நம்பிக்கை தந்த 2018!

2018-இன் விளையாட்டு சாதனைகள் 2019-இல் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் பல்வேறு பந்தய வெற்றிகளுக்கான முன்னோட்டம் என்றுதான் கருத வேண்டும். இந்த ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

2018-இன் விளையாட்டு சாதனைகள் 2019-இல் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் பல்வேறு பந்தய வெற்றிகளுக்கான முன்னோட்டம் என்றுதான் கருத வேண்டும். இந்த ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், இளைஞர்களின் ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் இந்திய வீரர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள், வருங்காலத்தில் குறிப்பிடத்தக்க சக்தியாக விளையாட்டு அரங்கத்தில் இந்தியா மாறுவதற்கான அறிகுறியையும் அடித்தளத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
 காமன்வெல்த் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதலில் 21 வயது நீரஜ் சோப்ரா நிகழ்த்திய தொடர் வெற்றி, 2020 டோக்கியோ ஒலிம்பிக் பந்தய தங்கப் பதக்கத்துக்கான அச்சாரமாக இருக்கக்கூடும். அதேபோல, பி.வி. சிந்து சமீபத்தில் பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் போட்டிகளில் உலக நெம்பர் ஒன் தை-சூ-யிங்கை வீழ்த்தி முதலிடம் பெற்ற நிகழ்வும், இறகுப் பந்தாட்டத்தில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கான தொடக்கம் என்று சொல்லலாம்.
 நமது இளம் துப்பாக்கிச் சுடும் வீரர்கள் 2018-இல் மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள். 16 வயது மானு பாக்கரும், 15 வயது அனீஷ் பன்வாலாவும் காமல்வெல்த் போட்டிகளிலும், 16 வயது செüரப் செüத்ரியும், 15 வயது ஷர்துல் விகானும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். சர்வதேச அளவில் இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் திறமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அபிநவ் பிந்த்ரா ஒலிம்பிக் பந்தயத்தில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது முதல் இந்தியாவின் துப்பாக்கிச் சுடும் வீரர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது.
 சமீபகாலமாக இந்தியா நிகழ்த்திவரும் இன்னொரு சர்வதேச அளவிலான சாதனை, மல்யுத்தக் களத்தில் நிகழ்த்தப்படுகிறது. இந்திய மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியாவும் வினேஷ் போகட்டும் காமன்வெல்த் போட்டிகளிலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தொடர்ந்து தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார்கள். மல்யுத்தத்தைப் பொருத்தவரை ஆசியாவிலும் காமன்வெல்த் நாடுகளிலும் இந்தியா தன்னை பலசாலியாக நிலைநிறுத்திக் கொள்ள 2018 வழிகோலியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஒலிம்பிக் பந்தயத்திலும் இந்தியா தனது வெற்றி முத்திரையைப் பதிப்பதற்கான சாத்தியம் கைக்கு எட்டும் தூரத்தில் கைவரப்பட்டிருக்கிறது.
 காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கமும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் இந்தியாவுக்குப் பெற்றுத் தந்திருக்கும் சாய்னா நெவாலை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும் இன்னொரு விளையாட்டு வீராங்கனை மனிகா பத்ரா. தில்லியைச் சேர்ந்த மனிகா பத்ரா, காமன்வெல்த் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கம் வென்றது மட்டுமல்லாமல், பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுடன் இணைந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
 இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைத் தொடர்ந்து வீழ்த்தி வந்த சீனாவை நம்மால் வெற்றிகாண முடியும் என்கிற நம்பிக்கையை இந்தியாவுக்கு மனிகா பத்ரா பெற்றுத் தந்திருக்கிறார். இந்த வீராங்கனை இந்தியாவின் முதல்நிலை ஆட்டக்காரராகவும், உலக அளவிலுள்ள முன்னணி டேபிள் டென்னிஸ் ஆட்டக்காரராகவும் உயர்ந்து நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார்.
 இந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக தடகளப் போட்டி 400 மீட்டர் ஓட்டத்தில் 18 வயது ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றபோது இந்தியாவின் முதல் தடகள உலக சாம்பியனாக அவர் தன்னை நிலைநாட்டிக் கொண்டார். பி.டி. உஷாவுக்குப் பிறகு இந்தியாவுக்கு ஒலிம்பிக் பந்தய நம்பிக்கையை ஏற்படுத்தும் தடகள வீராங்கனை ஹிமா தாஸின் வெற்றி இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று.
 நம்மால் பளுதூக்கும் போட்டி வீரர்களின் 2018 சாதனைகளை மறந்துவிட முடியாது. இந்த ஆண்டில் ஐந்து தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என்று ஒன்பது பதக்கங்களை பெற்றுத் தந்திருக்கிறார்கள் இந்திய பளுதூக்கும் வீரர்கள். இளம் பளுதூக்கும் நட்சத்திரமான ஜெரேமி லால்ரின்னுன்கா, இளைஞர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்திருக்கிறார்.
 பில்லியர்ட்ஸ் விளையாட்டில் பங்கஜ் அத்வானி தனது 21-ஆவது உலகப் பட்டத்தை 2018-இல் வென்றார் என்றால், சுபாங்கர் சர்மா, நீபாங் மலேசியா ஓபன் பந்தயத்தில் இந்திய மூவர்ணக் கொடியை தூக்கிப் பிடித்திருக்கிறார். இதுபோல, அநேகமாக எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா 2018-இல் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது.
 இந்தியாவுக்கு 2018-இல் சில பின்னடைவுகளும் நேராமல் இல்லை. ஹாக்கியிலும், கிரிக்கெட்டிலும் மனச்சோர்வை ஏற்படுத்திய தோல்விகளை எதிர்கொள்ள நேர்ந்தது. கிரிக்கெட்டைப் பொருத்தவரை இளம் பந்து வீச்சாளர்கள் 2019 உலக கிரிக்கெட் கோப்பைப் போட்டியில் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
 எல்லா விளையாட்டு வீரர்களின் பெயர்களையும் பட்டியலிட முடியாவிட்டாலும் 2018-ஐப் பொருத்தவரை விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால் தலைசிறந்த சாதனையாளராக உயர்ந்து நிற்பது மேரி கோம்தான் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது. நூற்றுக்கணக்கான நம்பிக்கை நட்சத்திரங்களுடன் இந்தியா விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கத் தயாராகிறது என்பதுதான் 2018 தெரிவிக்கும் செய்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com