மாமியார்: 2-ம் தாய்

சின்னச் சின்ன சந்தோஷங்களை மாமியாருக்கு அளிப்பதன் மூலம் அவரிடம் மனமாற்றத்தை உண்டு பண்ணலாம்.
மாமியார்: 2-ம் தாய்

'என் மாமியார் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறார்கள். மாதத்துக்கு ஒருமுறை எங்களைப் பார்க்க வந்துவிடுவார்கள். நானும் அவர்கள் வருகைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன். நிஜமாகவே என்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார்கள்.' 

தொலைக்காட்சிகளில் மாமியார் - மருமகள் சண்டைகளைத்தான் பார்த்திருப்போம். ஆனால் பிரபல தொலைக்காட்சி நடிகையான ரச்சிதா தான் தன் மாமியாரைப் பற்றி இப்படிக் கூறிருக்கிறார்.

பாட்டி வைத்தியம் என்றொரு பிரபல யூடியூப் சேனல் உண்டு. இன்றைய தேதியில் அதற்கு 7.78 லட்சம் ஆதரவாளர்கள் உண்டு. ஒவ்வொரு விடியோவையும் பல ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். இதை நடத்துபவர்களும் மாமியார் - மருமகள் தான். 

மாமியார் என்பவர் இன்னொரு தாயாகும்போது இன்னொரு கடவுளாகப் பரிவு காட்டும்போது அங்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையே பூந்தோட்டமாகிவிடுகிறது.  

மாமியார் என்பவரை ஒரு பெண்ணால் இன்னொரு தாயாக, தாய்க்குச் சமநிலையில் வைத்துப் பார்க்க முடியுமா?

முதலில் பெண்ணுக்கு மாமியார் என்பவரைப் பற்றி ஒரு தவறான அபிப்ராயம் திருமணத்துக்கு முன்பே ஏற்பட்டு வருகிறது.

அவர் கண்டது கேட்டது எல்லாம் தவறான முன்னுதாரணங்களாக அமைந்துவிடுகின்றன. மாமியார் என்றாலே கொடுமைப்படுத்துபவர் என்கிற எண்ணம் மனதில் பதிந்துவிடுகிறது. மேலும் திருமணத்துக்கு முன்பு கணவரை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை விடவும் மாமியாரை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்கிற அறிவுரைகளே அவர் காதில் ஓயாது விழுகின்றன. இதனால் திருமணத்துக்கு முன்பே மாமியாருடன் போர்க்களத்தில் நிற்பது போன்ற ஒரு சூழலை எதிர்பார்த்து பல்வேறு கேடயங்களுடன் செல்கிறாள் பெண்.

மாமியார் பக்கம் வருவோம். மகனுக்குத் திருமணம் நிச்சயமானவுடன் மருமகளைப் பற்றிய எதிர்பார்ப்பு ஒரு மாமியாருக்கு எப்படி இருக்கிறது?

மகனுடன் அனுசரித்து நல்லபடியாகக் குடும்பம் நடத்த வேண்டும் என்பதே முதல் எதிர்பார்ப்பாக இருக்கும். தன்னால் திருத்த முடியாததை மருமகள் திருத்தினால் இன்னும் சிறப்பு என எண்ணுவார். 

ஆனால், திருமணத்துக்கு முன்பு மகனைத் தன்னிடமிருந்து மருமகள் பிரித்துவிடுவார் என்கிற அச்ச உணர்வு அவரிடம் ஏற்பட்டு விடுகிறது. உறவினர்களின் கேலிகளும் எச்சரிக்கைகளும் அதற்கு முக்கியக் காரணமாகி விடுகின்றன. தான் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளை தன் கையைவிட்டுச் சென்றுவிடுவானோ, தன்னை மனைவி முன்பு உதாசீனப்படுத்துவானோ என்கிற பயம் தானாக ஏற்பட்டு விடுகிறது. இதனால் தன்னை அறியாமலேயே அவரும் ஆயுதத்தைத் தயார் செய்துகொள்கிறார். நீயா நானா என்கிற போட்டிக்கு மனதளவில் திருமணத்துக்கு முன்பே இருவர் தரப்பும் தயாராகி விடுகிறது.

திருமணத்தின்போது ஏற்படும் சில சிக்கல்கள், பிரச்னைகளும் இருவரும் அருகருகே வாழ்வதற்கு முன்பு ஒரு பிரிவை, மனக்கசப்பை ஏற்படுத்தி விடுகிறது.

யோசித்துப் பாருங்கள், திருமணத்துக்கு முந்தைய மாமியார் - மருமகள் உரையாடலில் அவ்வளவு சிநேகம் தென்படும். நீ வாம்மா... நான் உனக்கு எல்லாம் சொல்லித் தரேன் என்று இன்னொரு மகளை எதிர்பார்த்தபடி தான் மாமியார் பேசுவார். திருமணம் ஆகப்போகும் பெண்ணும் போன் உரையாடலில் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்கவே முயற்சி செய்வார். ரொம்ப நடக்காதீங்கம்மா... நான் வந்து எல்லாம் பார்த்துக்கறேன். ஒழுங்கா மாத்திரை சாப்பிடுங்கம்மா என்று பதிலுக்கு இந்தப் பக்கமும் பாசம் பீறிடும்.

ஆனால் திருமண நாளிலேயே ஒருவரையொருவர் வெறுக்கும் அளவுக்குக் குடும்பப் பிரச்னைகள் இருவர் மனத்தையும் மாற்றிவிடும். முதல் இரவிலேயே மாமியாரைப் பற்றி புகார் சொன்ன பெண்களும் உண்டு. திருமண வேலைகள் கொடுத்த அலைச்சலில் மருமகளிடம் முகம் கொடுத்துப் பேச முடியாத நிலைமையும் மாமியாருக்கு ஏற்படும். அந்த போன் உரையாடலில் கொஞ்சிக்கொண்ட மாமியார் - மருமகளைத் தேடவேண்டிய நிலைமைக்கு எல்லாவற்றையும் காலம் மாற்றிவிடும்.

மாமியாரை அட்ஜஸ்ட் பண்ணிப் போ.... எதிர்த்துப் பேசாதே... என்கிற அறிவுரைகளைத்தான் பெண் கேட்டிருப்பார். அதைவிடவும் முக்கியம், மாமியாரைப் புரிந்துகொள்வது.

மாமியார் என்பவர் யார்?

30 வருடங்களுக்குத் திருமணம் ஆனவர். கூட்டுக் குடும்பத்தில் மாடாக உழைத்தவர். இன்று நாம் பேசும் பெண்ணிய உரிமைகள் எதையும் கேள்விப்படாதவர். காலையில் எழுந்து இரவில் தூங்கும்வரை கணவருக்கு மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள அனைவருக்காகவும் எல்லா பணிவிடைகளையும் செய்தவர். (தி கிரேட் இந்தியன் கிட்சன் காட்சிகளை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். இன்றைக்கே அப்படி எடுத்திருக்கிறார்கள் என்றால் 30 வருடங்களுக்கு முன்பு நிலைமை எப்படி இருக்கும்?). இன்று மாதத்துக்கு ஒருமுறை ஹோட்டலுக்குச் செல்கிறார்கள். என்னால் முடியவில்லை என்று மனைவி சொன்னால் போதும் ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கிவந்து விடுகிறார் கணவர். ஸ்விக்கி, ஸொமாட்டோ செயலிகளுக்கு வேலை தருகிறோம். பக்கெட் பிரியாணி ஆர்டர் செய்து இரண்டு வேளை வீட்டில் சமையல் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு காட்சியைக் கனவு காண முடியுமா? எப்போதாவது ஹோட்டலுக்குச் செல்வார்கள். மற்றபடி கடிகாரம் போல எந்நேரமும் உழைக்கும் இயந்திரங்களாகவே பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

முந்தைய தலைமுறையில் வாஷிங் மெஷின், மிக்ஸி, கேஸ் வசதிகள் கூட எல்லோருக்கும் கிடைத்திருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அப்படியே இருந்தாலும் விறகடுப்பில் சமைக்கவேண்டும், அம்மிக்கல்லில் சட்னி அரைக்க வேண்டும் என்று கட்டளை இடுகிற கணவர், மாமனார்களும் இருந்தார்கள். பிற்போக்கான சிந்தனை கொண்ட மனிதர்களுடன் வாழும் ஒரு பெண்ணுக்கு என்ன சுகம் இருந்துவிட முடியும்? அப்போது வருமானமும் குறைவாக இருந்தது. இஷ்டத்துக்குச் செலவிட முடியாது, அவுட்டிங் என்றால் அம்மா ஊருக்கு, திருமணங்களுக்குச் செல்வதாகத்தான் இருந்தது. 

2000-க்குப் பிறகு தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பித்தது. வாஷிங் மெஷின், மிக்ஸி, கேஸ் வசதிகள் எல்லா வீடுகளுக்கும் கிடைத்தன. வருமானங்கள் அதிகமாகின. பொழுதுபோக்குகளுக்கு தமிழனின் வாழ்க்கையில் இடமளிக்கப்பட்டது. பொருளாதார வசதி உயர உயர வாழ்க்கைத் தரமும் வாழ்க்கைமுறைகளும் மாறின. பெண்களுக்கு ஓரளவு ஓய்வு கிடைத்தது. சிலவேலைகளை இயந்திரங்கள் பார்த்துக்கொண்டன. ஆனாலும் காட்சிகள் ஒரேடியாக மாறவில்லை. ஒரு பெண் வீட்டில் இல்லாவிட்டால் ஆண்கள் தடுமாறும் அளவுக்கு அவர்களுடைய பங்களிப்பு இருந்தது.

இப்படிப்பட்ட வாழ்க்கையில் இருந்து வந்து மகனுக்குத் திருமணம் செய்துவைக்கிறார். வீட்டுக்குப் புதிய உறவு ஒன்று வருகிறது.

அம்மா அம்மா என்று தன் பின்னாலேயே வந்துகொண்டிருந்த குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனபிறகும் தன்னைச் சார்ந்திருந்தவன் திடீரென இன்னொரு பெண்ணிடம் ஒரேடியாக சாய்வதை எந்தப் பெண்ணாலும் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், மாமியார் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தபோது அப்படியெல்லாம் காட்சி மாறவில்லை. இன்று தன் மகன் ஒரேடியாக தன்னை விட்டு விலகுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனத்தில் பயம் ஏற்படுகிறது. தான் நம்பிய உயிர், தனக்கென்று இருந்த ஓர் உறவு தன்னைவிட்டு விலகிச் செல்வது ஏற்க முடியுமா? அப்படியில்லையென்றாலும் அப்படியொரு நினைப்பு அவரை வாட்டுகிறது.

மருமகளிடமிருந்து, மகனிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார். அவையெல்லாம் பொய்த்துப்போகும்போது கோபம், ஏமாற்றம் ஏற்படுகிறது. மாமியார் என்கிற அதிகாரத்தைக் கையில் எடுக்கிறார். 

வீட்டுக்குள் புதிதாக வரும் மருமகள், மாமியாரின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு புதிய வீட்டுக்குள் வரும் பெண்ணுக்கு இன்னொரு பெண்ணாக அந்த வீட்டுக்குள் இருந்து வழிநடத்தப்போகிறவர் மாமியார் தான். எவ்வளவு சண்டை போட்டாலும் உறவு விலகாது. நீர் அடித்து நீர் விலகுமா? காலம் முழுக்க வரும் உறவு. ஒரு வீட்டுக்குள் பெரியவர்கள் இருப்பது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு பலம். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வேலைக்குப் போகலாம், வெளியே செல்லலாம். அவர்களுடைய வாழ்வனுபவம் பல சந்தர்ப்பங்களில் கைகொடுக்கும்.

அம்மாவிடம் எந்தப் பெண்ணுக்காவது எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போகுமா? பொட்டு டிசைனில் கூட கருத்துவேறுபாடு வரும். உடைகளில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் அம்மாவும் பெண்ணும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். அதற்காக அம்மாவை வெறுப்போமா? அம்மாவைப் பற்றி மற்றவர்களிடம் தவறாகப் பேசுவோமா? அப்படித்தான் மாமியாரையும் மதிக்க வேண்டும்.

மாமியார் என்பவர் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் வாழ்ந்த வாழ்க்கையும் பழகிய மனிதர்களும் வேறு. பல விஷயங்களில் அவருக்கு இருக்கும் கருத்துகள் நிச்சயம் இந்தக் காலத் தலைமுறையினருக்குப் பிடிக்காமல் தான் போகும். நம் அம்மா எப்படி, அப்படித்தான் இவரும். 

மாமியாரை மதித்து, அவர் உணர்வுகளைப் புரிந்துகொண்டாலே பல பிரச்னைகள் தீர்ந்துவிடும். எல்லாமே தன் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என மாமியார் நினைப்பார். ஆரம்பத்தில் இருந்தே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் போகப்போக அவருடைய தவறுகளை, பழைய சிந்தனைகளைப் புரியவைக்க வேண்டும். சமையலில் ஆரம்பித்து பல வீட்டு வேலைகள், முக்கிய முடிவுகளிலும் இந்தப் போக்கைக் கடைப்பிடிக்கலாம். தன் மீது பாசம் காட்டும் ஓர் உயிரை யாருக்குத்தான் பிடிக்காது. தன் தவறுகளைப் பதமாகச் சொல்லி திருத்துபவரை யாருக்குத்தான் பிடிக்காது. அதனால் அம்மா என அழைக்க வேண்டாம். ஆனால் நினைக்கலாம் அல்லவா. அம்மா செய்யும் தவறுகளைப் பொறுத்துப் போவது போல மாமியாருக்கும் அந்தச் சலுகை தரலாம் அல்லவா. மேலும் அவருடைய நிறைவேறாத விருப்பங்களை நிறைவேற்றி தரும் மருமகளாக இருந்து பாருங்கள். அவர் உடுத்த ஆசைப்பட்ட உடை, செல்ல ஆசைப்பட்ட ஊர்கள், சாப்பிட நினைத்த உணவுகள் என கொஞ்சம் மாமியார் மீது அக்கறை செலுத்திப் பாருங்கள். 

உங்கள் அம்மா தன் புகுந்த வீட்டில் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்களோ அதே கஷ்டங்களை மாமியாரும் அனுபவித்திருப்பார். சிலர் இன்னும் அதிகமாக. சிலர் இன்னும் குறைவாக. அவ்வளவுதான் வித்தியாசங்கள் இருக்கும். பெண்களை இயந்திரங்களாகப் பாவிக்கும் சமூகத்திலிருந்து தான் நம் அம்மா மட்டுமல்ல மாமியாரும் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்டால் அவர்களுடன் சண்டை போடவோ அவர்களை ஒதுக்கவோ தோணாது. 

முக்கியமாக தனது மகன் தன்னை விட்டுச் சென்றுவிடுவானோ என்கிற பதற்றம் எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும். எங்கேயும் போகவில்லை, நீங்கள் எந்த இடத்திலிருந்து எனக்கு அவரைக் கொடுத்தீர்களோ அதே இடத்தில் தான் உள்ளார் என்கிற 96 பட வசனத்தை மாமியாருக்கு உணர்த்த வேண்டும். எப்படி? எல்லா முக்கிய முடிவுகளையும் மாமியாரிடமும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும். மாமியார் முன்பே, அத்தைகிட்ட கேட்டுட்டீங்களா எனக் கணவரிடம் கேட்டு அவருக்குத் தரும் முக்கியத்துவத்தை உணர வைக்கலாம். மாமியாரின் பிறந்த நாள், திருமண நாளை கேக் வெட்டி, ஹோட்டலுக்குச் சென்று கொண்டாடலாம். மாமியாரிடம் மனம் விட்டு பேச முயலலாம். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே உள்ள தயக்கங்கள், ஈகோக்கள், கோபங்கள் விலகும்.

சின்னச் சின்ன சந்தோஷங்களை மாமியாருக்கு அளிப்பதன் மூலம் அவரிடம் மனமாற்றத்தை உண்டு பண்ணலாம். அவருடைய சமையலைப் பாராட்டலாம், அவரிடமிருந்து சில உணவுகளைக் கற்றுக்கொண்டு அதை நாலு பேரிடம் தெரிவித்தால் எந்த மாமியாரின் முகம் தான் மலராது? மாமியாரின் கஷ்ட நஷ்டங்களைக் காது கொடுத்து கேட்கலாம். மாமியாரின் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளலாம். மருந்து, மாத்திரைகளைச் சரியான நேரத்துக்கு எடுத்துத் தரலாம். மாமியார் மிகவும் ஆசைப்பட்டு அணிய முடியாத உடைகளை வாங்கித் தரலாம்... இப்படி ஒரு ஜீவன் மீது அதுவும் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் இருப்பவர் மீது ஆயிரம் வழிகளில் அக்கறை செலுத்தலாம். தன் மீது வாஞ்சையாக இருக்கும் நல்ல உள்ளத்தை யார் தான் புறக்கணித்து விட முடியும்?

எத்தனையோ மருமகள்களுக்கு மாமியார்கள் கடவுளாகத் தெரிவது எப்படி? பல மாமியார் - மருமகள்கள் அம்மா - பெண்ணாக ஜோவியலாக இருப்பது எப்படி? மேலே சொன்ன காரணங்கள் தான். மாமியாரை அம்மா என்று அழைப்பது அவரவர் விருப்பம். ஆனால் இன்னொரு அம்மாவாகப் பாவிப்பதில் என்ன தடை இருக்க முடியும்? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com