முடிவுதான் என்ன?

கடந்த மாதம் 5-ஆம் தேதி இந்திய - இலங்கை

கடந்த மாதம் 5-ஆம் தேதி இந்திய - இலங்கை அரசுகளின் வெளியுறவு, வேளாண் துறை அமைச்சர்களின் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்ததாகத் தெரியவில்லை. மாதம் ஒன்று கடந்து விட்டது. இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை மீட்பதற்கும், பறி
முதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளை திரும்பப் பெறுவதற்கும், மீனவர் பிரச்னை தொடர்பான விவகாரங்கள் குறித்துப் பேசித் தீர்ப்பதற்கும் கூட்டுப் பணிக் குழுவை ஏற்படுத்துவது என்று முடிவெடுத்தும்கூட, எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.
ஆண்டுக்கு 83 நாட்கள் தமிழக மீனவர்கள் பாக். ஜலசந்தியில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. இதனை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. தமிழக மீனவர்கள் பிரச்னைக்குரிய பாக். ஜலசந்திப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்வதும், அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது. தமிழக மீனவர்கள் எல்லையே தாண்டக்கூடாது என்று இலங்கை மீனவர்களும், அந்த நாட்டு அரசும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
ஆழ்கடலில் மீன் பிடிக்கப் போகும் மீனவர்களுக்கு அங்கே எது எல்லை என்று வரையறுக்கவோ, வழிகாட்டவோ எதுவும் இல்லை எனும்போது, தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே தங்களது எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதாக இலங்கை மீனவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை இல்லை. அதேநேரத்தில், பாக். ஜலசந்தியில் அதிகமான மீன்கள் கிடைப்பதால் அங்கே போய் நமது மீனவர்கள் மீன் பிடிக்க முற்படுகிறார்கள் என்பதிலும் உண்மை இருக்கிறது.
கடந்த 30 ஆண்டு காலமாக இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால் இலங்கை மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்ய முடியாமல் இருந்தனர். அதற்காக, இப்போது பாக். ஜலசந்தியில் உள்ள மீன்களை நாங்கள் மட்டுமேதான் பிடித்துக் கொள்வோம் என்கிற அவர்களது வீண் பிடிவாதத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது இலங்கை அரசு. நமது மீனவர்களின் சார்பில், அதேபோல வலுவான வாதத்தை முன்வைத்து நமது மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட இந்திய அரசின் அதிகாரிகளால் முடியவில்லை.
இந்திய - இலங்கையிடையேயான மீனவர் பிரச்னைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, நமது மீனவர்கள் பயன்படுத்தும் மடிவலை அல்லது இழுவை வலை என்று கூறப்படும் மீன்பிடி முறை. இதன்மூலம் கொத்துக் கொத்தாகத் தமிழக மீனவர்கள் மீன்களை எல்லாம் அள்ளிச் சென்று விடுகிறார்கள் என்பதுதான், இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு.
இந்த மீன்பிடி முறையைப் படிப்படியாகத்தான் கைவிட முடியும். அதற்குக் காரணம் நமது மீனவர்களின் வாழ்வாதாரம். அவர்களை பிரச்னைக்குரிய பாக். ஜலசந்தியை நாடாமல், ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தயார்படுத்துவது என்கிற திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறது. கடந்த மாதம் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்திலும்கூட இது குறித்துப் பேசப்பட்டது. இந்திய மீனவர்களுக்குரிய புதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை ஆலோசித்து வருவதாக மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது. ஆனால், ஆலோசனை செயல் வடிவம் பெறுவதில் தாமதம் தொடர்வதுதான் பிரச்னை.
கடந்த மாதம் நடந்த இந்திய - இலங்கை அரசுகளின் கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டுப்பணிக் குழு கூடுவது, அமைச்சர்கள் குழு ஆறு மாதத்திற்கு ஒருமுறை கூடுவது, மீனவர்களின் சங்கங்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கூடுவது என்றெல்லாம் முடிவெடுக்கப்பட்டது. அதெல்லாம் சரி, எல்லை தாண்டுகிற இந்திய மீனவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அவர்களை உடனடியாக விசாரித்து விடுதலை செய்ய, அவர்களின் படகுகளை விடுவிக்க என்ன வழிமுறைகள் என்பது குறித்து முடிவு எட்டப்பட்டதா என்றால் இல்லை.
இரண்டு நாடுகளும் இணைந்து பாக். ஜலசந்தியில் கண்காணிப்பு நடத்துவது என்கிற இலங்கை அரசின் ஆலோசனையை பரிசீலிப்பதாக இந்திய அரசு கூறியிருக்கிறது. உடனடியாக மாற்று வழி இல்லாத நிலையில் நமது மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் கூட்டுக் கண்காணிப்பில் இந்தியக் கடற்கரைப் படையினர் மென்மையாக நடந்து கொள்வதை இலங்கைத் தரப்பு ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.
இன்றைய நிலையில் தமிழக மீனவர்களின் 105 இழுவை வலைப் படகுகள் (ட்ராலர்ஸ்) இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு இழுவைப் படகின் விலை குறைந்தது ரூ.25 லட்சம் எனும்போது, பல கோடி ரூபாய் முடங்கிக் கிடக்கிறது. மீன்பிடிக்க முடியாமல் நமது மீனவர்கள் தவிக்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உடனடித் தீர்வு காணவும், அந்த இழுவைப் படகுகளை மீட்கவும் இந்திய அரசு ஏன் தாமதப்
படுத்துகிறது என்று தெரியவில்லை.
நமது தமிழக மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு மாற்றுவதற்கும், பாக். ஜலசந்தியை நாடாமல் இருப்பதற்கும் படகுகள் நவீனமயமாக்கப்பட வேண்டும். அதற்குப் பெரும் பணம் தேவைப்படுகிறது. இதை நிறைவேற்ற மூன்று ஆண்டு இடைவெளியில் ரூ.9,750 மில்லியன் தேவைப்படும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்குப் புள்ளிவிவரங்களுடன் கோரிக்கை வைத்திருக்கிறது. அது குறித்தும் இந்திய அரசு எதுவுமே நடவடிக்கை எடுக்காமல் கோரிக்கையைக் கிடப்பில் போட்டிருக்கிறது.
இந்த நிலையில், பாக். ஜலசந்தியுள் நுழையும் தமிழக மீனவர்களின் படகுகளுக்கு ஏழு கோடி ரூபாய் அபராதம் விதிக்க இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. நமது மீனவர்களின் வருங்காலம் தான் என்ன? இதற்கு என்னதான் முடிவு?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com