சரித்திரம் தொடர்கிறது...

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே பெரிய திருப்பங்கள் எதையும் ஏற்படுத்திவிடவில்லை. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்ததுபோல எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையும், 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருப்பதும் எதிர்பார்த்ததுதான். 
1985-இல் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சியமைத்ததற்குப் பிறகு வேறு எந்த ஒரு முதல்வரோ, கட்சியோ மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஆட்சி அமைத்ததில்லை. பாஜகவும் சரி, கடந்த 2008-இல் எதிர்கொண்டதுபோலவே தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்பதும்கூட கர்நாடக தேர்தல் வரலாற்றில் மாற்றமில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்குமே தேர்தல் முடிவுகள் ஒரு வகையில் ஏமாற்றம்தான். முதலில் 118 தொகுதிகளில் முன்னணியில் இருந்த பாஜக இறுதிச் சுற்றில் தனிப்பெரும்பான்மைக்கு எட்டு இடங்கள் குறைவாக 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அந்தக் கட்சி எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஏமாற்றம். பாஜக 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்றும், தனது ஆதரவுடன்தான் பாஜக ஆட்சி அமைத்தாக வேண்டும் என்றும் எதிர்பார்த்த மதச்சார்பற்ற ஜனதா தளம் இப்போது காங்கிரஸýடன் கைகோத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் 122 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது வெறும் 78 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. காங்கிரஸின் நலத்திட்டங்களும் சரி, பாஜகவின் வாக்கு வங்கியை உடைக்க திட்டமிட்டு லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்த ராஜதந்திரமும் சரி, வாக்காளர்கள் மத்தியில் எடுபடவில்லை.
வாக்கு விகிதத்தைப் பொருத்தவரை இந்தத் தேர்தலில் ஒரு வேடிக்கை நிகழ்ந்திருக்கிறது. பாஜகவைவிட இரண்டு சதவீதம் அதிகம் வாக்குகள் பெற்றும்கூட குறைந்த இடங்களிலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய சோகம். அதற்குக் காரணம், கடலோர, வட கர்நாடகப் பகுதிகளில் பாஜக தனிப்பெரும் கட்சியாக காட்சியளித்ததும், காங்கிரஸ் எந்த ஒரு பகுதியிலும் தனி செல்வாக்கு பெறாமல் இருந்ததும்தான். 2013-இல் 32 சதவீத வாக்குகள் பெற்றிருந்த பாஜகவுக்கு தற்போது மேலும் நான்கு சதவீதம் அதிகரித்திருப்பதும்கூட பாஜகவின் வெற்றிக்குக் காரணம்.
கர்நாடகாவில் பாஜக 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பதற்கு மூன்று முக்கியக் காரணங்கள். கடந்த தேர்தலில் பாஜகவிலிருந்து பிரிந்துவிட்டிருந்த எடியூரப்பாவும், ரெட்டி சகோதரர்களும் மீண்டும் கட்சியில் இணைந்ததும், லிங்காயத்துகள் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என்று முனைப்பாக இருந்ததும் முதல் காரணம். பிரதமர் நரேந்திர மோடி முதலில் திட்டமிட்ட 15 பேரணிகள் மட்டுமல்லாமல், மொத்தம் 21 பேரணிகளில் கர்நாடகம் முழுவதிலும் கலந்துகொண்டது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரது பிரசாரத்துக்கு ராகுல் காந்தியாலோ, சித்தராமையாவாலோ ஈடுகொடுக்க முடியவில்லை என்பதையே பிரதமர் நரேந்திர மோடியின் பேரணிகளுக்குக் கூடிய கூட்டம் எடுத்துரைத்தது. மூன்றாவது காரணம், தேர்தலில் சரியான வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து வாக்குகள் சிதறாமல் கட்சியை வெற்றி பெறச் செய்வது எப்படி என்கிற வித்தையில் பாஜக தலைவர் அமித் ஷா பெற்றிருக்கும் தனித்தேர்ச்சி.
தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சிக்கு அழைப்பதா, வேண்டாமா என்பது ஆளுநருக்கு தரப்பட்டிருக்கும் உரிமை. 1996-இல் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்தபோது வெறும் 161 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தும் ஆட்சி அமைக்கும் முதல் வாய்ப்பு பாஜகவின் வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது. 2008-இல் 200 இடங்களில் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தும் ராஜஸ்தானில் காங்கிரஸýக்குதான் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2014-இல் 288 இடங்களில் 122 இடங்களை மட்டுமே பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கிய பாஜகவுக்கு மகாராஷ்டிரத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கு நேர்மாறாக 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் 70 இடங்களில் 32 இடங்களை பெற்றிருந்தும் பாஜக தில்லியில் ஆட்சியமைக்க அழைக்கப்படவில்லை. 2017-இல் கோவாவிலும், மணிப்பூரிலும், 2018-இல் மேகாலயாவிலும் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றும்கூட பாஜக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள்தான் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டன. அதனால், இப்போது பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருப்பதில் வியப்பில்லை. முதல்வராகப் பொறுப்பேற்ற 15 நாட்
களுக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். காங்கிரஸிலிருந்தும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்தும் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலோ அல்லது தங்கள் பதவியை துறந்தோ அவருக்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உதவுவார்கள் என்று நம்பலாம்.
கர்நாடகாவைப் பொருத்தவரை ஆட்சியிலிருக்கும் கட்சி எப்படி அடுத்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காதோ அதேபோல 1978-லிருந்து 2008 வரை மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதில்லை என்கிற வழக்கமும் தொடர்ந்து வந்தது. 2013-இல் இந்த வழக்கத்தை மீறி, மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கர்நாடகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மத்திய ஆட்சியை இழக்க நேரிட்டது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com