாவது: 

தொடர்மழை காரணமாக பள்ளிகள் அனைத்தும் அடிக்கடி மூடப்படும் நேரங்களில் விடுமுறையை வீணடிக்காமல் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள சிறார்களுக்கு ஆன்மீகக் கதைகளை சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தலாமே என்று தந்தை என்னிடம் சொன்னார். அவரது வேண்டுகோளை ஏற்று தினமும் காலையில் ஒரு மணி நேரம் மட்டும் இலவசமாக ஆன்மீக வகுப்பு நடத்தி வருகிறேன்.

வகுப்பு நேரத்தின்போது எனக்குத் தெரிந்த ,நான் கற்றுக்கொண்ட அனுமனின் கதை, பன்னிரு ஆழ்வார்களின் சுவை மிகுந்த கதைகள், ராமபிரானின் நற்குணங்கள், நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முக்கியமான குறிப்புகள், பெருமாளைப் பற்றி வேதாந்த தேசிகரால் அருளப்பட்டுள்ள ஸ்தோத்திரங்கள் உள்ளிட்ட வைணவம் தொடர்பானவற்றை சொல்லிக் கொடுக்கிறேன். நான் கதைபோல சொல்லுவதால் பலரும் ஆர்வமுடன் விரும்பி வந்து கற்றுக் கொள்கின்றனர்.

எனது தந்தை அடிக்கடி புராணக்கதைகளையும், தெய்வீகக் கதைகளையும் சொல்லிக் கொடுப்பார். அது மட்டுமில்லாமல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் நடத்தும் அறக்கட்டளை மூலமாக ஆண்டுதோறும் 17 பக்கங்கள் உடைய ஆன்மீக நாட்காட்டியும் வெளியிடுகிறார்கள். அதில் வைணவக் கதைகளை சாதாரண மக்களும் படித்து தெரிந்துகொள்ளும் வகையில் வைணவக்கதைகள் படங்களுடன் அதிகமாக இருக்கும். இதையும் படித்து தெரிந்து கொண்டு அதிலுள்ள கருத்துக்களையும் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.

எனது ஆன்மீக வகுப்புக்கு வரும் சிறார்கள் அனைவருமே காலையில் குளித்து, சுவாமி தரிசனம் செய்த பிறகே வகுப்புக்கு வருகிறார்கள். அவ்வப்போது தேவைப்பட்டால் ஆன்லைன் மூலமாகவும் வைணவக் கதைகளை சொல்லிக் கொடுப்பதும் உண்டு. அப்படி நான் சொல்லிக் கொடுத்தவற்றிலிருந்து மட்டும் வினாடி வினாப் போட்டிகள், திருப்பாவை பாடல் ஒப்புவித்தல் போட்டியும் நடத்தி எனது தந்தை சார்பில் பரிசுகளும் வழங்குகிறோம். தற்போது என்னிடம் 50க்கும் மேற்பட்ட சிறார்கள் வைணவக்கதைகளை கேட்டுத் தெரிந்து கொள்ள வருகிறார்கள்.

மார்கழி மாதமாக இருந்தால் மட்டும் கோயிலுக்குள் உள்ள ஆண்டாள் சந்நிதி மண்டபத்தில் 100க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு வைணவக்கதைகளை சொல்லிக் கொடுப்பேன். என்னைப் பொருத்தவரை வரலாறுகளை சொல்லிக் கொடுப்பதைவிட வரலாறு படைப்பதையே விரும்புகிறேன். சரித்திரம் படைக்க வேண்டும், சாதனைகள் புரிய வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் அனுக்கிரகஸ்ரீ. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com