நீச்சல் போட்டிகளில் ஒரே ஆண்டில் 13 பதக்கங்கள்: அசத்தும் திண்டுக்கல் மாணவி

தற்காப்புக்காக நீச்சல் கற்கச் சென்ற திண்டுக்கல்லைச்  சேர்ந்த பள்ளி மாணவி,  அடுத்த ஒரே ஆண்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு 13 பதக்கங்களை வென்றிருக்கிறார்.
நீச்சல் போட்டிகளில் ஒரே ஆண்டில் 13 பதக்கங்கள்: அசத்தும் திண்டுக்கல் மாணவி

விளையாட்டு என்பது சிலருக்கு பொழுதுபோக்காக இருக்கலாம்.  அதுவே சிலருக்கு வாழ்வின் அடுத்தக்கட்ட இலக்காகவும் மாறிவிடுகிறது. சில விளையாட்டுகள் உடலுக்கு மட்டும் வலுசேர்ப்பையாகவும், சில விளையாட்டுகள் உள்ளத்திற்கும், மூளைக்கும் பலம் சேர்ப்பவையாகவும் உள்ளன. நவீன விளையாட்டுகளில் பல, பணக்கார விளையாட்டுகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால், சில விளையாட்டுகளை இன்றைய தலைமுறையினர் தற்காப்புக்காக கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது. அதில் முன்னணியில் இருப்பது நீச்சல். இன்றைய சூழலில் நீச்சல் என்பது ஒருவரின் பாதுகாப்பு சார்ந்த கலையாக மட்டுமின்றி, ஆபத்தில் தத்தளிக்கும் பல உயிர்களை காக்கும் ஆற்றலையும் அளிக்கிறது.

அந்த வகையில் தற்காப்புக்காக நீச்சல் கற்கச் சென்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த பள்ளி மாணவி,  அடுத்த ஒரே ஆண்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு 13 பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்த சாதனைக்கு சொந்தக்காரர் திண்டுக்கல் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த சு.சிந்துஜா(12). சுந்தரராகவன், ரூபா கீதா  ராணி தம்பதியரின் ஒரே மகளான இவர், தற்போது 8ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

நீச்சல் போட்டிகளில் ஏற்பட்ட ஆர்வம் குறித்து அவர் கூறியதாவது: சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தற்காப்புக்காக நீச்சல் கற்றுக்கொள்ளும் முடிவில், திண்டுக்கல்லில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்திற்குச் சென்றேன். தண்ணீரில் நீந்தும் எனது ஆசை 2 மாதங்களிலேயே, தொழில்முறை நீச்சல் கற்றுக்கொள்ளும் அளவுக்கு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதற்கு எனது பெற்றோர் தெரிவித்த இசைவு, மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

நீச்சல் போட்டியைப் பொருத்தவரை, ஃப்ரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக், பட்டர் ஃப்ளை என 4 பிரிவுகள் உள்ளன. அதில், பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவு எனக்கு மிகவும் பிடித்தமானது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஃப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பட்டர் ஃப்ளை பிரிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறேன்.

சாதாரணமாக நீந்தும் ஒருவர் 20 முதல் 30 விநாடிகள் வரை தண்ணீருக்குள் மூச்சின்றி செயல்பட முடியும். ஆனால், தொழில்முறையில் நீச்சல் கற்றுக் கொள்வோரால், 50 மீட்டர் தொலைவு வரை மூச்சு காற்று வாங்காமல் நீந்த முடியும். நீச்சல் பயிற்சி, கவனச் சிதறலைத் தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் உதவுகிறது.  இதனால், நான் படிப்பிலும் முதலிடம் வகிக்க முடிகிறது.

ஆனாலும், கரோனா தீநுண்மி தொற்றுப் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் ஒட்டுமொத்த விளையாட்டு உலகத்திற்கும் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. அந்த வகையில் தனிப்பட்ட முறையில் என வளர்ச்சியிலும் தற்காலிக இடைவெளி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நீச்சல் போட்டியில் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பதிவு செய்வதே எனது குறிக்கோள் என்றார்.

மாணவி சிந்துஜா கடந்த 2019-20ஆம் ஆண்டில், திண்டுக்கல், ஈரோடு, பவானி, மதுரை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில், 7 தங்க பதக்கம், 6 வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com