ஆசிரியர்களைப் போற்றுவோம்!

ஆசு + இரியர் என்பதே ஆசிரியர் என்றாயிற்று. ஆசு என்பதற்கு மாசு, குற்றம் என்றெல்லாம் தமிழில் பொருள் உண்டு. இந்த மாசை நீக்குவதும் குற்றம் களைவதும் அவர்தம் பண்பு. அதனாலேயே ஆசிரியர் என்று அழைக்கப்பட்டனர்.
ஆசிரியர்களைப் போற்றுவோம்!


ஆசு + இரியர் என்பதே ஆசிரியர் என்றாயிற்று. ஆசு என்பதற்கு மாசு, குற்றம் என்றெல்லாம் தமிழில் பொருள் உண்டு. இந்த மாசை நீக்குவதும் குற்றம் களைவதும் அவர்தம் பண்பு. அதனாலேயே அவர்கள் ஆசிரியர் என்று அழைக்கப்பட்டனர். 
 
ஆசிரியர்  – இந்த சொல்லுக்கே தனித்த அடையாளம், தனிப்பட்ட மரியாதை, தனிப்பட்ட பொருள் உண்டு. ஆம். ஆசு + இரியர் என்பதே ஆசிரியர் என்றாயிற்று. ஆசு என்பதற்கு மாசு, குற்றம் என்றெல்லாம் தமிழில் பொருள் உண்டு. இந்த மாசை நீக்குவதும் குற்றம் களைவதும் அவர்தம் பண்பு. அதனாலேயே அவர்கள் ஆசிரியர் என்று அழைக்கப்பட்டனர். நம் நாட்டில் பண்டுதொட்டு ஆசிரியர் நல்லவராதல் வேண்டும் என்றே விதி வகுத்தனர். ஆசிரியருக்கு இலக்கணம் கண்ட பவணந்தி முனிவர் போன்றோர் ஆசிரியருக்கான சிறப்புப் பண்புகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு குறிப்பிடப்படுவனவற்றுள் பொதுவான மனிதப் பண்புகள் மிகுந்து காணப்படுகின்றன. எழுத்தறிவித்தவனை இறைவன் என்போர் அப்படியிருக்க ஆசிரியரிடம் மனிதப் பண்பு சிறந்து அமைதல் இயல்பே எனக் கருதினர்.
 
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றார் மகாகவி பாரதி. எத்தனை புண்ணியங்கள் இருந்தாலும்கூட எழுத்தறிவிக்கும் செயலுக்கு நிகராக ஆகாது என்பதே பாரதியின் கருத்து ஆகும். அதுபோல 18ஆம் நூற்றாண்டில் தோன்றிய அற இலக்கியமான அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுவர சதகம் என்னும் நூல் ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை அழகு தமிழ் செய்யுளாக,
 
வேதாந்த சித்தாந்த வழிதெரிந் தாசார
விவரவிஞ் ஞான பூர்ண
வித்யா விசேஷசற் குணசத்ய சம்பன்ன
வீரவை ராக்கிய முக்கிய
சாதா ரணப்பிரிய யோக மார்க் காதிக்ய
சமதிநிற் டானுபவ ராய்ச்
சட்சமய நிலைமையும் பரமந்த்ர பரதந்த்ர
தருமமும் பரசமயமும்
நீதியி லுணர்ந்துதத் துவமார்க்க ராய்பிரம
நிலைகண்டு பாச மிலராய்
நித்தியா னந்தசை தன்யரா யாசையறு
நெறியுளோர் சற்கு ரவராம்
ஆதார மாயுயிர்க் குயிராகி யெவையுமா
மலவெம தருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரளப்பளீ சுர தேவனே
 
என்று எடுத்துக்காட்டியுள்ளார். இதன் பொருளாவது, (எவ்வகைப் பண்புகள் மாணவர்களுக்கு நன்கு கற்றுக் கொடுப்பதற்கு உதவும் செய்கைகளை ஆசிரியரிடம் இருந்து வெளிப்படுத்துவதற்குக் காரணமாக அமைகின்றனவோ அவையெல்லாம் ஆசிரியரின் சிறப்புப் பண்புகள் ஆகும்.)
 
உலகிற்கு ஆதரவாய், உயிர்களுக்கெல்லாம் உயிராகி, எவ்வகைப் பொருளும் ஆகிய தூய பொருள் எமது தேவனே! வேதாந்த சித்தாந்த நெறிகளை ஆராய்ந்தறிந்து ஒழுக்கத் தெளிவு, விஞ்ஞானத்தின் நிறைவு, கல்விச் சிறப்பு, நற்பண்பு, உண்மையாகிய செல்வம், உறுதியான வீரம், தலைமை, அருள், யோகநெறியிலே மேன்மை, சமாதி கூடுதலிற் பயிற்சி உடையவராய், அறுசமயத் தன்மையும், மேலான மந்திரம், மேலான தந்திரம் என்பவற்றின் நிலையையும், பிற மதங்களையும் நெறிப்படி அறிந்து உண்மை நெறியினராகி, தூய பொருளின் நிலையை அறிந்து பற்று நீங்கியவராய், உண்மை இன்ப அறிவுருவினராய், பற்றற்ற நெறியில் நிற்போர் நல்லாசிரியராவார்.
 
நன்மாணாக்கரியல்பு
 
வைதாலு மோர்கொடுமை செய்தாலு மோசீறி
மாறா திகழ்ந்தா லுமோ
மனதுசற் றாகிலும் கோணாது நாணாது
மாதா பிதா வெனக்கு
பொய்யாம னீயென்று கனிவொடும் பணிவிடை
புரிந்து பொரு ளுட லாவியும்
புனிதவென் றனதெனத் தத்தஞ்செய் திரவுபகல்
போற்றிமல ரடியில் வீழ்ந்து
மெய்யாக வேரவி யுபதேச மதுபெற
விரும்புவோர் சற் சீடராம்
வினைவேரறும்படி யவர்க்கருள்செய் திடுவதே
மிக்கதே சிகரது கடன்
ஐயா புரம்பொடி படச்செய்த செம்மலே
யண்ணலெம தருமை மதவே
ளனுதினமு மனதினை தருசதுர கிரிவள
ரறப்பளீசுர தேவனே.
 
முப்புரங்களை நீறுபடச் செய்த பெரியோனே தலைவனாகிய எமது தேவனே, திட்டினும், ஏதேனும் கொடுமை இழைத்தாலும், மாறாமல் சினந்து இழிவுபடுத்தினாலும் சிறிதும் மனங்கோணாமலும், வெட்கப்படாமலும், உண்மையாக எனக்கு அன்னையும், தந்தையும் நீயே என்று கூறி மனங்கனிந்து வழிபாடு செய்து என் பொருளும் உடலும் உயிரும் உன்னுடையவை என்றுகூறி கொடுத்து இரவும் பகலும் விடாமல் வணங்கி ஆசிரியரின் மலர் போன்ற திருவடிகளில் உண்மையாகவே வீழ்ந்து புகழ்ந்து கூறி அறிவுபெற விழைவோர் நல்ல மாணாக்கர் ஆவார். அவர்களுக்கு வினையின் வேர் கெடும்படி அருள்செய்வது சிறந்த ஆசிரியரது கடமையாகும்.

எவ்வாறு ஒரு ஆசிரியரின் இயல்பும் மாணவரின் குணநலனும் இருக்க வேண்டும் என்று அறப்பளீசுவர சதகம் கூறுகிறதோ அதுபோல ஒரு சிறந்த ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் தமிழுலகம் உள்ளவரை போற்றுதலுக்குரிய ஒருவர் மீனாட்சிசுந்தரம்.
 
இன்றைக்கு 150, 200 ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாடு ஆங்கிலேயர் வசம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது இன்று உள்ளதுபோல ஊர்தோறும் பள்ளிக்கூடம் என்பது அன்று அவ்வளவாகக் கிடையாது. எங்கோ ஒரு ஊரில் திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்திருப்பார் ஆசிரியர். அன்றைய நாளில் வசதி உள்ள பிள்ளைகள் பணமோ பொருளோ தந்து கல்வி பயில்வர். தொடக்கக் கல்வி முடித்து உயர் கல்வி வேண்டுமெனில் அதற்கென உள்ள ஆசிரியரிடம் பணம் கொடுத்துத்தான் கற்க வேண்டிய நிலை அன்று.

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிப்பை முடித்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் உயர்கல்வி கற்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அதற்குரிய பொருள் வசதி இல்லை. இந்த நிலையில்தான் அந்த ஊருக்கு பிச்சை எடுக்கும் சாமியார் ஒருவர் வந்தார்.
 
அவர் ஒரு அன்னக்காவடி சாமியார். அவர்தம் தோள்பட்டையில் உலக்கை போன்ற மரத்தடியினைச் சுமந்து செல்வார். அந்த மரத்தடியின் இரண்டு முனைகளிலும் இரும்புச் சங்கிலிகளைத் தொங்கவிட்டு, அதாவது உரிப்பானை வைத்திருப்பதுபோல அந்தச் சங்கிலின் அடியில் தட்டை இணைத்து இரண்டு புறமும் பானைகளை வைத்திருப்பார். அவற்றில் ஒன்றில் சோறும் இன்னொன்றில் அரிசியும் பெற்றுக்கொள்வார். அதனைத் தோளில் காவடிபோல் தூக்கிச் செல்வதால் இதற்கு அன்னக்காவடி என்று பெயர்.

அப்படிப்பட்ட அன்னக்காவடி சாமியார் மீனாட்சிசுந்தரத்தின் ஊருக்கு வருகிறார். அவர் மிகச்சிறந்த படிப்பாளி. குறிப்பாகத் தமிழ் இலக்கணங்களை நன்கு கற்றவர். அதிலும் தமிழில் அணி இலக்கணமான தண்டியலங்காரம் என்ற நூலுக்கு மிகச் சிறப்பாகப் பாடம் நடத்தக்கூடியவர். இவரை விட்டால் இதனை நடத்த வேறு யாருமில்லை என்பதே ஊரெங்கும் பேச்சு.
 
இதனை அறிந்த மீனாட்சிசுந்தரம் அன்னக்காவடி சாமியாரிடம் சென்று அவரை வணங்கி இலக்கணப் பாடம் சொல்வதில் தாங்கள் வல்லவர் என்பதை ஊரே சொல்கின்றது. ஐயா, தாங்கள் எனக்குப் பாடம் சொல்லித்தர வேண்டும் என்று வேண்டினார். அதற்கு அவரும் சரி, உனக்கு நான் பாடம் சொல்லித் தருகிறேன். எனக்கு எவ்வளவு பணம் தருவாய்? என்று கேட்டார். ஐயா, எங்கள் குடும்பம் வறுமையானது. என்னால் பணம் கொடுத்து பாடம் கேட்க முடியாதே என்றார். சாமியாரும் நான் ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுப்பேன். என்னாலும் பாடம் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்.
 
அவரிடம் எப்படியும் இலக்கணப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஈடுபாட்டின் காரணமாக இரண்டு நாட்கள் கழித்துச் சென்று, ஐயா! நான் தங்களுக்கு ஏதாவது பணிவிடை செய்யட்டுமா? என்று கேட்டார். நானோ சாதாரண பிச்சைக்காரன். எனக்குப் பணிவிடையா? என்று கேட்டுவிட்டு, சரி, இந்த அன்னக்காவடியை தூக்கிக்கொண்டு என் பின்னால் வா. நான் ஓய்வாக இருக்கும்போது உனக்குப் பாடம் சொல்லித் தருகிறேன் என்றார். உடனே மீனாட்சிசுந்தரம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அவருடைய அன்னக்காவடியைத் தூக்கிக்கொண்டு அவர் பின்னே செல்லத் தொடங்கினார்.
 
 “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற ஔவையார் வாக்கு அங்கு நடந்தேறியது.

இதனைக் கண்டு அவ்வூர் மக்கள் அதிசயித்து நின்றனர். இப்படி பிச்சைப் பாத்திரம் தூக்கி இலக்கணம் கற்ற பெரும்புலவர் யார் தெரியுமா? ஆங்கிலேயரால் ‘மகாமகோபாத்தியாய’ என்று பட்டம் வழங்கப்பெற்ற, நம்மவர்களால் ‘தமிழ்த்தாத்தா’ என்று அழைக்கப்பெறும் டாக்டர் உ.வே. சாமிநாதையரின் ஆசிரியர்தான் இவ்வாறு அன்னக்காவடி சாமியாரிடம் கல்வி பயின்றவர் மீனாட்சிசுந்தரம்.
 
ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றிய பெருமைக்குரியவர் ‘கலிகால கம்பர்’ என்று போற்றப்பட்டவர். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்னும் பெரும் புலவர் ஆவார்.
 
தான் கல்வி பயில பொருள் தடையாக இருந்ததுபோல் வேறு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொருள் தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தாலேயே உணவும் தங்கும் இடமும் அளித்து மாணவர்களுக்கு கல்வி வழங்கினார் பிள்ளை அவர்கள். அவ்வாறு கல்வி பயின்றவர்களுள் ஒருவர்தான் தமிழ்த்தாத்தா என்பதே வரலாற்று உண்மை.


 
இவ்வாறு காலந்தோறும் போற்றப்பெறும் ஆசிரியரைச் சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோம்.  
 
சாதாரண ஆசிரியராகத் தம் பணியினைத் தொடங்கி, முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும், பாரதத்தின் குடியரசுத் தலைவராகவும், தத்துவ அறிஞராகவும் விளங்கிய டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்த வேளையில் அவரைப் பற்றிய சிறு அறிமுகத்தைக் காண்போம்.
 
சர்வபள்ளி என்னும் ஊரில் 05.09.1888இல் வீராச்சாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப்படிப்பை சர்வபள்ளியிலும் திருத்தணியிலும் முடித்து, வேலூர் ஊரிசு கல்லூரியில் எப்.ஏ. தேர்ச்சி பெற்றார். மேலும், சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவப் பிரிவில் எம்.ஏ., பட்டமும், சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி. பட்டமும் பெற்றார்.
 
இவருக்குச் சிறு வயதிலேயே திருமணம் நிகழ்ந்தது. கல்லூரியில் பயின்ற காலத்திலிருந்தே இவருக்கு விவிலியம், சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள், தத்துவக் கருத்துக்கள் ஆகியவற்றில் நாட்டம் ஏற்பட்டது.
 
பேராசிரியராகச் சென்னை மாநிலக்கல்லூரி, மைசூர் மன்னர் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தருக்கவியல், தத்துவம் ஆகிய துறைகளில் பணியாற்றினார்.
 
ஆந்திரா பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும், இந்திய சாகித்திய அகாடமி தலைவராகவும் பொறுப்பேற்று அரும்பணியாற்றியவர். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கீழை நாடுகளின் சமய அறிவியல் துறையில் சிறப்புப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
 
தத்துவம் / சமயம் தொடர்பான கட்டுரைகள் எழுதியும், சொற்பொழிவுகள் ஆற்றியும் உலக அறிஞர்களிடையே பெரும் புகழ் பெற்றார். இவர் படைத்த பல கட்டுரைகள் மேல்நாட்டு இதழ்களில் வெளியாகி, உலக அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தன. அனைத்துலக தத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றினார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பல மாநாடுகளிலும் ஆய்வுக் கழகங்களிலும் உரையாற்றியுள்ளார்.
 
நாட்டு விடுதலைப் போரில் ஈடுபாட்டுடன் விளங்கிய திலகர், பண்டித மதன்மோகன் மாளவியா, இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தியடிகள் போன்ற தலைவர்களுக்குப் பக்கபலமாக விளங்கினார். இந்தியாவிற்கும் இரஷ்ய நாட்டிற்கும் தூதராக இருந்த காலத்தில் (1950–53) இரு நாடுகளுக்கும் நல்ல உறுதியான நட்புறவினை ஏற்படுத்தித் தந்தவர்.


1962இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தபோதும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, இரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் சென்று நல்லுறவை மேம்படுத்தினார்.
 
இவரது அரசியல் வாழ்க்கை வெற்று ஆரவாரமின்றி இருந்தது. கிரேக்க அறிஞர் பிளேட்டோ குறிப்பிட்ட ‘தத்துவ மன்னன்’ என்னும் கருத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியது.
 
வேதாந்த அறிவியல், இரவீந்திரநாத் தாகூரின் தத்துவம், உபநிடதத் தத்துவம், இந்தியத் தத்துவம், இந்து சமய வாழ்க்கை நோக்கு, சமயத்தில் மேலை கீழை நாடுகளின் பங்கு, கீழைநாட்டு சமயங்களும் மேலை நாட்டுக் கோட்பாடுகளும், இந்தியாவும் சீனாவும், கல்வி – அரசியல் – போர், தம்மபதம் போன்ற இவரின் படைப்புகள் இறவாப் புகழ்பெற்றவை ஆகும்.
 
இத்தகு பெரியோர் பெயரை நிலைநிறுத்தும் விதத்தில் அவரைப் போற்றுவதும், அவர் பெயரில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிப்பதும் போற்றுதலுக்குரியதாகும். ஆசிரியர்களைப் போற்றுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com