தர்மசங்கடத்தில் உலகம்!

வரும் மே மாதம் 2-ஆம்


வரும் மே மாதம் 2-ஆம் தேதி முதல் ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி  செய்ய உலக நாடுகள் அனைத்துக்கும் அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதமே ஈரானுக்கு எதிரான தடையை அமெரிக்கா அறிவித்தது என்றாலும், உலகிலுள்ள எட்டு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி  செய்வதற்கு தற்காலிக தடை விலக்கு வழங்கியிருந்தது. அந்த நாடுகள் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் அமெரிக்கா தடை விலக்கு அளித்திருந்தது. 

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விலக்கு வழங்கப்பட்டிருந்த எட்டு நாடுகள் - கிரீஸ், இத்தாலி, தைவான், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, சீனா, துருக்கி. இவற்றில் கிரீஸ், இத்தாலி, தைவான் ஆகிய மூன்று நாடுகளும் ஏற்கெனவே ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முழுவதுமாக நிறுத்திவிட்டிருக்கின்றன. ஜப்பானும் தென்கொரியாவும் ஈரானிய கச்சா எண்ணெயை நம்பியிருப்பவை அல்ல. அதனால், இந்தியா, சீனா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும்தான் அமெரிக்காவின் இந்த முடிவால் மிகவும் பாதிக்கப்படுபவை. 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான விரோதம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 40 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானில் அயதுல்லா கொமேனி தலைமையில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டு அமெரிக்காவின் நண்பராக இருந்த அரசர் ஷாவின் ஆட்சி அகற்றப்பட்டது முதலே இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பகை தொடர்கிறது. அமெரிக்காவுக்கு நெருக்கமான சவூதி அரேபியாவுடனும் இஸ்ரேலுடனான ஈரானின் பகைமைதான் அமெரிக்காவை அந்த நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைப்பதன் காரணம். ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர் (5000 கோடி டாலர்) அளவிலான ஈரானின் கச்சா எண்ணெய் வருவாயை முடக்குவதன் மூலம் ஈரானின் அணுசக்தித் திட்டம், ஏவுகணை சோதனை, சிரியாவுக்கு அந்த நாடு வழங்கும் உதவி ஆகியவற்றை முடக்க நினைக்கிறது அமெரிக்கா.

ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முடக்குவதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாகச் சிதைத்து, அரசியல் குழப்பத்துக்கு வழிகோலி ஈரானின் இஸ்லாமியக் குடியரசுக்கு முடிவுகட்ட நினைக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு அரபு நாடுகள் அனைத்தும் துணை நிற்கின்றன என்பதுடன், இஸ்ரேலும் அதை விரும்புகிறது. ஆனால், அவ்வளவு எளிதாக ஈரானிய இஸ்லாமியக் குடியரசு, அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிடாது என்பதால், வளைகுடாவில் தொடர்ந்து குழப்பம் நிலவும் என்பதுடன் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையும் கடுமையாகப் பாதிக்கப்படலாம். 

இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில்  இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஈரான். நமது தேவையில் ஏறத்தாழ 10 சதவீதம் கச்சா எண்ணெயை அங்கிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். கடந்த சில மாதங்களாக ஈரானிலிருந்தான நமது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கணிசமாகக் குறைத்திருந்தாலும்கூட, முழுவதுமாக நம்மால் நிறுத்திவிட முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. 

ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த நிறுவனங்களுடனான டாலர் பரிமாற்றங்கள் முடக்கப்படும். அமெரிக்காவிலுள்ள அந்த நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்படும் ஆபத்தும் காத்திருக்கிறது. 

இந்தப் பின்னணியில் அரசுத் துறை நிறுவனங்கள் உள்பட ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகளை முன்னெடுப்பதல்லாமல் வேறு வழியில்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மேலும், மிகப்பெரிய அளவில் இந்தியா, ஈரானிலுள்ள சாபஹார் துறைமுகத்தில் முதலீடு செய்திருக்கிறது. ஈரானுடனான உறவைத் துண்டித்துக் கொள்வதால், மிகப் பெரிய அளவில் நாம் இழப்பை எதிர்கொள்ளக் கூடும்.

ஒருபுறம் ஈரானுடனான உறவு துண்டிக்கப்படுவதால் பெரும் இழப்பீடு ஏற்படும் என்றாலும், அமெரிக்காவுடனான நட்புறவை இழப்பதால் இந்தியா அடையும் இழப்பு அதையெல்லாம்விட மிக மிக அதிகம். இந்தியா மட்டுமல்ல, சில ஐரோப்பிய நாடுகளும்கூட ஈரானிலிருந்தான கச்சா எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக துண்டித்துக்கொள்ள விரும்பவில்லை. அமெரிக்க சந்தையையும், அமெரிக்க வர்த்தக முறையையும் இழக்க அவர்கள் தயாராக இல்லை. இந்தியாவுக்கும்கூட அதுதான் நிலைமையாக இருக்கிறது.

அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு மத்திய ஆசியாவின் அரசியல் சமநிலையை பெருமளவில் பாதிப்பதுடன் ஈரானையும் கட்டாயமாகப் பாதிக்கும். ஈரான், சிரியா கூட்டணியைவிட அரபு நாடுகள் பொருளாதார ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் வலிமை பெறும்.  

இந்தியாவும், ஈரானிய கச்சா எண்ணெயை நம்பி இருக்கும் நாடுகளும் தடையால் பாதிக்கப்படும் நிலையில் அதற்கு நிகரான கச்சா எண்ணெயை அமெரிக்கா வழங்குவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உலகக் கச்சா எண்ணெய் சந்தை அமெரிக்காவின் விருப்பு வெறுப்புகளுக்கு அடிமைப்பட்ட நிலையில் இருப்பது ஏற்புடைய சூழல் அல்ல. 

உலக வர்த்தகத்தின் செலாவணியாக அமெரிக்க டாலர் இருக்கும்வரை அமெரிக்காவின் மேலதிகாரத்தை உலகிலுள்ள எந்த நாடாலும் எதிர்கொள்ள முடியாது. அதற்கு ஒரு மாற்று ஏற்படாத வரையில், இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துமே "அமெரிக்கா எவ்வழி, நாங்களும் அவ்வழி' என்று நடை
போடுவதைத் தவிர வேறு வழியொன்றுமில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com