பாலமல்ல, பாதுகாப்பு அரண்!

கடந்த செவ்வாய்க்கிழமை அஸ்ஸாம் மாநிலத்தின் பொகீபில் என்னும் இடத்தில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் 4.94 கி.மீ. நீளமான பாலத்தை

கடந்த செவ்வாய்க்கிழமை அஸ்ஸாம் மாநிலத்தின் பொகீபில் என்னும் இடத்தில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் 4.94 கி.மீ. நீளமான பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரயில் பாதை, போக்குவரத்துச் சாலை என்று இரண்டு அடுக்காக அமைந்த இந்த வகை பாலங்களில் இது இந்தியாவிலேயே நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது. 
கடந்த 1997-ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த தினத்தில் இன்றைய பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 
பிரம்மபுத்ராவின் மீது கட்டப்பட்டிருக்கும் இந்த இரண்டு அடுக்குப் பாலம், அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் அருகிலுள்ள பொகீபில் நகரத்தையும், அருணாசலப் பிரதேசத்தின் நாஹர்லாகுன் நகரத்தையும் இணைக்கிறது. இந்தப் பாலம் அமைக்கப்பட்டிருப்பதால் அஸ்ஸாமுக்கும் அருணாசலப் பிரதேசத்திற்கும் இடையேயான பயணம் 10 மணி நேரம் குறையும். தொடக்கத்தில் ரூ.3,230 கோடியில் திட்டமிடப்பட்ட இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி, தாமதம் காரணமாக ரூ.5,960 கோடி செலவில் நிறைவு பெற்றிருக்கிறது. 
இந்தப் பாலத்தைத் திறந்து வைத்துப் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதுபோல, திட்டங்கள் தாமதப்படுவதால் மிகப்பெரிய இழப்பை நாம் எதிர்கொள்கிறோம். திட்டமிடலுக்கும் கட்டுமானப் பணி தொடங்குவதற்கும் கட்டி முடிப்பதற்கும் இடையேயான காலதாமதம்தான் இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை.
ஒரே நேரத்தில் ரயிலுக்கான இருப்புப் பாதையும் வாகனப் போக்குவரத்துக்கான நெடுஞ்சாலையும் பிரம்மபுத்ரா நதியின் மீது இந்தப் பாலத்தின் மூலம் நிறுவப்பட்டிருக்கின்றன. இந்தப் பாலம் கட்டப்பட்டிருப்பதால் சுமார் 700 கி.மீ. தூரம் சுற்றி அருணாசலப் பிரதேசத்தை அடைவது, 200 கி.மீட்டருக்கும் குறைவாக மாறியிருக்கிறது. அஸ்ஸாமிருந்து அருணாசலப் பிரதேசத்துக்கு 24 மணி நேரம் பயணித்தவர்கள் ஐந்தாறு மணி நேரத்தில் சென்றடைய இந்தப் பாலம் வழிகோலியிருக்கிறது. வாரத்தில் ஐந்து நாட்கள் செல்லும் தின்சுகியா - நாஹர்லாகுன் இன்டர் சிட்டி விரைவு ரயிலும் தொடங்கப்பட்டிருப்பது அருணாசலப் பிரதேசத்திற்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்.
வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியிருப்பதற்கு வரலாற்று ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் பல காரணிகள் உண்டு. இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் வடகிழக்கு மாநிலங்களுக்கு தொடர்பு இல்லாமல் இருப்பது முக்கியமான காரணம். இந்தியா விடுதலை அடைந்த பிறகுதான் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்கள் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு வரத் தொடங்கினார்கள். இந்தியாவின் வேறு பகுதியிலுள்ளவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் குடியேறுவது 1873 பெங்கால் ஈஸ்டர்ன் பிரான்டியர் ரெகுலேஷன் சட்டத்தின்படி தடுக்கப்பட்டிருந்தது. அதனால், இந்தப் பகுதியில் வெளிமாநில மக்கள் பணி புரியலாமே தவிர, அசையாச் சொத்து வாங்கவோ, நிரந்தரமாகக் குடியேறவோ முடியாது. 
இதுபோன்ற கட்டுப்பாடுகளின் காரணமாகவும், வடகிழக்கு மாநில மக்களுக்கும் இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் போக்குவரத்துத் தொடர்பு இல்லாமல் இருந்ததாலும், அந்த மாநிலங்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையாமல் இருந்து வந்தன. இப்போதும்கூட, அந்த மாநிலங்களின் பல பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கான நல்ல சாலைகள் கிடையாது. அருணாசலப் பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில்தான் ரயில் இணைப்புகள் இருக்கின்றன. இன்னும்கூட மணிப்பூர், மிஸோரம் மாநிலங்கள் ரயில் போக்குவரத்தால் இணைக்கப்படவில்லை. 
இந்தப் பின்னணியில்தான் 2014-இல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அரசு, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி குறித்த முனைப்பை முன்னெடுத்தது. வடகிழக்கு மாநில மக்களுக்கு இந்தியர்கள் என்கிற உணர்வை ஏற்படுத்தி, அந்த மாநிலங்களை இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போல வளர்ச்சிப் பெறச் செய்ய வேண்டுமானால், அங்கே கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று 1997-இல் திட்டக்கமிஷன் பரிந்துரைத்திருந்த அறிக்கையை தூசி தட்டி, முனைப்புடன் செயல்படுத்திய பெருமை மோடி அரசையே சாரும். 
பொகீபிலில் கட்டப்பட்டிருக்கும் இந்த இரண்டு அடுக்குப் பாலத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. அருணாசலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடுவதுடன் எல்லைப் பகுதிகளில் தனது ராணுவ முகாம்களை அமைத்துக் கொண்டு, சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. எந்த ஒரு பாதுகாப்பு சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் இருப்பதற்கு பொகீபிலில் அமைந்துள்ள இரண்டு அடுக்குப் பாலம் அத்தியாவசியமாகிறது. 
அஸ்ஸாமிலுள்ள பிரம்மபுத்ரா நதியின் தெற்குப் பகுதியிலிருந்து அருணாசலப் பிரதேசத்தையொட்டிய வடக்குக் கரைக்கு விரைந்து செல்வதற்கு இந்த இரண்டு அடுக்குப் பாலம் பேருதவியாக இருக்கும். இந்திய ராணுவம் தேவையான தளவாடங்களையும் உபகரணங்களையும் எடுத்துச் செல்லும் வழித்தடமாக இந்த இரண்டு அடுக்குப் பாலம் அமைகிறது. இந்தப் பாலத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவசர காலங்களில் போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.
இரு மாநிலங்களை இணைக்கும் பாலம் என்பதையும், இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையேயான இணைப்புப் பாலம் என்பதையும்விட, இந்தியாவின் பாதுகாப்புக்கான பாலம் என்பதுதான் பொகீபில் பாலத்தின் முக்கியத்துவம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com