உலக உணவு நாள் இன்று! - ஏன், எப்படி வந்தது?

உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் 1979 முதல் உலக உணவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 
உலக உணவு நாள் இன்று! - ஏன், எப்படி வந்தது?

உணவு, உடை, இருப்பிடம்... இந்த மூன்றும்தான் மனிதன் உயிர்வாழ அடிப்படைத் தேவைகள். இவற்றில் முதன்மையான அடிப்படைத் தேவையாக இருப்பது உணவு. 

மனிதன் மட்டுமின்றி உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். 

உணவு மூலமாக ஊட்டச்சத்துகளைப் பெற்று உடல் இயங்குகிறது. நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். 

ஊட்டச்சத்து மிக்க உணவின் அவசியத்தை கரோனா நோய்த்தொற்று எதிர்மறையாக வலியுறுத்திச் சென்றுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்களின் உணவுப் பழக்கவழக்கம் மாறியுள்ளது.  

ஊட்டச்சத்து உணவுகள் என்பது ஒருபுறம் இருக்கட்டும், உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உயிர்வாழத் 'தேவையான உணவு' முதலில் கிடைக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில். 

அந்தவகையில், உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் 1945 அக்டோபர் 16 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO - Food And Agriculture Organisation). 

1945 கனடாவின் கியூபா நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் தற்காலிக தலைமையகம் வாஷிங்டனில் நிறுவப்பட்டது. 1951 ஆம் ஆண்டு உறுப்பு நாடுகளால் இதன் தலைமையகம் இத்தாலி தலைநகர் ரோம்-க்கு மாற்றப்பட்டது. 

உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பில் இந்தியா உள்பட 194 நாடுகள் தற்போது உறுப்பினர்களாக உள்ளன. 

உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கீழ் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி(International Fund for Agricultural Development) உலக உணவுத் திட்டம்(World Food Programme) ஆகியவை செயல்படுகின்றன. 

உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்னையாக உள்ளது. அதையும் தாண்டி ஊட்டச்சத்து உணவுகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தொடங்கப்பட்ட நாளே, 1979 முதல் உலக உணவு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  

ஹங்கேரியன் நாட்டின் அப்போதைய உணவு, விவசாயத்துறை அமைச்சர் டாக்டர் பால் ரோமணி( Dr Pal Romany) என்பவர் அளித்த ஆலோசனையின் பேரில் 1979 ஆம் ஆண்டு முதல்முதலாக கொண்டாடப்பட்ட உலக உணவு நாளில், உலகம் முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. 

உலக மக்களின் பசியைப் போக்க விவசாயத்தில் அதிக முதலீடுகளை செய்து விவசாயப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதே முதலாம் ஆண்டின் நோக்கமாக இருந்தது. 

மேலும், உலக உணவு அமைப்பு மற்றும் உலக உணவு நாளின் இரு முக்கிய நோக்கங்கள், 1. பல்வேறு நோய்களைத் தவிர்க்க, அனைவருக்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குதல். 2. பசியின் காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, இறப்பு ஆகியவற்றைத் தடுத்தல். 

இதுதவிர, உணவு குறித்த கல்வியையும், விழிப்புணர்வையும் பரப்புதல், நெருக்கடி காலங்களில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், அந்தந்த நாடுகளால் விவசாயக் கொள்கையை மேம்படுத்துதல், புவியைப் பாதுகாத்தல், மீனவ சமூகங்களைக் காத்தல், காலநிலை மாற்றம் மற்றும் உயிர் பன்முகத்தன்மை என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளுடன் உலக உணவு நாள் கொண்டாடப்படுகிறது. 

2021 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் 'சிறந்த உற்பத்தி, சிறந்த ஊட்டச்சத்து, சிறந்த சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த வாழ்க்கை'

நாம் தேர்ந்தெடுக்கும் உணவும் அதை உட்கொள்ளும் முறையும்தான் நம்முடைய ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. வேளாண் உணவு அமைப்புகள் செயல்படும் விதமும் இதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வேளாண்மையில் இலக்குகளை அடைய, உணவு உற்பத்தி மற்றும் நுகர்வு முறையை மாற்ற, ஐ.நா. புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. நாம் அனைவரும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள், வணிக நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பசியால் வாடுபவர்களுக்காக உலகளாவிய விழிப்புணர்வையும் நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். அனைவரும் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

உலகளாவிய கரோனா தொற்றுநோயின் விளைவுகளை உலக நாடுகள் கையாளும் அதே காலத்தில் இரண்டாவது முறையாக உலக உணவு நாளை கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய நேரமிது என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது

ஐ.நா. வெளியிட்டுள்ள தகவலில், 2020ல் உலகில் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பசியை எதிர்கொண்டதாகவும் தற்போது உலக மக்கள்தொகையில் 40% அதாவது 300 கோடி மக்கள் ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2030க்குள் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை முடிவுக்குக் கொண்டுவர உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

மேலும், உலக உணவு நாளையொட்டி, அக்.14, 2021 அன்று ஐ.நா. வெளியிட்டுள்ள உலகளாவிய பசி குறியீட்டு பட்டியலில் மொத்தம் 116 நாடுகளில் இந்தியா 101 ஆவது இடத்தில் உள்ளது. இதில் சோமாலியா  கடைசியாக 116 ஆவது இடத்தில் உள்ளது. அதாவது உலக நாடுகளிலேயே சோமாலியாவில்தான் அதிக பசிக் கொடுமை அதிகமாக உள்ளது. இந்தியா உட்பட 31 நாடுகள் கடுமையான பசி பட்டியலில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக மக்களை பசிக்கொடுமையில் இருந்து ஒரேநாளில் அப்புறப்படுத்திவிட முடியாது. ஆனால், முடிந்தவரை ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க முடியும். முதலில் உணவை வீணாக்குவதைத் தவிருங்கள். உணவு மீந்துவிட்டால் அருகில் உள்ள ஏழைகளுக்கு அளிக்கலாம். விழாக்களில் மீந்துபோகும் உணவுகளை இன்று பல அமைப்புகள் மூலமாக ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

உலக உணவு நாளை ஒவ்வொருவரும் மற்றவர்க்கு உதவும் வகையில் கொண்டாட முடியும். உலகம் முழுவதும் பட்டினியால் உணவின்றித் தவிக்கும் கோடிக்கணக்கானவர்களில் ஒருவரின் பசியையாவது போக்க முடியும்.

உங்களுக்கு அருகிலேயே பசியால் தவிப்பவர்கள் இருக்கலாம். உலக உணவு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும்  நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உணவு அளித்து இந்நாளைக் கொண்டாடுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com