சபரிமலை அரசியல்! 

இரண்டு மாதகால மண்டல பூஜைக்காக, கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. 

இரண்டு மாதகால மண்டல பூஜைக்காக, கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. 
ஆயிரக்கணக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஐயப்பன்மார்கள் சபரிமலை தரிசனத்துக்காக வந்த வண்ணம் இருக்கிறார்கள். கேரள மாநிலத்தைத் தாக்கிய பெருமழையின் பாதிப்புகளிலிருந்து சபரிமலையும் சபரிமலைக்குச் செல்லும் பாதைகளும் இன்னும் கூட முழுமையாகச் சரி செய்யப்படாத நிலையில், மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்குத் திரண்டுவரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய சோதனை.
சபரிமலையின் சம்பிரதாய நடைமுறைகளைப் புறக்கணித்துவிட்டு, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் புரிதல் இல்லாத தீர்ப்பு ஒருபுறம், சபரிமலையில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களைத் தகர்த்து அதையும் ஒரு சராசரி கோயிலாக மாற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் கேரள அரசும் பெண்ணுரிமைவாதிகளும் மற்றொரு புறம். இப்படி ஐயப்ப பக்தர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளைச் சொல்லி மாளாது.
பக்தர்களுக்குப் போதிய கழிப்பறை வசதி இல்லை. ஏற்படுத்தப்பட்டிருக்கும் கழிவறைகளிலும் தண்ணீர் வசதி தரப்படவில்லை. பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் காவலர்களுக்குக் கூட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், பக்தர்கள் பம்பை நதியைப் பயன்படுத்துவதால், மனிதக் கழிவுகளுடன் அந்த நதி மாசடைந்து விடுகிறது. இது மோசமான சுகாதாரச் சீர்கேடுகளை விளைவிக்கும் என்று கேரள மனித உரிமை ஆணையம் கூறியிருப்பது எதார்த்த உண்மை. இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு திருவிதாங்கூர் தேவஸம் போர்டு ஆணையர், மாநிலக் காவல்துறைத் தலைவர், மாவட்ட நிர்வாகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியதைப்போல, கேரள சட்டப்பேரவையும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தால், மத்திய அரசு அவசரச் சட்டத்தின் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குத் தீர்வு கண்டிருக்க முடியும். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி அரசு தயாராக இல்லை. சபரிமலை பிரச்னையை அரசியலாக்கி, ஆதாயம் தேடும் முயற்சியில் ஆளும் இடதுசாரி முன்னணி அரசு ஈடுபட்டிருக்கிறது. 
கேரள அரசு எதிர்பார்த்தது போல, சபரிமலைக் கோயில் திறந்து பக்தர்கள் வரத்தொடங்கும்போது, எதிர்ப்பு அடங்கிவிடவில்லை. மாறாக, சம்பிரதாயச் சடங்குகளில் நீதிமன்றமோ, அரசோ தலையிடுவதைத் தடுத்தே தீரவேண்டும் என்று ஐயப்ப பக்தர்களும் பொதுமக்களும் இந்தப் பிரச்னையில் முனைப்புடன் களமிறங்கி இருக்கின்றனர். இந்துக்கள் மட்டுமன்றி, கேரளத்திலுள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளும் சபரிமலை பிரச்னையில் ஆதரவு தெரிவித்திருப்பதுதான், போராட்டம் தொய்வடையாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்.
இப்போது வேறு வழியில்லாமல், சபரிமலை பிரச்னையை திருவிதாங்கூர் தேவஸம் போர்டே கையாள அனுமதித்திருக்கிறது கேரள அரசு. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் திருவிதாங்கூர் தேவஸம் போர்டு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருக்கிறது. பெண்களுக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்பதை அதற்குக் காரணம் காட்டியிருக்கிறது. இந்த வாதத்தை வழக்கு விசாரனையின்போதே தேவஸம் போர்டு வைத்திருக்கலாம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலைக்குச் செல்ல சில பெண்ணுரிமைவாதிகள் தயாரானார்கள். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஏதோ சுற்றுலாத் தலத்துக்குப் போவதுபோல, கைப்பையுடன் சபரிமலைக்குச் சென்று தங்களது பெண்ணுரிமையை நிலைநாட்ட முற்பட்ட அந்தப் பெண்கள், விரதமிருந்து இருமுடியுடன் பதினெட்டாம் படியில் ஏறவேண்டும் என்கிற அடிப்படை விதிமுறையைக் கூடப் பின்பற்றத் தயாராக இல்லை. திருப்தி தேசாயும், ரெஹானா பாத்திமாவும் சபரிமலை பிரச்னையின் மூலம் விளம்பரம் தேட முற்படுகிறார்களே தவிர, பெண்ணுரிமை அல்ல அவர்களது இலக்கு.
முறையாக விரதம் இருந்து, இருமுடி கட்டி எல்லா ஆண்டும் தரிசனத்துக்கு வருவதுபோல இந்த ஆண்டும் தரிசனத்துக்கு வந்த இந்து ஐக்கிய வேதியின் தலைவர் சசிகலா டீச்சர் கைது செய்யப்பட்டிருக்கிறார். விளம்பரத்துக்காக சம்பிரதாய விதிமுறைகளை மீறி சபரிமலைக்குச் செல்ல முற்பட்ட திருப்தி தேசாய், ரெஹானா பாத்திமா உள்ளிட்டோரைத் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பிய கேரள காவல்துறை, முறையாக விரதம் இருந்து சபரிமலை தீர்த்த யாத்திரைக்குச் செல்ல முற்பட்ட சசிகலா டீச்சரை தடுத்தது மட்டுமல்லாமல், கைதும் செய்தது கேரளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. இதனால், பாஜக வலுவடைய வேண்டும் என்பது கூட இடதுசாரி அரசின் நோக்கமாக இருக்குமோ என்று ஐயப்படத் தோன்றுகிறது.
சபரிமலை பிரச்னையால், கேரளத்தில் பாஜக பலம் பெற்றால், காங்கிரஸ் கட்சி பலவீனப்படும் என்றும், அது தேர்தலில் தங்களுக்கு சாதகமாக மாறும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் கருதுவதாகத் தெரிகிறது. இத்தனை நாளும் எதிர்ப்புகளை வலுக்க விட்டதன் பின்னணியும், இப்போது ஒதுங்கிக் கொண்டதன் ராஜதந்திரமும் அதுதான் போலிக்கிறது. முதல்வர் பினராயி விஜயனின் திட்டம் பலிக்குமா இல்லையா என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com