சுஜித் சம்பவம்: பாடம் கற்றுக்கொண்டோமா?

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இறந்த சுஜித் வில்சனின் மரணம், மக்களை மட்டுமல்லாமல், பல துறைகளையும், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரையும் புரட்டிப் போட்டது.
மணப்பாறை அருகே நடுக்காட்டிப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நடந்தபோது..
மணப்பாறை அருகே நடுக்காட்டிப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நடந்தபோது..


சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இறந்த சுஜித் வில்சனின் மரணம், மக்களை மட்டுமல்லாமல், பல துறைகளையும் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரையும் கலக்கத்தில் ஆழ்த்தியது.

2019ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி திருச்சியை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில், இரண்டரை வயது சிறுவன் சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சுமார் 80 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார். சரியாக தீபாவளி சமயத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால், சுஜித் உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்று பிராத்தனையோடு காத்திருந்த பலரது மனங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன.

அதற்கடுத்தடுத்த நாள்கள் சுஜித் மரணம் தொடர்பாக பேசி, ஆலோசித்து, விவாதித்து மனிதர்களும், மனித மனங்களும் ஓய்ந்து போயின.

சுஜித் மரணத்தின் போது, தமிழகத்தில் இதுபோல ஆயிரக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் காவு வாங்க காத்திருந்ததும், இச்சம்பவங்களின் போது, குழந்தைகளை மீட்கத் தேவையான எந்த ஒரு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பமும் இதுவரை கண்டறியப்படாததும் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது.

அது மட்டுமா? ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பதும் சுஜித் மரணத்தின் போது உணரப்பட்டது.

அதன்பிறகு, பயன்பாட்டில் இல்லாத பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. மாவட்டந்தோறும் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் மூலம் பல ஆயிரம் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டன. அதேவேளையில், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் சார்பில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் சிறார்கள் சரியாக எங்கே சிக்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பமும், அவர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்யும் தொழில்நுட்பமும் கொள்முதல் செய்யப்பட்டன.

மேலும், தீயணைப்புத் துறையில் பணியாற்றும் வீரர்களுக்கு மண்டலவாரியாக, ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகள் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக அங்குச் சென்று, தாங்களே மீட்புப் பணியில் விரைந்து ஈடுபடவும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது முதற்கட்டமாக நேரிடும் தாமதத்தைத் தவிர்க்க உதவும். அதேவேளையில், ஆழ்துளை மீட்புக் கருவிகளை கொள்முதல் செய்யும் பணியையும் தொடங்கியது. 

இனி,

ஆழ்துளைக் கிணறுகள் அனுமதியின்றி தோண்டப்படக் கூடாது என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற கேள்வி இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

பொதுவாக ஒரு சம்பவம் நடக்கும் போது எழும் கேள்விகள் அனைத்துமே சுஜித் சம்பவத்தின் போதும் எழுந்தன. ஆனால், அந்த கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்தனவா என்பதுதான் இன்னும் கேள்வியாகவே உள்ளது.

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை, எந்தத் தாமதமுமின்றி, விரைவாக, மிகப் பத்திரமாக மீட்கும் ஒரு தொழில்நுட்பம் இதுவரை கிடைக்கப்பெற்றதா என்பது புரியாத புதிர்தான். 

சுஜித் சம்பவத்தின் போது, சிறுவனை மீட்க வந்த தனிநபர்கள் கூட, தங்களது தொழில்நுட்பத்தில் இருந்த சவால்களை தற்போது மாற்றியமைத்துள்ளனர். உதாரணமாக டேனியல்.. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளின் கைகள் மேலே இருந்தால், கயிற்றில் முடிச்சுப் போட்டு மீட்கும் திட்டத்தில், தற்போது சில மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய இறுக்கும் அமைப்பை உருவாக்கி, ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளின் கையை கயிற்றால் கட்டி மேலே தூக்குவது போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். 

தேடித்தேடி எதையும் செய்ய இயலாமல் போனால் கூட, சுஜித் சம்பவத்தின் போது, மீட்புப் பணியில் தாமாக உதவ முன்வந்த தனிநபர்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து அவர்களது ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்தாலே, ஆழ்துளைக் கிணறு சம்பவங்களை கையாள ஒரு சில வழிமுறைகள் கிடைத்திருக்கலாம். இதுவரை கிடைத்தும் கூட இருக்கலாம். அவற்றை உரிய முறையில் கண்டறிந்து, அங்கீகாரம் வழங்கி, உற்பத்தி செய்து, பயன்படுத்தும் முறைக்கு பயிற்சி பெற வேண்டியது சுஜித்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய அனைவரின் சார்பாகவும் வைக்கும் வேண்டுகோளாகும்.

இரண்டு ஆண்டுகள் முழுவதுமாகக் கடந்துவிட்டது.  இதுவரை ஏதேனும் மாறியிருக்கிறதா? தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதா? தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட்டதா? சுஜித்தின் ஆழமான நினைவுகளுக்குள் இந்தக் கேள்விகளும் மீள முடியாமல் விழுந்து சிக்கியுள்ளது. இந்தக் கேள்விகள் மீட்கப்படும்போது, ஆழ்துளை கிணறுகளில் விழும் சிறார்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் எழுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com