ஆசிரியர் என்பவர் யார்?

ஆசிரியர் என்பவர் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தெய்வத்திற்கு மேலாக வைத்து பூஜிக்க வேண்டிய ஒருவர். ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியும், எழுச்சியும் ஆசிரியர்கள் கைவசம் தான் உள்ளது. 
ஆசிரியர் என்பவர் யார்?

ஆசிரியர் என்பவர் ஒரு கையில் பிரம்பையும் மற்றொரு கையில் சாக்பீசையும் வைத்துக்கொண்டு பள்ளியில் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு தான் வாங்குகின்ற சம்பளத்திற்காக கடனுக்கு மார் அடிப்பதுபோல், அன்றைய சிலபஸ் என்னவென்று பார்த்து அதை மட்டும் மாணவர்களுக்கு கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொடுப்பவர் என்று தான் தற்கால மாணவர்களும் தற்போதைய சமுதாயமும் ஏன் நல்ல கல்வியறிவு உள்ள பெற்றோர்களும் நினைக்கின்றனர்.

ஆனால் உண்மை அதுவல்ல, ஆசு என்றால் பிழை, இரியர் என்றால் திருத்துபவர். எனவே பிழைகளை திருத்தும் ஒரு மகத்தானவர்தான் ஆசிரியர்.

ஆசிரியர் என்பவர் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தெய்வத்திற்கு மேலாக வைத்து பூஜிக்க வேண்டிய ஒருவர். ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியும், எழுச்சியும் ஆசிரியர்கள் கைவசம் தான் உள்ளது. 

ஆசிரியர்கள் நினைத்தால் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைக்க முடியும். ஒரு ஆசிரியர் நினைத்தால் பல நல்ல கருத்துகளை இளங்குருத்துகளான மாணவர்களின் மனதில் பதிய வைத்து அவர்களை ஒழுக்கத்திலும், அறிவிலும், ஆற்றலிலும் சிறந்த விளங்க வைத்து அவர்களை ஒரு நாட்டின் மகா மேதைகளாக உருவாக்க முடியும்.

அதே சமயம் ஆசிரியர்கள் அவர்தம் மாணவர்களுக்கு நல்ல பண்புகளையும் சிறந்த பயிற்சிகளையும் அளிக்கத் தவறி விட்டால் மாணவர்கள் அவர்களது வாழ்க்கையில் தடம்புரண்டு அவர்தம் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன் அற்றவர்களாக போய்விடுவார்கள். நீங்கள் அறிவீர்கள், சாணக்கியர் போன்ற ஒரு நல்லாசிரியர் ஒருவரால் அவர் தம் சீடர் சந்திரகுப்தர் ஒரு சாம்ராஜ்யத்தை கவிழ்த்து ஒரு புதிய சாம்ராஜ்யத்தை நிறுவ முடிந்தது. துரோணாச்சாரியார் போன்ற ஆற்றல் மிக்க ஒரு ஆசிரியரால் தான் அர்ஜுனனின் வில்வித்தையைக் உலகமும் அறியும் படி செய்ய முடிந்தது.

நம்மில் பலர் நினைக்கலாம் ஆசிரியர் என்பவர் வீட்டுக்கு வந்து ஊதியம் பெற்றுக் கொண்டு டியூசன் சொல்லிக் கொடுப்பவர் என்று. ஆனால், உண்மை அதுவல்ல பழ மரத்தை நாடிச்செல்லும் பறவைகள் போல மாணவர்கள்தான் ஆசிரியர்களை தேடி செல்ல வேண்டும். எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும், ஏன் சக்கரவர்த்தியின் மகனாக இருந்தாலும் கூட முன்பெல்லாம் குருகுலம் என்ற முறையில் குருவின் இருப்பிடத்திற்குச் சென்று அவரை நிழல் போல் தொடர்ந்து எவ்வளவு கஷ்டமான பயிற்சியாக இருந்தாலும் அதை திறம்பட கற்று வெற்றி பெறுவதுதான் ஒரு சிறந்த மாணவனின் கடமை.

நமது நாட்டில் மட்டுமல்ல மேலை நாடுகளில் கூட சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் போன்ற பல ஆசிரியர்களை பின்பற்றி சிறந்த மேதை ஆனவர்கள் பலருண்டு. ஆசிரியரை மதிக்கும் எந்த மாணவனும் வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை. ஒரு உதாரணம் பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் அவர்தம் குருகுல பயிற்சியை செம்மையாக முடித்து அவரவர் கற்ற வித்தைகளை எல்லாம் சக்கரவர்த்தி திருதராஷ்டிரர், பீஷ்மர் துரோணர், விதுரர் போன்ற பலரும் மற்றும் திரள் திரளாக மக்கள் கூடியிருந்த சபையில் வெளிப்படுத்தி காட்டி அவர்கள் பாராட்டு பெற வருகின்றார்கள். முதலில் வருகின்ற தருமன், பீமன் போன்றவர்கள் தங்களை அறிமுகப்படுத்திகின்ற தருணத்தில் அவர்கள் இருவரும் தங்களை சக்கரவர்த்தி பாண்டுவின் முதலாவது புதல்வன், இரண்டாவது புதல்வன் என்று தான் அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால், மூன்றாவதாக வரும் அர்ஜுனன் மட்டும் தான் பேராசிரியர் துரோணாச்சாரியாரின் சீடன் என்று பெருமிதத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். மகாபாரதத்தின் மிகச்சிறந்த வீரன் குருவை மதிக்கும் வில்லுக்கு விஜயன் அர்ஜுனன் தான் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த உண்மை. எனவே மாணவர்கள் அனைவரும் அவர்தம் ஆசிரியர்களை நன்கு மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல பெற்றோர்களும் ஆசிரியர்களை நன்கு மதித்து அவரை நம்பி அவர் தம் குழந்தைகளை முழு நம்பிக்கையோடு ஒப்படைக்க வேண்டும். அது போன்று ஆசிரிய பெருமக்களும் மாணவர்களின் நம்பிக்கைக்கும் பெற்றோர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டும். 

உங்களது முழு முயற்சிகளையும் உங்களுடைய மாணவர்களுக்காக அர்ப்பணம் செய்யுங்கள் உங்கள் முன் அமர்ந்து இருக்கின்ற மாணவர்கள்தான் வளமான எதிர்கால இந்தியாவை உருவாக்க போகிறவர்கள் என்ற உயர்ந்த லட்சியத்துடன் பாடுபடுங்கள் உங்கள் முன் இருக்கும் இளம் மொட்டுக்கள் இளம் குருத்துக்கள் பிற்காலத்தில், அறிவில் ஒரு அப்துல்கலாம், சேவையில் அன்னை தெரசா போலவும், அகிம்சை அண்ணல் காந்தி மகான் போலவோ, வீரத்தில் மாவீரன் அலெக்சாண்டர் போலவோ வரக்கூடும். மேலே குறிப்பிட்ட தலைசிறந்த நபர்கள் அனைவரும் ஏதோ ஒரு பள்ளியில் ஏதோ ஒரு மூலையில் ஒன்றுமறியாத மாணவர்களாக இருந்தவர்கள் தானே.

அவர்களது பிஞ்சு உள்ளங்களை உரமிட்டு மெருகூட்டி பிரகாசிக்கச் செய்த உங்களை போன்ற நல்ல ஆசிரியர்களின் பெரும் முயற்சியால் தானே அனைவராலும் புகழப்பட்டார். அதை மனதில் நிலை நிறுத்தி திறம்பட கொண்டு செயல்படுங்கள். மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு என்று எண்ண வேண்டாம். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

குழந்தைகள் நமது பெற்றோர்களை பார்த்து பல விஷயங்களை புரிந்து கொள்கின்றனர். பின்னர் ஆசிரியர்கள் மூலம் தான் ஆரம்பப் பள்ளியிலிருந்து பின்னர் பல்கலைக்கழகம் வரை மாணவர்கள் அவர்களை அறியாமலேயே ஓரளவிற்கு ஆசிரியர்களை பின்பற்றுகிறார்கள் என்பது உண்மை.

இது நமது குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் சீரிய கருத்து. எனவே ஆசிரியர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குமாறு வாழ வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் சமுதாய முன்னேற்றத்திற்காக அவர்தம் பொறுப்பையும் மாணவர்களை நல்ல பாதையில் வழி நடத்தி அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். நான் நன்கு அறிவேன், அரசாங்கத்தின் குழப்பமான பல சட்டதிட்டங்களால் ஆசிரியர்கள் சமீப காலத்தில் விரக்தியின் உச்சியில் இருக்கின்றனர். இருப்பினும் அந்த அரசாங்கத்தை உருவாக்குவது உங்களைப் போன்ற ஆசிரியர்கள் தான் அதை உணர்ந்து நல்ல மாணவர்களை தயார் செய்தால் நல்ல பிரஜைகளை உருவாக்கி ஒரு நல்ல சமுதாயம் உருவாகுவதுடன், நல்ல அரசாங்கத்தையும் உருவாக்கி ஒரு நாடே சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நினைவில் கொண்டு முழு முயற்சியுடன் மனம் தளராமல் செயல்படுங்கள்.

எந்த ஒரு நாடும் சிறக்க வேண்டும் என்றால் அங்குள்ள ஆசிரியர்களுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து அவர்களுக்கு நல்ல சம்பளமும் சலுகைகளும் கொடுத்து ஆசிரியர்கள் மனதில் கற்பிப்போம் என்ற எண்ணத்தைத் தவிர வேறு அன்றாட பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்வது ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை என்பதை நமது அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது நாட்டின் எல்லையில் நமது பாரத நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் எவ்வளவு முக்கியமோ அது போன்று நமது சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க ஆசிரியர்களின் பணி மிக இன்றியமையாதது, என்பதை அனைவரும் உணர்ந்து ஆசிரிய பெருமக்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் ஆசிரிய பெருமக்களுக்கு நல்ல வசதிகளை வழங்கி அவர்களின் பெருமைகளை புரிந்துகொள்ளவேண்டும். படிக்காத மேதை காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது கூறிய ஒரு அரிய கூற்று, ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் விதைநெல் போன்றது. விதை நெல்லுக்கு கணக்குப் பார்த்தால் விளைச்சல் இருக்காது. என்ன ஒரு உன்னதமான வார்த்தைகள். 

அதுபோன்று பள்ளி என்பது ஜாதி, மத, பேதம் அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்று. அங்கு இருக்க வேண்டியது.. கற்க வந்தோம், கற்பிக்க வந்தோம் என்ற இரண்டு ஜாதிகள் மட்டுமே. வேற எந்த சிந்தனைக்கும் இடம் இல்லை. பள்ளி என்பது ஒரு கிறிஸ்தவனுக்கு ஒரு பேராலயம், முஸ்லிம்களுக்கு ஒரு பள்ளிவாசல், இந்துக்களுக்கு ஒரு கோவில். ஆசிரியர் என்பவர் கிறிஸ்தவனுக்கு பைபிள் போல, முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆனை போல, இந்துக்களுக்கு பகவத் கீதையை போல மாணவர்களை முன் நின்று நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டிய ஒருவர்.

இதை மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து நடந்தால் நமது பாரதம், தான் இழந்த பழம் பெறும் பெருமையை மீட்டு, வரும் நூற்றாண்டில் மற்ற நாடுகளை எல்லாம் முன் நின்று வழிநடத்தி செல்லும் என்பது உறுதி.

வாழ்க ஆசிரியர் பணி, வாழ்க பாரதம்.

கட்டுரையாளர்: இதய சிகிச்சை நிபுணர்.பொள்ளாச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com