ஆறுதலும் ஆதங்கமும்!

மத்திய நிதியமைச்சகத்தின்

மத்திய நிதியமைச்சகத்தின் நேரடி வரி விதிப்புப் பிரிவு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 65% அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் நேரடி வரிகளின் பங்கு 52% அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 5.98% அளவுக்கு வரி வருவாய் காணப்படுவது எதிர்பார்த்ததைவிட அதிக முன்னேற்றம். 

கடந்த நான்கு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 80%-துக்கும் அதிகமாகி இருக்கிறது என்கிறது அந்தப் புள்ளிவிவரம். 2013-14-இல் 3.79 கோடியாக இருந்த வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை, 2017-18-இல் 6.85 கோடியாக அதிகரித்திருக்கிறது. ஜிடிபி விகிதத்தில் 5.98% என்பது கடந்த பத்தாண்டுகளில் அதிகமான விகிதம். இருந்தாலும்கூட, மொத்த வரி வருவாயில் நேரடி வரி வருவாய் 52.29% என்பது நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன்னர் இருந்ததைவிடக் குறைவுதான் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. 

2013-14 நிதியாண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நேரடி வரி வருவாய் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்ததுபோய், இந்த ஆண்டு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது ஆறுதலான முன்னேற்றம். இந்த மாற்றத்துக்கு நரேந்திர மோடி அரசு எண்ம பரிவர்த்தனைக்கும், இணைய செயல்பாடுகளுக்கும் கொடுத்த ஊக்கம் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. வருமான வரித் துறை, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும் எண்மப் பரிமாற்றம் முக்கியமான காரணி. 

2017-18 நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 7.4 கோடியாக அதிகரித்து, கடந்த நான்கு ஆண்டுகளில் 40% அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு வரி வருவாய் அதிகரித்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை. அதற்குக் காரணம், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரில் பெரும்பாலோர் மாத ஊதியம் பெறுபவர்களாக இருப்பதுதான். 2017-18-இல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தவர்களில் 43.85% பேர் ரூ.3.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருவாய் உடையவர்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

2017-18 நிதியாண்டில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வருவானம் இருப்பதாகக் கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 1,40,139. இது 2014-15இல் ரூ.1 கோடிக்கும் அதிகமான வருமானம் ஈட்டிய 88,649 பேரைவிட 60% அதிகம். இதைப் பெருமை என்று எடுத்துக்கொள்வதில் சற்று தயக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதல்ல. தேசத்தின் செல்வம் ஒரு சிலரிடத்தில் சேர்ந்து, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது என்பதுதான். இந்தியாவில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக ஆண்டு வருவாய் இருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகம் என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. 

அரசின் நேரடி வரி வருவாயில் பெரும் பங்கு வகிப்பது கார்ப்பரேட் வருமான வரி. கடந்த 20 ஆண்டுகளாக அரசின் வரிக்கொள்கைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி ஓட்டைகளை அடைத்து வரி ஏய்ப்பைக் குறைக்க முற்பட்டிருப்பதன் பயன் தெரியத் தொடங்கியிருக்கிறது. 2003-04-இல் 19.37%-ஆக இருந்த கார்ப்பரேட் வருமான வரி, 2016-17-இல் 26.89%-ஆக உயர்ந்
திருப்பது நியாயமான அதிகரிப்பு என்றுதான் கூற வேண்டும். கார்ப்பரேட் வருமான வரி அதிகரித்து, தனியார் வருமான வரி குறையும்போதுதான் நேர்மையாக வரி செலுத்தும் மாத வருவாய்ப் பிரிவினருக்கு நியாயம் கிடைக்கும்.

இந்தாண்டு மறைமுக வரிகளைவிட நேரடி வரி வருவாய் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான போக்கு. நேரடி வரி வருவாய் அதிகரிக்கும்போதுதான் மறைமுக வரிகளைக் குறைத்து ஏழைகள் மீதான பாரத்தைச் சற்று தளர்த்த முடியும். அதேபோல, நேரடி வரி வசூலிப்பது என்பது பொருளாதார நோக்கிலும், நிர்வாக நோக்கிலும் எளிமையானது. அதில் அதிகமாக மறைக்கவோ, ஏமாற்றவோ முடியாது. அந்த வகையில், இந்தியாவின் நிதி நிர்வாகம் சரியான பாதையில் பயணிக்கிறது என்று தெரிகிறது. 

இதெல்லாம் ஒருபுறமிருக்க, அரசு இன்னும் வேளாண் வருவாயை வருமான வரி வரம்பிலிருந்து விலக்கி வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சிறு விவசாயிகள் பாதிக்கப்படாமல் அதே வேளையில், பெரும் நிலச்சுவான்தார்கள் தங்களது வேளாண் வருவாய்க்கு வரி செலுத்துவதை அரசு ஏன் தள்ளிப்போடுகிறது என்கிற கேள்வி நீண்டகாலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது. வேளாண் வருவாய்க்கு அளிக்கப்பட்டிருக்கும் விலக்கைப் பயன்படுத்தி, பல கோடீஸ்வரர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்பது தெரிந்தும்கூட, ஆட்சியிலிருக்கும் எந்தவோர் அரசும் இது குறித்து நடவடிக்கை எடுக்கத் துணியவில்லை.

மத்திய - மாநில அரசுகள் இலவச மின்சாரம், தண்ணீர், மானிய விலையில் உரங்கள் என்று விவசாயிகளின் விளைநிலத்தின் அளவையும், வருவாயையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் சலுகைகளை வாரி வழங்குகின்றன. வேளாண் வருவாய்க்கு வருவான வரி விதிக்கவில்லை என்றாலும்கூட, அதிக அளவில் நிலம் வைத்திருக்கும் பணக்கார விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதையும், உர மானியம் வழங்குவதையும் ஏன் தொடர வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com