பருவமழையைப் பழிக்காதீர்கள்!

வறட்சியும், வெள்ளப் பெருக்கும் ஒன்றன் பின் ஒன்றாக தாக்குவது என்பது

வறட்சியும், வெள்ளப் பெருக்கும் ஒன்றன் பின் ஒன்றாக தாக்குவது என்பது இந்தியாவுக்குப் புதிதொன்றுமல்ல. பல ஆண்டுகளாக பாதிப்புகளை எதிர்கொண்டும்கூட, நமது மாநில அரசுகள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முன்னெச்சரிக்கையாக இல்லை என்பதுதான் வேதனையளிக்கிறது. 
மழை பாதிப்பால் இதுவரை ஏறத்தாழ 150-க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், பிகார், அஸ்ஸாம், ஒடிஸா, கிழக்கு கடற்கரைப் பகுதிகள் என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. 
கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மேற்கு கடற்கரை மாநிலங்கள்தான் மிக அதிகமான பாதிப்பை எதிர்கொண்டு பெரும்பாலான பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. அஸ்ஸாம், பிகார், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் எந்தவகையிலும் குறைந்ததொன்றுமல்ல. 
பருவமழையின் பாதிப்பு வழக்கம்போல அஸ்ஸாமிலிருந்துதான் தொடங்கியது. பிரம்மபுத்ராவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்சநஞ்சமல்ல. உலகிலேயே மிக அதிகமாகக் காண்டாமிருகங்கள் காணப்படும் காஸிரங்கா வனவிலங்கு சரணாலயம் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கி, அதிலிருந்த காண்டாமிருகங்களும், யானைகளும் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள பட்டபாடு சொல்லி முடியாது. ஏறத்தாழ 17,563 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 50,000-க்கும் அதிகமான ஆடு - மாடுகளும், 20,000-க்கும் அதிகமான சிறு விலங்குகளும், 50,000-க்கும் அதிகமான பறவை இனங்களும் பாதிக்கப்பட்டன. 
பிகாரில் பாயும் நான்கு நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி 13 மாவட்டங்கள் நீரில் மூழ்கிக் கிடந்தன. குஜராத்தின் மத்தியப் பகுதியும், தெற்குப் பகுதியும் இன்னும்கூட அம்பிகா, பூர்ணா நதிகளின் வெள்ளப்பெருக்கிலிருந்து முற்றிலுமாக மீளவில்லை. அடைமழை ஓய்ந்திருக்கிறதே தவிர, மழை நின்றபாடில்லை. மாநிலத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. 
மகாராஷ்டிரத்தின் சேதம் சொல்லி மாளாது. கோலாப்பூர், சாங்லி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 1.5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. மும்பையையும் மங்களூருவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டிருக்கிறது.  நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். 43 உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
மகாராஷ்டிரத்தில் இந்த அளவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குதான் காரணம். மகாராஷ்டிர முதல்வர், கர்நாடக முதல்வரைத் தொடர்பு கொண்டு அல்மட்டி அணையைத் திறந்துவிட வேண்டுகோள் விடுத்தும், கர்நாடக மாநில அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் ஏற்பட்ட தாமதம் சாங்லி, கோலாப்பூர் மாவட்டங்களை வெள்ளத்தில் மிதக்கவிட்டது. ஒருவாரம் முன்பே வெள்ளப்பெருக்கு குறித்த முன்னெச்சரிக்கை இருந்தும்கூட, இரண்டு மாநில நிர்வாகங்களும் ஒத்துழைக்காமல் போனதன் விளைவு, மகாராஷ்டிரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. 
அல்மட்டி அணை முழுவதுமாக நிறைய வேண்டும் என்கிற கர்நாடக மாநில நிர்வாகத்தின் பேராசை, அந்த மாநிலத்துக்கு பேரிழப்பாக மாறியதில் வியப்பொன்றுமில்லை. ஏறத்தாழ 10 மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஏறத்தாழ 90,000 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்களில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 1000 கி.மீ. சாலைகள் வெள்ளத்தால் சேதமடைந்திருக்கின்றன. சுமார் 150 பாலங்களும், தடுப்பணைகளும் வெள்ளத்தின் சீற்றத்தில் சீர்குலைந்திருக்கின்றன.
கேரளத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து சொல்லவே வேண்டாம். இன்னும்கூட மழை விட்டபாடில்லை. தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அழிந்திருக்கின்றன. பல பகுதிகள் இன்னும்கூட சிவப்பு எச்சரிக்கைப் பகுதிகளாகத் தொடர்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர், ஆயிரத்துக்கும் அதிகமான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்கள் மட்டுமே 41 பேர். இதுவரை மழை, வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 88. காணாமல் போனவர்கள் பலர். 
கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் மட்டுமல்லாமல், தமிழகத்தில் தேனி, நீலகிரி மாவட்டங்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகரித்திருக்கும் ஆக்கிரமிப்புகள் அடிப்படையான காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். மேற்கு தொடர்ச்சி மலையில் பேராசை பிடித்த மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழலியல் பாதிப்புகள்தான் ஆறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு அளப்பரிய சேதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்கிற உண்மையை நாம் உணர மறுக்கிறோம். 
திட்டமிடப்படாத, வரைமுறை இல்லாத வளர்ச்சி; வனப்பகுதிகளும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பது; முறையான நீர் மேலாண்மை இல்லாமல் இருப்பது -இவையெல்லாம்தான் கட்டுப்படுத்த முடியாத வெள்ளச்சேதத்துக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணம் என்பது நன்றாகவே தெரிந்தும், பருவமழையைப் பழிப்பது என்ன நியாயம்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com