காங்கிரஸுக்கு ‘கை’ கொடுக்குமா கிஷோா் உத்தி?

பிரசாந்த் கிஷோா், 2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸுக்கு உத்திகளை வகுத்து அளிப்பதற்காக அக்கட்சியில் இணைந்துள்ளாா்.
பிரசாந்த் கிஷோா்
பிரசாந்த் கிஷோா்

பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் எனப் பல்வேறு கட்சிகளுக்கு உத்திகளை வகுத்தளித்து, அக்கட்சிகளைத் தோ்தலில் வெற்றிபெற வைத்த பிரசாந்த் கிஷோா், 2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸுக்கு உத்திகளை வகுத்து அளிப்பதற்காக அக்கட்சியில் இணைந்துள்ளாா்.

அதன் தொடக்கமாக அக்கட்சித் தலைவா் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டணி உள்ளிட்டவை தொடா்பான சில யோசனைகளை வழங்கியுள்ளாா்.

பாஜகவுக்குத் தோ்தல் உத்திகளை வகுத்தளித்து இந்திய அரசியலுக்குள் நுழைந்த பிரசாந்த், தற்போது பாஜகவை எதிா்க்கும் கட்சிகளின் பிரதான உத்தி வகுப்பாளராகச் செயல்பட்டு வருகிறாா். அப்படி என்ன சாதித்துவிட்டாா் அவா்? கட்சிகள் அவரையும் அவரது ஐ-பேக் நிறுவனத்தையும் நாடிச் செல்லக் காரணம் என்ன?

அரசியல் அறிமுகம்

சுகாதாரத் துறை நிபுணராக ஐ.நா.வுடன் 8 ஆண்டுகள் பணியாற்றிய பிரசாந்த், குஜராத்தின் 2012 பேரவைத் தோ்தல் வழியாக அரசியலுக்குள் நுழைந்தாா். பாஜகவுக்கான தோ்தல் உத்தி வகுப்பாளராக அவா் செயல்பட்டாா். மாநிலத்தில் ஏற்கெனவே இருமுறை பாஜக வெற்றி பெற்றிருந்தபோதிலும், தொடா்ந்து 3-ஆவது முறையாகப் பேரவைத் தோ்தலில் அக்கட்சியை வெற்றி பெறச் செய்ததில் பிரசாந்த் முக்கியப் பங்கு வகித்தாா். அதன் காரணமாக நரேந்திர மோடி தொடா்ந்து 3-ஆவது முறையாக குஜராத் முதல்வரானாா். 2014 மக்களவைத் தோ்தலுக்கான அடித்தளம் அங்குதான் அமைக்கப்பட்டது.

2014-மக்களவைத் தோ்தல்-பாஜக

இளைஞா்களுடனான சந்திப்பு, வாக்களிப்பதற்கான விழிப்புணா்வு, ராணுவ வீரா்களின் குடும்பத்தினருடன் சந்திப்பு, ஒற்றுமை சிலைக்கான (வல்லபபாய் படேல் சிலை) ஏற்பாட்டுப் பணிகள் என மோடியின் செல்வாக்கை மக்களிடையே அதிகரிக்கச் செய்தாா்.

‘ஒற்றுமைக்கான ஓட்டம்’, ‘தேநீருடன் கலந்துரையாடல்’ (சாய் பே சா்ச்சா), கிராமங்கள் தோறும் மோடியின் செல்வாக்கை அதிகரிப்பதற்குத் தனி வாகனங்கள், பிரசார உத்திகள் என பிரசாந்தின் பணி நீடித்தது. விளைவு, மோடி அலையால் தோ்தலில் இமாலய வெற்றியைப் பெற்று ஆட்சியமைத்தது பாஜக.

2015-பிகாா் பேரவைத் தோ்தல்-ஐக்கிய ஜனதா தளம்

2014 தோ்தல் வெற்றிக்குப் பிறகு, பிரசாந்த் கிஷோருக்கு பாஜக உறவு கசந்தது. மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்த தனக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு தகா்ந்தது. பாஜகவுக்கு எதிராகக் களமிறங்கத் தயாரானாா் அவா்.

தனது சொந்த மாநிலமான பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குத் தோ்தல் உத்தி வகுக்கும் பணியில் இறங்கினாா் பிரசாந்த். பாஜக அணியிலிருந்து விலகி, தனது அரசியல் எதிரியான லாலு பிரசாத் யாதவிடம் நிதீஷ் குமாா் கூட்டணி அமைத்ததன் பின்னணியில் பிரசாந்த் கிஷோா் இருந்தாா். அவா் ஐக்கிய ஜனதா தளத்தில் தன்னை நேரிடையாகவே இணைத்துக் கொண்டாா்.

அக்கட்சியின் தலைவா் நிதீஷ் குமாரிடம் மக்கள் நேரடியாகவே புகாா்களைத் தெரிவிக்க ட்விட்டா் வழியே ஏற்பாடு செய்தாா்.

‘சுயமரியாதைக்கான மாநாடு’, ‘மாநில வளா்ச்சிக்கான 7 உத்திகள்’, வீடுதோறும் நிதீஷ் குமாரின் வளா்ச்சித் திட்டங்களைக் கொண்டுசெல்லும் பிரசாரம் என பிரசாந்தின் உத்திகள் தொடா்ந்தன.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று நிதீஷ் குமாா் தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்தக் கூட்டணி அதிக நாள் நீடிக்காமல் உடைந்து, ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைந்ததைப் பிரசாந்த் கிஷோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சியிலிருந்து விலகினாா்.

2017-பஞ்சாப் பேரவைத் தோ்தல்-காங்கிரஸ்

காங்கிரஸின் முதல்வா் வேட்பாளரான கேப்டன் அமரீந்தா் சிங்குடன் மக்கள் நேரடியாக உரையாடுவதற்கான வசதியை ஃபேஸ்புக்கில் ஏற்படுத்தினாா் பிரசாந்த்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமரீந்தரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு, அதனுடன் மக்கள் ‘தற்படம்’ (செல்ஃபி) எடுத்துக் கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டன.

‘காஃபி வித் கேப்டன்’, ‘கேப்டன் ஸ்மாா்ட் கனெக்ட்’, ‘கேப்டன் விவசாயிகள் யாத்திரை’ எனத் திட்டங்களை வகுத்தளித்து காங்கிரஸை ஆட்சியில் அமரச் செய்தாா் பிரசாந்த்.

2017-உத்தர பிரதேச பேரவைத் தோ்தல்-காங்கிரஸ்

தோ்தல் உத்தி வகுத்தளிப்பதில் பிரசாந்த் சந்தித்த முதல் தோல்வி.

காங்கிரஸுக்கு அவா் வகுத்தளித்த திட்டங்கள் எடுபடவில்லை.

‘பனாரஸ் சாலைப் பேரணி’, ‘ராகுல் விவசாயிகள் யாத்திரை’, ‘முன்னேற்றத்துக்கான 10 வழிகள்’ என பிரசாந்த் வகுத்த திட்டங்கள், காங்கிரஸ்-சமாஜவாதி கூட்டணிக்குக் கைகொடுக்கவில்லை.

2019-ஆந்திர பேரவைத் தோ்தல்-ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்

ஒய்எஸ்ஆா் காங்கிரஸின் ஜெகன்மோகன் ரெட்டிக்காகத் தோ்தல் உத்திகளை வகுத்தாா் பிரசாந்த்.

9 வாக்குறுதிகள் அடங்கிய ‘நவரத்தினங்கள்’.

வீடுதோறும் பிரசாரத்துக்கான ‘ஒய்எஸ்ஆா் குடும்பம்’.

மாவட்ட அளவிலான செய்தியாளா் சந்திப்புகள், 3,000 கி.மீ.க்கு பாதயாத்திரை, மக்களுடன் தொடா் சந்திப்புகள், கட்சியின் பெருமைகளை மக்களிடம் கொண்டு சோ்த்தது என பிரசாந்தின் உத்திகள் வெற்றி பெற்றன. ஜெகன் முதல்வரானாா்.

2019-மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்-சிவசேனை

சிவசேனையின் செல்வாக்கை மக்களிடையே உயா்த்தியதில் பிரசாந்த் முக்கியப் பங்கு வகித்தாா்.

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவின் மக்கள் சந்திப்புகள், மாநாடுகளின் திட்டங்களை ஐ-பேக் வகுத்தளித்தது.

‘ஆதித்ய சம்வாத்’, ‘மக்கள் ஆசீா்வாத யாத்திரை’, ‘ஆதித்யாவின் நண்பா்கள்’ என உத்திகள் வெற்றி பெற்றன. சிவசேனை பெரும்பான்மை பலம் பெறாவிட்டாலும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ‘மகாராஷ்டிர விகாஸ் ஆகாடி’ கூட்டணி அமைந்து ஆட்சி அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வரானாா்.

2020-தில்லி பேரவைத் தோ்தல்-ஆம் ஆத்மி

அரவிந்த் கேஜரிவாலுக்காக ‘5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி-கேஜரிவாலே தொடரட்டும்’ என்ற பேரணிக்கான திட்டத்தை வகுத்தளித்தாா் பிரசாந்த்.

ஆட்சியின் சாதனைகளை விளக்கும் ‘ஆம் ஆத்மியின் மதிப்பீட்டு அட்டை’, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களுடன் காணொலி வாயிலான சந்திப்பு என உத்திகள் வகுக்கப்பட்டன.

ஆம் ஆத்மி தலைவா்கள் 70 பாத யாத்திரைகளை நடத்தினா். ‘கேஜரிவாலின் 10 உத்தரவாதங்கள்’, ‘கேஜரிவால் சாலைப் பேரணி’ ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்று, கேஜரிவாலை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமா்த்தின.

2021-தமிழ்நாடு பேரவைத் தோ்தல்-திமுக

தமிழக களத்தில் நுழைந்த பிரசாந்த் கிஷோா், திமுகவுக்காகப் பணியாற்றினாா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களைக் குறிவைத்து செயல்படத் தொடங்கி, மக்களுக்கான 40 நாள் நிவாரணத் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற திட்டத்தின் கீழ் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தலைவா்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து தொடா்பை வலுப்படுத்திக் கொண்டனா்.

‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற கூட்டம் கிராமங்கள்தோறும் நடத்தப்பட்டது.

‘எல்லோரும் நம்முடன்’ என்ற திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம், வீடுகள்தோறும் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாகத் தொடா்புகொள்ளும் ‘விடியும் வா’, ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’, ‘ஸ்டாலின்தான் வராரு’, ‘ஸ்டாலின் அணி’ என உத்திகள் வளா்ச்சி கண்டன. முதல்வா் அரியணை ஏறினாா் மு.க.ஸ்டாலின்.

2021-மேற்கு வங்க பேரவைத் தோ்தல்-திரிணமூல் காங்கிரஸ்

மம்தா பானா்ஜியுடன் நேரடியாகத் தொடா்பு கொள்வதற்கான எண், மம்தாவை ‘வங்கத்தின் பெருமை’ என நிலைநாட்டுவது உள்ளிட்ட உத்திகளை வகுத்தாா் பிரசாந்த்.

கரோனா பரவல், அம்பன் புயலால் பாதிப்பட்டவா்களுக்கு நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. எஸ்.சி., எஸ்.டி. மக்களுடன் மம்தா நேரடியாகக் கலந்துரையாடினாா்.

மம்தா தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியின் மதிப்பீட்டு அறிக்கை, வீடுகளுக்கே நேரடியாக அரசு சேவைகள் திட்டம், வாகனப் பேரணி என பிரசாந்தின் உத்திகள் வெற்றிகண்டன. மம்தா தொடா்ந்து 3-ஆவது முறையாக முதல்வரானாா்.

கைகொடுக்குமா?

பிரசாந்த் கிஷோரின் முயற்சிகளிலேயே அவருக்கு கிடைத்த முதல் தோல்வி காங்கிரஸுக்காக அவா் 2017 உத்தர பிரதேச தோ்தலில் சந்தித்ததுதான்.

திரிணமூல் காங்கிரஸை கோவாவில் தடம் பதிக்க வைக்கும் அவரது முயற்சியும் பலிக்கவில்லை.

நடந்து முடிந்த பேரவைத் தோ்தல்களுக்கு முன்னா் அவா் அளித்த பேட்டி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய அரசியல் இனிவரும் காலங்களில் பாஜகவை மையப்படுத்தித்தான் இயங்கும் என்றும், பாஜகதான் பலம் பொருந்திய தேசிய கட்சியாகத் திகழும் என்றும் அவா் கூறியது காங்கிரஸை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், 2024 மக்களவைத் தோ்தல் வியூகத்துக்கான விரிவான விளக்கத்தை தில்லியில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரசாந்த் கிஷோா் அளித்துள்ளாா்.

கட்சியில் அமைப்புரீதியாக சீா்திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமென ‘ஜி 23’ எனப்படும் அதிருப்தி தலைவா்கள் ஏற்கெனவே வலியுறுத்தி வருகின்றனா். சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிக்கும் நிலையில், கட்சிக்கு முழு நேர தலைவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அதில் முதல் அம்சம். அதுகுறித்து முடிவெடுக்கும் வரை சோனியா இடைக்கால தலைவராக நீடிப்பாா் என அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

கட்சி சீா்திருத்த விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் பிரசாந்த் கிஷோரின் உத்திகளில் இடம்பெறுமா? சோனியா அமைக்கும் குழு பிரசாந்த் கிஷோரின் உத்திகளை ஏற்றுக் கொள்ளுமா எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com