அவசரப்படுவானேன்?

நாடாளுமன்ற ஜனநாயக முறையில்

நாடாளுமன்ற ஜனநாயக முறையில் எந்த ஓர் அரசும் சட்டங்களை இயற்றுவதன் மூலமும், சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலமும்தான் தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், நிர்வாகத்தை நடத்தவும் இயலும். அதே நேரத்தில், முறையான விவாதமும், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளும் அரசு இயற்றும் சட்டத்துக்கு வலு சேர்ப்பவை என்பதை மறந்துவிடக் கூடாது. 

கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றுவது என்பது ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சித் தரப்புக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பதுபோலக் கருதப்படுகிறது. ஆளுங்கட்சி அறிமுகப்படுத்தும் எந்த மசோதாவாக இருந்தாலும் அதை எதிர்ப்பதுதான் தனது கடமை என்று எதிர்க்கட்சிகளும், ஆலோசனைகளும் கருத்துகளும் வேண்டுமென்றே அரசு கொண்டுவரும் மசோதாவின் மீது களங்கம் கற்பிக்கும் முயற்சி என்று ஆட்சியாளர்களும் கருதுவது வாடிக்கையாகிவிட்டது.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறைதான் தனிப் பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா  கட்சி ஆட்சி அமைத்திருக்கிறது. கடந்த 2014-இல் இருந்து மக்களவையில் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணிக்கை பலம் இருந்து வருகிறது. மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாமல் பல மசோதாக்களை அரசால் நிறைவேற்ற முடியாமல் தடைபட்டது என்னவோ உண்மை. இந்த முறை அப்படியல்ல. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாமல் போனாலும்கூட, ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிலை காணப்படுகிறது.

இப்போதுதான் தனிப் பெரும்பான்மையுடன் கூடிய மத்திய அரசின் இரண்டாவது ஆட்சி தொடங்கியிருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் தங்கு தடையின்றி ஆட்சியில் தொடர மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் நிலையில், நரேந்திர மோடி அரசு, ஆத்திர அவசரத்துடன் மசோதாக்களை நிறைவேற்ற முற்படுவது ஏன் என்பதுதான் புரியவில்லை. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் 35 மசோதாக்களும், மாநிலங்களவையில் 32 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த அளவுக்கு சமீப காலங்களில் எந்தவொரு கூட்டத்திலும், மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

போக்úஸா மசோதா, ஆதார் திருத்த மசோதா, முஸ்லிம்  பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா, பழைய சட்டங்கள் திரும்பப் பெறுதல் மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, தகவல் உரிமைகள் சட்டத் திருத்த மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, மனித உரிமைகள் பாதுகாப்பு மசோதா, சட்டவிரோதச் செயல்கள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா, தேசிய புலனாய்வு முகமை சட்டத் திருத்த மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க மசோதாக்களில் சில. இவற்றில் திவால் சட்டத் திருத்த மசோதா, தகவல் உரிமைகள் சட்டத் திருத்த மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா போன்றவை போதிய விவாதம் இல்லாமலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமலும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு பெருமையையும் பாராட்டையும் தேடித் தராது.

அதற்காக மசோதாக்கள் நீண்ட காலம் கிடப்பில் போடப்பட வேண்டுமென்றோ, நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டு தாமதிக்கப்பட வேண்டுமென்றோ அர்த்தமில்லை. சில மசோதாக்கள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் நிர்வாக  தாமதத்தாலும், வரிப் பண விரயத்தாலும் ஏற்படும் இழப்பு பொதுமக்களுக்குத்தான். அதேபோல, நியாயமான விமர்சனங்களையும், திருத்தங்களையும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும்போது அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் மக்களைத்தான் பாதிக்கும். 

சில மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் தொடரும்போது, அதற்காக மிகப் பெரிய இழப்பை தேசம் சந்திக்க நேரிடுகிறது. அதற்கு எடுத்துக்காட்டு, மின் சக்தி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படாதது. மின் திருட்டு, மின் கசிவு, மின் கணக்கீடு ஆகியவற்றை ஒழுங்குபடுத்த 2016-ஆம் ஆண்டு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 - 17 நிதியாண்டில் மட்டும் மின் பகிர்வு மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட மின்சார இழப்பு  24,91,974 யூனிட்டுகள் என்று கடந்த ஆட்சியில் எரிசக்தித் துறை அமைச்சராக இருந்த ஆர்.கே. சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதாவது, ஆண்டுதோறும் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 21.42% விரயமாகிறது என்று பொருள். இதில் ஒரு சதவீத விரயத்தைத் தடுக்க முடிந்தால், ரூ.4,147 கோடி வரிப் பணம் மிச்சமாகும். 2016-இல்  மசோதா நிறைவேற்றப்படாததால் ஒவ்வொரு நாளும் ரூ.243 கோடி இழப்பை நாம் சந்திக்க நேர்ந்தது என்பது வெளியில் தெரியாத உண்மை.

உலகிலுள்ள 180 நாடுகளில் ஊழலில் 81-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, இன்னும்கூட இடித்துரைப்போர் பாதுகாப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றாமல் இருக்கிறது. இன்னொரு பக்கம், தகவல் உரிமைகள் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்கள் அந்தச் சட்டம் நீர்த்துப்போக வழிகோலுகிறது. இதுபோன்ற முரண்கள், முறையான விவாதத்தின் மூலமும், ஆளுங்கட்சித் தரப்புக்கும், எதிர்க்கட்சித் தரப்புக்கும் இடையே தேச நலன் குறித்த சரியான புரிதல் மூலமும்தான் களையப்பட வேண்டும்.

அவசர கதியில் விவாதமே இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றுவது சரியான அணுகுமுறையல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com