சாதனைதான் என்றாலும்...

மத்திய அரசு ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தி நேற்றுடன் ஓராண்டாகிறது. முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்த விரும்பிய

மத்திய அரசு ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தி நேற்றுடன் ஓராண்டாகிறது. முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்த விரும்பிய இந்தத் திட்டம், நரேந்திர மோடி அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் வேடிக்கை.
 அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது ஆண்டிலேயே, சராசரியாக மாதமொன்றிற்கு ரூ.90,000 கோடி வரி வருமானம் ஈட்டியிருக்கிறது மத்திய அரசு. கடந்த ஏப்ரல் மாதம் மட்டுமே ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானவர்கள் வரி தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பதும், 380 கோடிக்கும் அதிகமான விற்பனைப் பட்டியல் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் மிகப்பெரிய சாதனைகள்.
 இதுவரை 1,12,15,693 புதிய வாடிக்கையாளர்கள் சரக்கு மற்றும் சேவை வரித்தாக்கல் செய்யப் பதிவு செய்திருக்கின்றனர். இவர்களில் 48,39,726 பேர் புதிதாக வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டிருப்பவர்கள். பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதுபோல, தாமாக வரி செலுத்துவோர் எண்ணிக்கையை ஜி.எஸ்.டி. 70% அதிகரித்திருக்கிறது.
 அதுமட்டுமல்ல, ஊருக்கு ஊர், மாநிலத்துக்கு மாநிலம் ஆங்காங்கே காணப்பட்ட விற்பனை வரி, நுழைவு வரி, கலால் வரி, ஆக்ட்ராய் வரி ஆகியவற்றிற்கான சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த ஓராண்டில், 17 வரிகளும், 23 கூடுதல் வரிகளும் அகற்றப்பட்டு ஒரே வரியாக மாற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம், வரி வசூலிப்பில் பரவலாகக் காணப்பட்ட "கையூட்டு' கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
 கடந்த ஆண்டு ஜூலையில், ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை 320-க்கும் அதிகமான பொருள்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான பொருள்கள் 28% வரிவிதிப்பில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவிலேயே கட்டுமானப் பொருள்கள், சிமென்ட், பெயின்ட் ஆகியவற்றின் மீதான வரி கணிசமாகக் குறைக்கப்படும் என்று தெரிகிறது.
 பலமுனை வரிகள் அகற்றப்பட்டிருக்கும் நிலையிலும்கூட, எதிர்பார்த்த ரூ.12 லட்சம் கோடியைத் தாண்டிய வரிவசூல், நடப்பு நிதியாண்டில் ரூ.13 லட்சம் கோடியை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கிறது நிதியமைச்சகம். இதன் பயனாக, மேலும் பல பொருள்கள் மீதான வரிகள் குறைக்கப்படலாம்.
 குஜராத் முதல்வராக இருந்தபோது, முந்தைய மன்மோகன் சிங் அரசு கொண்டுவர எத்தனித்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையைக் கடுமையாக எதிர்த்த பிரதமர் நரேந்திர மோடி, அதைத் தனது அரசின் மிகப்பெரிய சாதனையாக அறிவிப்பதும், எதிர்க்கட்சியில் இருந்தபோது அவர் முன்வைத்த அதே காரணிகளை இப்போது காங்கிரஸ் எதிரொலிப்பதும், இந்திய அரசியலில் காணப்படும் நகைமுரண்கள்.
 "ஒரு நாடு, ஒரே வரி' என்கிற தேசியப் பார்வை, இந்தியா போன்ற கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் தேசத்துக்கு ஒத்துவருமா என்கிற கேள்விக்கு இன்னும்கூட முழுமையான பதில் கிடைத்துவிடவில்லை. இருபதுக்கும் அதிகமான மத்திய, மாநில வரிகள் அகற்றப்பட்டிருப்பது என்பது வரவேற்புக்குரிய வெற்றி என்றாலும்கூட, "ஒரே வரி' என்கிற வரம்புக்குள் இல்லாமல் இருப்பதும், வரி செலுத்துவதில் காணப்படும் பலதரப்பட்ட நடைமுறைச் சிக்கல்களும், ஜி.எஸ்.டி. அமலாக்கத்தை இந்தியா முழுமையாக ஏற்றுக்கொண்டு விடவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன.
 இப்போதைக்கு முழு வரி விலக்கு (0%), தங்கம், வெள்ளிக்கு 3%, குறைந்த வரிவிதிப்பாக 5%, இடைநிலை வரிவிதிப்பாக 12%, 18%, அதிகபட்ச வரியாக 28% என்று ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இது போதாதென்று, சில பொருள்களின் மீது 15% கூடுதல் வரிவிதிப்பு செய்யப்படுகிறது. "ஒரு நாடு, ஒரே வரி' என்பது இலக்கானால், இத்தனை அடுக்கு வரிவிதிப்புகளின் தேவைதான் என்ன என்கிற கேள்வி எழுகிறது.
 "பென்ஸ் காருக்கும், அத்தியாவசிய உணவுப் பொருளான பாலுக்கும் ஒரே விதமான வரிவிதிப்பு என்பது எப்படி நியாயமாக இருக்கும்?' என்கிற பிரதமரின் வாதத்தில் நியாயம் இருக்கிறது. அதற்காக இத்தனை வரிவிதிப்புகள் தேவையா என்பதற்கு அவர் என்ன விளக்கம் தரப் போகிறார்? 12%, 18% வரிவிதிப்புகளை இணைப்பதிலும், 3%, 5% வரிவிதிப்புகளை இணைப்பதிலும் என்ன சிக்கல் இருக்க முடியும்? பதவி விலகி இருக்கும் மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறுவதுபோல, சுமார் 50 பொருள்களுக்கு மட்டுமே விதிக்கப்படும் 28% வரிவிதிப்பை ஏன் அகற்றிவிடக் கூடாது?
 பெரிய பொருளாதார நாடுகள் அனைத்தும் முழு வரிவிலக்கு, குறைந்த வரிவிதிப்பு, பொது வரிவிதிப்பு என்று மூன்று விதமான வரிவிதிப்புகளை மட்டுமே கடைப்பிடிக்கின்றன. கனடாவில் 5%, சிங்கப்பூரில் 7% என்று அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே அளவிலான ஜி.எஸ்.டி. அமலில் இருக்கிறது. இந்தியாவில் வரிவிதிப்பை சுலபமாக்குவதற்குப் பதிலாக, பல அடுக்கு வரிவிதிப்புகள், கூடுதல் வரிகள், பல்வேறு பதிவுகள், வரி செலுத்தும் முறைகள் என்று ஜி.எஸ்.டி.யை சிக்கலானதாக மாற்றி இருக்கிறது நிதியமைச்சக நிர்வாகம்.
 முதலாமாண்டைக் கடந்து விட்டிருக்கிறது ஜி.எஸ்.டி. அமலாக்கம் என்பதும், பல்முனை வரிகள் அகற்றப்பட்டிருக்கின்றன என்பதும் ஆறுதலளிக்கிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு சுலபமாக்கப்பட்டு, வரிவிதிப்பு அடுக்கு குறைக்கப்பட்டால் மட்டும்தான் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை, ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தொடரும். அதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும்!
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com