இறை ஏற்கும் நிறை நோன்பு: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 31

பிறை பார்த்து நோற்பது நோன்பு. குறைகளையும் நோன்பை குறையின்றி நிறைவாய் நோற்க  இறையருள் வேண்டும்.
இறை ஏற்கும் நிறை நோன்பு: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் - 31

பிறை பார்த்து நோற்பது நோன்பு. குறைகளையும் நோன்பை குறையின்றி நிறைவாய் நோற்க  இறையருள் வேண்டும். நோற்பது நோன்பு. ஏற்பது இறைவன். ஏற்ற இறைவன் ஏற்ற கூலியை ஏற்றோர்க்கு எத்திவைப்பதில் எண்ணற்ற மகிழ்ச்சி ஏற்படுவது இம்மையில் மட்டுமல்ல; மறுமையிலும்  மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. 

நோன்பு நோற்பது குறித்து குர்ஆனின் 2-184 ஆவது வசனம் விரிவாய் விளக்குகிறது. "குறிப்பிட்ட நாள்களில்தான் நோன்பு நோற்பது கடமையாகும். ஆயினும் அந்நாள்களில்தான் உங்களில் எவரும்  நோயாளியாகவோ அல்லது பயணத்திலிருந்தாலோ நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமலான் (நோன்பு நோற்கும் மாதம்) அல்லாத மற்ற நாள்களில் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும்.  தவிர்க்க முடியாத காரணங்களினால் நோன்பு நோற்க இயலாதவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். நன்மையை நாடி பரிகாரத்திற்குரிய அளவினும் அதிகமாக தானம்  செய்தால் அது அவருக்கே நன்மை ஆயினும் பரிகாரத்தைவிட நோன்பின் நன்மைகளை நீங்கள் அறிந்தவர்களாயின் நோன்பு நோற்பது சிறந்தது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்''

பரிகாரத்தினும் உரிய காலத்தில் உரிய முறையில் இறையச்சதோடு நிறைவாய் நோற்கும் நோன்பே நிறைவான நன்மைகளை நிறையவே தரும். நோன்பு நோற்பது என்பது பசி தாகத்தை விட்டு விடுவது  மட்டும் அல்ல. அத்தனை இச்சைகளையும் ஐம்புலன்களையும் அடக்கி மெய் பொருள் காணும் மெஞ்ஞான பயிற்சி.

நோன்பு நோற்கையில் பின்னிரவின் பிற்பகுதியில் சஹர் உணவு உண்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சி. அச்சஹர் உணவு உண்ணுவது பற்றி உத்தம நபி (ஸல்) அவர்களின் உன்னத அறிவுரை. அரபு நாட்டில்  தர்வான் என்று புகழ்பெற்ற ஹாதிம் தாயின் மகன் அதீ (ரலி) ஹிஜ்ரி 9 அல்லது 10 ஆம் ஆண்டில் இஸ்லாத்தைத் தழுவினார். அவருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமலானின் நோன்பு காலத்தில்  இரவில் இருள்நீங்கி வைகறை வெளிச்சம் வரும் வரை உணவு உண்ணலாம் என்று விளக்கியது புகாரியில் பதிவாகியுள்ளது.

ஒரு பயணத்தின் பொழுது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு திறந்தார்கள். அப்பொழுது அவர்களுடன் பயணித்தவர்கள் நோன்பு திறக்கும் நேரத்தைக் கணித்தது எப்படி என்று வினவினர். விநய நபி  (ஸல்) அவர்கள் கிழக்கு திசையை காட்டி இப் பக்கத்திலிருந்து இரவு வருவதைப் பார்த்து நோன்பு திறக்கலாம் என்று கூறினார்கள். அறிவிப்பவர் -இப்னு அபி அல்பா (ரலி) நூல் -புகாரி.

கேட்டினைக் கேடுறுத்தும் கேடயமான நோன்பில் விளையும் புற நன்மைகள் பல உள. நோன்பில் உண்பது குறைவாக இருப்பதால் சீரண வேலையும் குறையும். மூளைக்கும் இதயத்திற்கும் இரத்த ஓட்டம்  அதிகரிக்கும். அமெரிக்காவில் தேசிய முதுமை ஆய்வு மைய அறிவியலறிஞர் மார்க் மாட்ஸன் நோன்பு முதுமை நோய்களைத் தடுக்கிறது என்று கூறுகிறார். நோன்பு கெட்ட கொழுப்புகளைக் கரைத்து  தேவையான கொழுப்பைத் தக்க வைத்து மாரடைப்பு பக்கவாத நோய்களைத் தடுக்கிறது.

பட்டினி கிடப்பதல்ல நோன்பின் நோக்கம். பாவ செயல்களைப் புறக்கணித்து அல்லாஹ்விற்கு ஆவன செயல்களை ஆவலுடன் ஆர்வத்துடன் அர்ப்பணிப்பு உணர்வோடு பொறுப்போடு பொன்றுந் துணையும்  நன்றே செய்து என்றும் நல்வாழ்வு வாழ வல்ல அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com