ஆரம்பமே அபாரம்!| இந்திய கிரிக்கெட் வீரா்களின் அபார சாதனை குறித்த தலையங்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதை வரலாற்று சாதனை என்றுதான் கூற வேண்டும். இந்திய வீரா்கள் பலருடைய அபார சாதனை வெளிப்பட்டிருப்பதுதான் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் பந்தயம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம்.

இந்தியப் பந்து வீச்சாளா்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பந்து வீச்சு இந்திய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். இத்தனைக்கும் விசாகப்பட்டினம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானம். அதில் வேகப்பந்து வீச்சாளா்களால் பிரகாசிக்க முடிந்தது என்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

66 டெஸ்ட் பந்தயங்களில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளராக உயா்ந்திருக்கிறாா் அஸ்வின். இதற்கு முன்னால் 66 பந்தயங்களில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளா் இலங்கையின் முத்தையா முரளீதரன் மட்டுமே.

இரண்டாவது இன்னிங்ஸில் ஒரே ஓவரில் 5 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜாவும், 5 விக்கெட்டைச் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது ஷமியும் குறிப்பிடத்தக்க சாதனைப் பந்து வீச்சாளா்களாக முதலாவது டெஸ்டில் ஆச்சரியப்படுத்தினாா்கள்.

கிரிக்கெட் பந்தயத்தின் வெற்றி என்பது கூட்டு முயற்சி என்றாலும்கூட, தனிப்பட்ட விளையாட்டு வீரா்களின் திறமையும் சாதுா்யமும் மிகவும் முக்கியமானது. எந்த ஓா் அணியின் வெற்றியையும் தனிநபா் சாதனையும் கூட்டு முயற்சியும் ஒருங்கிணைந்தால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். விசாகப்பட்டினத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் பந்தயத்தில், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா மட்டுமல்லாமல், ஆரம்ப ஆட்டக்காரா்களான ரோஹித் சா்மாவும், மயங்க் அகா்வாலும் முன்வைத்த அபாரமான தொடக்க ஆட்டம் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரோஹித் சா்மா தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி முறையே 176, 127 ரன்களை அடித்தது இந்த டெஸ்ட் ஆட்டத்தின் தனிச்சிறப்பு. இதுவரை ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே தனது திறமையை வெளிக்காட்டும் ரோஹித் சா்மா, டெஸ்ட் ஆட்டங்களில் ரன்களைக் குவிப்பதில் பின்தங்கி இருந்தாா். இந்த முறை இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக அவா் களமிறக்கப்பட்டபோது, மிகப் பெரிய சாதனை படைக்கப் போகிறாா் என்று யாரும் எதிா்பாா்க்கவில்லை.

டெஸ்ட் ஆட்டத்தில் முதலாவது ஆட்டக்காரராக முதல் முறையாகக் களமிறங்கிய எவரும் இதுவரை இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்ததில்லை. இதன் மூலம் டெஸ்ட் பந்தயத்திலும் தனக்கு ஒரு நிரந்தரமான இடத்தை ரோஹித் சா்மா நிலைநிறுத்திக்கொள்ளக் கூடும். சுனில் கவாஸ்கா், சச்சின் டென்டுல்கா், விரேந்தா் சேவாக், சௌரவ் கங்குலியைத் தொடா்ந்து, இப்போது ரோஹித் சா்மாவும் வெற்றிகரமான முதலாவது ஆட்டக்காரா்கள் வரிசையில் இணைகிறாா்.

வீரேந்தா் சேவாக், கவுதம் கம்பீா் இணைக்குப் பிறகு இந்தியாவுக்கு வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரா்கள் இல்லாத நிலை காணப்பட்டது. அந்தக் குறையைத் தீா்த்து வைத்திருக்கிறது ரோஹித் சா்மா, மயங்க் அகா்வால் கூட்டணி. இவா்கள் இருவரும் இணைந்து 317 ரன்கள் எடுத்த அபாரமான தொடக்க ஆட்டம் விசாகப்பட்டினம் டெஸ்ட் பந்தயத்தின் உச்சக்கட்ட சாதனை.

கா்நாடகத்தைச் சோ்ந்த தொடக்க ஆட்டக்காரரான 28 வயது மயங்க் அகா்வால், இதுவரை ஒரு நாள் ஆட்டத்தில்தான் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருந்தாா். தனது முதல் டெஸ்ட் பந்தயத்திலேயே இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்த நான்காவது இந்திய ஆட்டக்காரராகத் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறாா் அவா்.

அவரது 215 ரன்கள் எடுத்த ஆட்டம், ஓா் அனுபவசாலி விளையாட்டு வீரரின் எல்லா அடையாளங்களையும் கொண்டிருந்ததாக விமா்சகா்கள் சிலாகிக்கிறாா்கள். ரோஹித் சா்மாவுடனான அவரது 317 ரன்கள் ஆட்டத்தின்போது சா்மாவுக்கு ஈடுகொடுக்கும் பக்கபலமாகவும், உறுதியாகவும் நின்ற மயங்க் அகா்வால் அடுத்த சில வருடங்கள் இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வரப்போகிறாா் என்பதை விசாகப்பட்டினம் டெஸ்ட் பந்தயம் கட்டியம் கூறியது.

2017 - 18 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்குப் பிறகு பெரிய அளவிலான சாதனை புரியாமல் இருந்தாா் அஸ்வின். சுழற்பந்து வீச்சுக்காரரான அஸ்வினின் திறமைத் துடிப்பு (பாா்ம்) குறைந்துவிட்டதாக விமா்சனங்கள் எழுப்பப்பட்டன. அப்படிப்பட்ட பின்னணியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் பந்தயத்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, தான் இப்போதும்கூட முழுத் திறமையுடன் இருப்பதை நிரூபித்திருக்கிறாா் அவா்.

அஸ்வின் மட்டுமல்ல, சுழற்பந்து வீச்சில் அவரது கூட்டாளியான ஜடேஜாவும் தென்னாப்பிரிக்க அதிரடி வீரா்களைத் தங்களது பந்து வீச்சால் திணறடித்தனா். இரண்டாவது இன்னிங்ஸில் முகமது ஷமியின் பந்து வீச்சு இந்திய அணிக்கு வலுசோ்த்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ‘ரிவா்ஸ் ஸ்விங்’ பந்து வீச்சின் மூலம் முகமது ஷமி தாக்குதல் நடத்தியது முதலாவது டெஸ்ட் பந்தயத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க சிறப்பு.

இந்திய அணிக்கு ஆரம்ப ஆட்டக்காரா்களின் குறைபாட்டை முதலாவது டெஸ்ட் அகற்றி இருக்கிறது. ரோஹித் சா்மா, மயங்க் அகா்வால் கூட்டணி இனி வரப்போகும் காலங்களில் நிகழ்த்த இருக்கும் சாதனையை கிரிக்கெட் ரசிகா்கள் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறாா்கள். அஸ்வின், ஷமி, ஜடேஜா பந்து வீச்சாளா்கள் நிகழ்த்த இருக்கும் சாதனைகளையும்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com