ராஜதந்திர வெற்றி!

2006 முதல் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும், இந்திய - ஜப்பான் கூட்டுறவு மாநாடு, இரு நாடுகளுக்குமிடையேயான நெருக்கத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.

2006 முதல் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும், இந்திய - ஜப்பான் கூட்டுறவு மாநாடு, இரு நாடுகளுக்குமிடையேயான நெருக்கத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளும், அமெரிக்கா பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறியிருப்பதும் இரு நாடுகளையும் பாதித்திருக்கின்றன என்கிற பின்னணியில் இந்த ஆண்டின் கூட்டுறவு மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி விதிப்புகள் நமது பொருளாதாரத்தை நேரடியாகவே பாதித்திருக்கின்றன. இந்தியர்களின் வேலைவாய்ப்பை நுழைவு அனுமதிக் கட்டுப்பாடுகள் பாதித்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானுடனும், ரஷியாவுடனுமான இந்தியாவின் ஒப்பந்தங்கள், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை எதிர்கொள்ளக்கூடும் என்கிற அச்சமும் காணப்படுகிறது. 
ஜப்பானும் இதேபோல அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பாலும், அமெரிக்க பசுபிக் கூட்டுறவு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியிருப்பதாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், வடகொரியாவுடன் அமெரிக்கா அவ்வப்போது மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் ஜப்பானை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. அதனால், இந்தியாவும் ஜப்பானும் அமெரிக்காவால் எழும் சவால்களை எதிர்கொள்ள மேலும் நெருக்கமாக செயல்பட வேண்டிய கட்டாயம் 
ஏற்பட்டிருக்கிறது.
இரு நாடுகளுக்கும் பொதுவான இன்னொரு கவலை, ஆசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம். கிழக்கு சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் சீனாவின் முயற்சியும், ஜப்பானின் ஆளில்லாத் தீவுகளான சென்காக்கூ தீவுகளின் மீது சீனா உரிமை கொண்டாடுவதும், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ஜப்பான் கருதுகிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஜப்பானின் எல்லைக்குள் உள்ள சென்காக்கூ தீவுகளுக்கு சீனா அனுப்பியது. இதன் மூலம் தனது கடல் எல்லையை அதிகரிக்க சீனா எடுத்துவரும் முயற்சிகள் ஜப்பானுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல, சீன விமானப் படை, ஜப்பானிய எல்லைக்குள் அடிக்கடி அத்துமீறி நுழைய முற்பட்டிருப்பதும் அந்த நாட்டின் கவலையை அதிகரித்திருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் பிரதமர் மோடியின் இந்த ஆண்டுக்கான ஜப்பானிய அரசு முறைப் பயணம் பார்க்கப்பட வேண்டும். அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளால் ரஷியாவும் சீனாவும் நெருங்குகின்றன. சிறிது காலம் தொய்வு ஏற்பட்டிருந்த இந்திய - ரஷிய உறவு, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் சமீபத்திய இந்திய அரசு முறைப் பயணத்திற்குப் பிறகு மீண்டும் பழைய வலிமையைப் பெற்றிருக்கிறது. 
பிரதமர் மோடியின் ஜப்பான் விஜயத்திற்கு முன்புதான் பிரதமர் அபே 500 முக்கியத் தொழிலதிபர்களுடன் சீனாவுக்குச் சென்று அந்த நாட்டின் அதிபரையும் பிரதமரையும் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்திருக்கும் ஜப்பானிய பிரதமரின் இந்த சீன விஜயத்தின் நீட்ச்சியாகத்தான் இந்தியப் பிரதமரின் ஜப்பான் விஜயத்தை நோக்க வேண்டும். பிரதமர்கள் இருவரும் சீனாவின் அணுகுமுறை குறித்துக் கலந்தாலோசித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்தியப் பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் அபேவும் இரு நாடுகளின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் அளவிலான கூட்டுப் பேச்சுவார்த்தையை நடத்துவது என்று முடிவெடுத் திருக்கிறார்கள். வங்க தேசம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து பல்வேறு கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடுவது என்றும் தீர்மானித்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்தியா தனது அண்டை நாடுகளுடனான உறவையும், முக்கியத்துவத்தையும் அதிகரித்துக்கொள்ள முடியும். 
இந்தியாவைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளிலும் சீனா தனது முதலீடுகளின் மூலம் தடம் பதித்திருக்கிறது. அந்த நாடுகளைத் தன்னுடைய கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது. இதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அந்த நாடுகளுக்குப் பொருளாதார ரீதியாக இந்தியா இனிமேல் உதவ முடியும் என்கிற சூழலை ஜப்பானுடனான இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கிறது.
நரேந்திர மோடி - ஷின்ஷோ அபே சந்திப்பில் குறிப்பிடத்தக்க முடிவு, இரு நாடுகளுக்குமிடையே 75 பில்லியன் டாலர் (சுமார் ரூ.5.48 லட்சம் கோடி) அளவிலான வர்த்தக ஒப்பந்தம். இதன்படி, இரு நாடுகளும் அமெரிக்க டாலரில் அல்லாமல் அவரவர் நாட்டு செலாவணிகளில் இறக்குமதி - ஏற்றுமதிகளை செய்துகொள்ள முடியும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கும் நிலையில், இது மிகப்பெரிய ஆறுதல். 
சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே ராஜீய உறவு சரியாக இல்லாவிட்டாலும்கூட, வர்த்தகத்தின் அளவு 300 பில்லியன் டாலர் (சுமார் ரூ.21.94 லட்சம் கோடி). ஆனால், இந்திய - ஜப்பான் வர்த்தகம் வெறும் 15 பில்லியன் டாலரில்தான் (சுமார் ரூ.1.09 லட்சம் கோடி) காணப்படுகிறது. அதனால், இந்திய - ஜப்பான் நட்புறவு என்பது பொருளாதாரம் சார்ந்தது அல்ல; இரு நாடுகளின் பாதுகாப்பு சார்ந்தது. 
இந்து மகா சமுத்திரத்தில் ஆதிக்க சக்தியாக இந்தியா விளங்குவது ஜப்பானுக்கும், ஜப்பான் தனது நட்பு நாடாக இருப்பது இந்தியாவுக்கும் ஆசியாவில் இரு நாடுகளும் தங்களது முக்கியத் துவத்தை நிலைநிறுத்திக்கொள்ள மிக மிக அவசியம். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது பிரதமர் மோடியின் ஜப்பானிய விஜயம் வெற்றி என்றுதான் கருத வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com