என்றும் உள தமிழ்

மனிதன் தனது கருத்தை பேச்சாலும் எழுத்தாலும் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி மொழியாகும். மக்கள் வாழ்வில் பிறந்து மக்களால் வளர்க்கப்பட்டு மக்களின் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்தி வரும் அரிய கலை மொழியாகும்.
என்றும் உள தமிழ்

மனிதன் தனது கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி மொழியாகும். மக்கள் வாழ்வில் பிறந்து மக்களால் வளர்க்கப்பட்டு மக்களின் வாழ்வை நாகரிகமுடையதாக உயர்த்தி வரும் அரிய கலை மொழியாகும். ஐந்தறிவு கொண்ட விலங்குகளையும் ஆறறிவுப் பெற்ற மனித சமுதாயத்தையும் வேறுபடுத்துவது மொழி. மொழியில்லாத மனித சமுதாயத்தையோ சமுதாயமில்லாத மொழியையோ காண்பதரிது. நமது முன்னோர் விட்டுச் சென்ற அறிவுக் கருவூலங்களை நாம் கண்டு துய்ப்பதற்கும் நாம் பெற்றிருக்கிற அறிவுச் செல்வத்தை நமது வழித் தோன்றல்களுக்கு வழங்குவதற்கும் மொழி பெருந்துணையாக அமைந்துள்ளது.

இப்போதைய காலகட்டத்தில் உலகில் 5,500 மொழிகள் பேசப்படுகின்றன. அழியும் தருவாயில் 516 மொழிகள் உள்ளன. எம்மொழிக்கும் மூத்தமொழியாய் மொழிகளுக்குள் செம்மொழியாய் செம்மாந்திருக்கிற மொழி தமிழ்மொழி. பிறந்து சிறந்த மொழிகளுக்குள் சிறந்தே பிறந்த மொழி தமிழ் மொழி அதனால்தான் "என்றும்உள தென்தமிழ்" எனக் கம்பர் போற்றுகின்றார். முன்னைப் பழமைக்கும் பழமையாய் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் வாழ்வது தமிழ்மொழி. சங்க நூல்கள் அனைத்தும் பண்டைத் தமிழ் மக்களின் பண்பாடுகளைச் சித்தரிக்கும் பெட்டகமாகத் திகழ்கின்றன. 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்' எனத் தமிழின் மேன்மையை பிங்கல நிகண்டு குறிப்பிடுகின்றது. தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை, நீர்மை என்னும் பொருள்களைத் தருகின்றது. நீர்மை என்னும் சொல்லுக்குத் "தன்மை" எனவும் பொருள்படும். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வலிமைமிக்கது.

தமிழ் மக்கள் வீரத்தையும் ஈரத்தையும் இருகண்களாகப் போற்றினர். ஆகையால் சங்க இலக்கியங்கள் அகம், புறம் என இரு வகைப்பாட்டுக்குள் அடங்கும். இப்பனுவல்களில் காதல், பெருமிதம், நீதி முதலான உணர்ச்சிகள் முக்கிய இடம் வசிக்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் அறம், மனித மாண்பு, மனிதநேயம், விருந்தோமல், ஈகை போன்ற நற்பண்புகள் மிகுதியும் தமிழர்களிடத்தில் காணப்படுகிறது. இத்தகையச் சிறப்பினை உலகில் வேறெந்த மொழியிலும் காண இயலாது.

தமிழர்கள் நாடு என்ற எல்லைக் கோடு, இனப்பாகுபாடு போன்றவற்றை துறந்து மனிதத்தை மட்டும் நேசித்த மாண்பை கணியன் பூங்குன்றனார்

“யாதும் ஊரே யாவரும் கேளீர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா.."(புறம்-192)

என்று பாடுகிறார். வயதில் பெரியவர், சிறியவர் என்ற வேற்றுமை களைந்து அனைவரும் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

தமிழர்களின் உயரிய மனிதநேயச் சிந்தனையை கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி, 

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்

தமிழர் உண்டலும் இலரே..."(புறம் 182)

சாக்காடு, மூப்பு நீக்கும் அமிழ்தம் எனினும் தமிழர்கள் தனித்துண்ணும் இயல்பற்றவர்கள், பிறர் அஞ்சும் துன்பத்திற்கு தானும் அஞ்சும் இயல்பினர், புகழ் எனில் உயிரும் கொடுப்பவர், பழியெனில் உலகையே கொடுத்தாலும் பெறமாட்டார்கள். இத்தகைய சிறப்புக்குரியவர்கள் தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் பண்புடையவர்கள், ஆதலால் இவ்வுலகம் நிலைப் பெற்றிருக்கிறது என்று பாடுகிறார்.

வறுமையின் பிடியிலேயே வாழ்கிறவர்களின் வறுமையைப் போக்குவதை பொருள் பெற்றோர் தான் பெற்ற பெரும்பேறாகக் கருத வேண்டும்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி (குறள் -226)

என்று ஈகைக்கு வள்ளுவர் நெறி வகுக்கிறார். உயர்திணை, அஃறிணை. என்ற பாகுபாடு நீக்கி அனைத்து உயிர்களையும் நேசிக்கும் வழக்கம் இருந்தது. ஆகையால் சோழ மன்னன் சிபி சக்கரவர்த்தி ஒரு புறாவின் உயிர்வதை பொருட்டு வேடனுக்கு தன் தொடைச்சதையை அரிந்து கொடுப்பதற்கு இசைகிறான். இதனை இளங்கோவடிகள்,

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப

புள்ளுறு புன்கண் தீர்த்தோன். (சிலம்பு வழக்குரை காதை 51-52)

இளங்கோவடிகள் சிலம்பில் கண்ணகியின் கூற்றாகக் கூறுகிறார்.

தமிழர் பண்பாட்டில் ஈகையின் சிகரமாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் மாமன்னர்கள் அல்ல, மாறாக முல்லைக்கு தேர்தந்த பாரி, கூத்தர்களுக்கு தன் நாட்டு ஊர்களைப் பரிசாக வழங்கிய ஓரி, வேண்டுவார்க்கு வேண்டியதைத் தரும் காரி, மயிலுக்குப் போர்வை தந்த பேகன். புறநானூற்றுப் புலவர்கள் அறுவரால் பாடப்பெற்ற ஆய் அண்டிரன், சாதல் நீங்க அவ்வைக்கு நெல்லிக்கனி அளித்த அதியமான், வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதவாறு கொடுக்கும் நள்ளி ஆகிய கடையேழு வள்ளல்களை தமிழ் இலக்கியங்கள் புகழ்கிறது. இத்தைகய விழுமியங்கள் நிறைந்த பண்பாட்டை தன்னகத்தே கொண்ட தமிழ்மொழி பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி தற்கால இலக்கியங்கள். இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி திரைப்படம் போன்ற ஊடகங்களுக்கு ஊற்றாகவும், நாளும் புதிதாக வளர்ந்து வருகின்ற கணிணி, இணையம் ஆகியவற்றுக்கும் இடம் தந்து உலகின் மூத்த மொழியாக இருப்பினும் காலத்திற்கேற்ப நிதம் மாற்றம் பெற்றியிருங்கு நித்தமும் வளரும் மொழியாகத் தமிழ் மொழி திகழ்கிறது. காலத்தால் அழிக்கயியலாத விழுமியங்கள் கொண்ட தமிழர் பண்பாடும் தமிழ் மொழியும் என்றென்றும் நிலைத்திருக்கும்!

[கட்டுரையாளர் - உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மன்னர் சரபோசி கல்லூரி, (த) தஞ்சாவூர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com