பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 1

ரமலான் மாதத்தையொட்டி, பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம் என்ற தலைப்பில் மணவை முஸ்தபா எழுதித் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் இங்கே  தொடராக...
பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 1

இஸ்லாமியர்களின் ரமலான் மாதத்துக்கும் நோன்புக்கும் தமிழர்களிடையே புதிதாக எவ்வித அறிமுகமும் தேவையில்லை. எல்லாரும் அறிந்தவையே.

மறைந்த எழுத்தாளர் மணவை முஸ்தபாவும் அப்படித்தான். தமிழ் வாசிப்புலகம் வெகுவாக அறிந்தவர் மணவை முஸ்தபா. தமிழில் கலைச் சொல் அகராதிகளைத் தொகுத்து உருவாக்கியவர், பெருமைமிக்க யுனெஸ்கோ இதழின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக இருந்து கருத்துக் கருவூலத் திறப்பாக விளங்கியவர்.

ரமலான் மாதத்தையொட்டி,  'பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்' என்ற தலைப்பில் மணவை முஸ்தபா எழுதித் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கட்டுரைகள்  தினமணி நாளிதழில் (1980-களின் பிற்பகுதியில்) அவர் எழுதி வெளியானவையே, தற்போது இன்றைய - புதிய வாசகர்களுக்காக தினமணி இணையதளத்தில் மீண்டும் பிரசுரிக்கப்படுகின்றன.

மணவை முஸ்தபாவின் விழைவின்படியே இவை யாவும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமானவை என்பதல்ல, அனைத்து மதத்தினருக்குமானவை, மதங்களைத்  தாண்டியவை எனலாம். தொடரின் முதல் பகுதியாகத் தொகுப்பின் முன்னுரையாக மணவை முஸ்தபா எழுதியவை இங்கே:

இஸ்லாமிய சமுதாய இளைய தலைமுறையினரிடையே இன்று புதியதோர்  விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய உணர்வோடு இஸ்லாமிய அறிவையும் பெருமளவில் பெற வேண்டும் என்ற வேட்கை எங்கும்  மிகுந்துள்ளது. காலத்தின் போக்குக்கும் அதற்கேற்ப அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கும் இஸ்லாம் கூறும் தீர்வு என்ன என்பதில் அறிவுலகம் பெருமளவு கருத்தூன்றி வருகிறது. அதிலும் குறிப்பாக, முஸ்லிமல்லாத பிற சமயச் சகோதரர்கள் இஸ்லாமியச் சிந்தனைகளை, தத்துவ நுட்பங்களை அறிந்து கொள்வதில் என்றுமில்லாத அளவுக்கு இப்போது ஆர்வம் மிக்கவர்களாக உள்ளதை என்னால் நன்கு உணர முடிகிறது. பத்திரிகையுலக நண்பர்கள் மட்டுமல்லாது, சாதாரணமானவர்களும் என்னிடம் அவ்வப்போது கேட்கும் கேள்விகளிலிருந்து இதை என்னால் நன்கு உணர முடிகிறது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை இத்தகைய விழிப்புணர்வை உண்டாக்கி வரும் பெருமையின் பெரும் பகுதி எனதருமை பாரதீய சகோதரர்களையே சாரும்.

காலத்தின் தேவைக்கும், மக்களின் புரிந்துணர்வுக்கும் ஏற்ப இஸ்லாமியத் தத்துவக் கோட்பாடுகளை, நெறிமுறைகளை எளிமைப்படுத்திக் கூற வேண்டும் என்பது என் நீண்ட நாளைய வேணவா. இஸ்லாத்தின் உண்மையான நெறிமுறைகளைப் பிற சமயத்தவர் சரிவர அறியாதது மட்டுமல்ல தவறாகப் புரிந்துகொண்டிருப்பதே இன்று எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்களாய் அமைந்துள்ளன என்பதையே கடந்த கால வரலாறும், அதன் போக்கில் நிகழ்ந்துவிட்ட சம்பவங்களும் எண்பித்துள்ளன. இதற்கு முஸ்லிம்களும் ஒருவகையில் பெருங் காரணமாவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம், இஸ்லாத்தை உரிய முறையில் பிற சமயத்தவர் மத்தியில் எடுத்துரைக்காதது நாம் செய்துவரும் தவறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்நிலையை ஓரளவு மாற்றக் கருதி, பெருமானார் (சல்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தினமணி நாளிதழுக்கு  “பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பியிருந்தேன். இரண்டு நாட்களுக்குப் பின் ‘தினமணி’ நாளிதழ் ஆசிரியர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் இரவு 9.00 மணிக்கு என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். நான் அனுப்பியிருந்த கட்டுரையை அப்போதுதான் படித்து முடித்ததாகவும் உடனே தொடர்பு கொண்டதாகவும் கூறியதோடு, தொடர்ந்து “உங்கள் கட்டுரையைப் படித்தபோது, எனக்கிருந்த பல ஐயப்பாடுகள் அகன்றுவிட்டன. ‘பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டக் கருத்துகள் இன்றைய உலகு முன் உரத்த குரலில் ஒலிக்கப்பட வேண்டியவை. இக்கருத்துகள் பரப்பப்படாததாலும், மற்ற சமயத்தவர்களால் அவை உரிய முறையில் உணரப்படாததாலும் - ஏன் உணர்த்தப்படாததாலுமே தேவையற்ற பல பிரச்சினைகள் இன்று நம்மிடையே தலைதூக்கிக் கூத்தாட்டம் போட நேர்ந்துள்ளது. நீங்கள் கட்டுரை மட்டும் எழுதியதாக நான் கருதவில்லை. இதன் மூலம் இன்றைய தேவையை நிறைவு செய்யும் அற்புதமான சமூக சேவையை செய்திருப்பதாகவே கருதி மகிழ்கிறேன். உடனே உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற உந்துதலாலேயே உங்களுக்குப் போன் செய்தேன்” எனத் தன் அறிவுபூர்வமான உள்ளுணர்வுகளை என்னோடு பகிர்ந்துகொண்டார்.

கட்டுரை அடுத்த இரண்டொரு நாளில் வெளியான பின் பல வாசகர்கள் கட்டுரையைப் பாராட்டியும் விமர்சித்தும் ‘தினமணி’ வாசகர் பகுதிக்கு கடிதங்கள் எழுதியிருந்தார்கள். அவற்றில் ஒரு கடிதம் இவ்வாறு இருந்தது.

“மணவை முஸ்தபாவின் “பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்” என்ற கட்டுரை அற்புதமாக எழுதப்பட்டிருந்தது. அக்கட்டுரையைப் படிப்பதற்கு முன் இஸ்லாம் மதம் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருந்தேன். இந்திய சமயங்களை அழிக்க வந்த சமயம் என்றே எண்ணியிருந்தேன். பிற மதங்களை மதிப்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை குர்ரானிலிருந்து எடுத்துக்காட்டுகள் தருவதன் மூலமாகவே சிறப்பாக விளக்கியிருந்தார். என்னுள் இருந்த வெறுப்பு விலகியது மட்டுமல்ல, இஸ்லாம் மதம் மீது மதிப்பும் ஏற்பட்டு விட்டது. இஸ்லாம் கொள்கை வழி நடப்பதன் மூலமே மத சமூக நிலைமை நிலைபெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது”.

பி. பெருமாள்,
சென்னை - 107

என்ற முகவரியிலிருந்து ஒரு வாசகர் எழுதியிருந்தார். அவ்வாசகரின் கடிதம் பல உண்மைகளை வெளிப்படுத்தியது. இஸ்லாத்தைப் பற்றி அறியும் ஆர்வம் இன்றைய சூழலில் பிற சமய அன்பர்களிடம் மிகுந்துள்ளது. அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இஸ்லாமிய உணர்வுகளையும் கருத்துகளையும் தத்துவ நுட்பங்களையும் எளிமையாக எடுத்து விளக்கினால் அவற்றைப் படிக்கவும் மனத்துள் இருத்திக்கொள்ளவும் அவை பற்றி ஆழச் சிந்திக்கவும் பல  உள்ளங்கள் தயாராக உள்ளன. இதன் மூலம் இஸ்லாத்தைச் சரிவர அறியாமலே அதன் மீது தவறான கண்ணோட்டம் செலுத்தி வருபவர்கள் தங்கள் தவறான உணர்வுகளைத் திருத்திக் கொள்ளவும் உண்மையான இஸ்லாமியக் கருத்துகளைப் பெற்றுச் சிந்திக்கவும் அருமையான வாய்ப்பு உருவாகிறது. இதனால், இஸ்லாத்தைப் பற்றிய, அம் மார்க்கத்தைப் பேணி வரும் முஸ்லிம்களைப் பற்றி, தவறான உணர்வுகள் முற்றாகத் துடைத் தெறியப்படும் இனிய வாய்ப்பும் சூழலும் ஏற்படுகிறது. பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் முஸ்லிம்களோடு மனநெருக்கம் கொள்ளவும் வழிபிறக்கிறது.

இந்த உள்ளுணர்வின் விளைவாகவே ஒவ்வொரு இஸ்லாமிய சிறப்புமிகு நாட்களின்போது, அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து “தினமணி” யில் எழுதிவந்தேன். வாசகர்களும் பேரார்வத்தோடு படித்துப் பாராட்டி, ஊக்கி வந்தார்கள். குறிப்பாக, அதன் ஆசிரியராக இருந்த திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் என் எழுத்தின் மீது காட்டிய மதிப்பும் மரியாதையும் ஆர்வமும் அரவணைப்பும் என்றுமே மறக்க முடியாதவை. அன்னாருக்கு நான் என்றென்றும் கடப்பாடுடையவன்.

‘தினமணி கட்டுரைகள் ஊட்டிய நல்லுணர்வின் தூண்டுதலால் ‘ஓம் சக்தி’ போன்ற இந்து சமயப் பிரச்சார ஏடுகளும் இஸ்லாம் பற்றி எழுதப் பணித்தன. இதை என் கட்டுரைகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.

இக்கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்த நண்பர்கள் பலரும் இவற்றைத் தொகுத்து நூலுருவில் வெளியிட வேண்டும் என அடிக்கடி வற்புறுத்தி வந்தார்கள். இதன் மூலம் பிற சமய அன்பர்களும் இஸ்லாமிய நண்பர்களும் கூட இஸ்லாத்தை ஓரளவாவது உரிய முறையில் உணர்ந்து தெளிய வாய்ப்பேற்பட வேண்டும் என்ற கருத்தின் செயல் வடிவே இந்நூல்.

இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்க வேண்டுமெனத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரை வேண்டினேன். என் மீது என்றுமே பேரன்புகொண்ட அப்பெருந்தகை நூலை முழுமையாகப் படித்து, அதில் தோய்ந்து என் உள்ளுணர்வுகளை அவர்கட்கேயுரிய முறையில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்கட்கு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஈ.சி.ஐ. பேராயர் டாக்டர் எம்.எஸ்றா சற்குணம் என் மீது அளப்பரிய அன்பு கொண்டவர். உரத்த சிந்தனையாளர். அஞ்சா நெஞ்சினர்; ‘யார் என்பதைவிட என்ன' என்பதில் அதிகம் கருத்தூன்றும் தகைமையாளர். மனிதநேயமிக்க அவர் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் அன்பும் பரிவும் பாசமும் கொண்டவர். நடுநிலை உணர்வோடு இந்நூலை முழுமையாகப் படித்து, தன் திறனாய்வுக் கருத்துகளால் நூலுக்கு அணி செய்துள்ளார். என் முயற்சிக்கு நல்லாசி  வழங்கிய ‘அருட் தந்தை’ அவர்கட்கு என் இதய நன்றி. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை ‘தினமணி’ இதழில் வெளி வந்தவைகளாகும். அன்றைய ‘தினமணி’ ஆசிரியரும் திறம்பட்ட அறிவியல் எழுத்தாளருமான திரு. மாலன் அவர்கள் இந் நூலுக்குச் சிறப்புரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். அனைத்துச் சமயங்களின் தத்துவக் கருத்துகள் சங்கமிக்கும் நடுநிலைமை நாளிதழாக ‘தினமணி’ தொடர்ந்து தொண்டாற்றும் என்ற நம்பிக்கை இவர் மூலம் மீண்டும் உறுதி செய்யப்படுவது மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. அவரது அன்புக்கு என் இதயம் நிறைந்த நன்றி. இந்நூலுக்கு மவ்லானா எம். அப்துல் வஹ்ஹாப், எம்.ஏ ; பி. டிஹெச் அவர்கள் அவர்கட்கே உரிய முறையில் ‘ஆய்வுரை’ ஒன்றை வழங்கியுள்ளார்கள். எமது நூலுக்கு மேலும் வலுவூட்டும் முறையில் அவர்தம் கருத்துகள் அமைந்துள்ளன. அவருக்கு நான் நன்றி கூறக்  கடமைப்பட்டுள்ளேன். இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் சிலவற்றை அவ்வப்போது வெளியிட்ட மாலை முரசு ஆசிரியருக்கும் அனைத்திந்திய வானொலி நிலையத்தாருக்கும் நான் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.

எனது முந்தைய நூல்களை ஏற்று ஆதரித்தது போன்ற இம்மறு பதிப்பையும் தமிழுலகம் ஆதரிக்கும் என்ற நம்பிக்கை என்றும் எனக்குண்டு.

அன்பன்
மணவை முஸ்தபா
நூலாசிரியன்

நாளை: பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com