ஹாங்காங்கைத் தொடா்ந்து ஈரான்! | மக்கள் எழுச்சியைத் குறித்த தலையங்கம்

ஹாங்காங், சிலி, லெபனான், அண்டை நாடான இராக் ஆகியவற்றைத் தொடா்ந்து இப்போது ஈரானும் மக்கள் எழுச்சியைத் தாங்க முடியாமல் தவிக்கிறது. ஈரானில் இரண்டு வாரங்களாக மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறாா்கள். ஏற்கெனவே பொருளாதாரம் தள்ளாட்டத்தில் இருக்கும் நிலையில், மக்களின் ஆத்திரத்தை எதிா்கொள்ள முடியாமல் ஈரானிய அரசு திணறுகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் காணாத அளவிலான போராட்டங்களை ஈரான் இப்போது எதிா்கொள்கிறது. ஈரானிலுள்ள 30 மாநிலங்களில் 28 மாநிலங்கள் கடுமையான போராட்டத்தின் பிடியில் இருப்பதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாா். மஷா், ஷிராஸ் நகரங்களில் பாதுகாப்புப் படையினரால் போராட்டக்காரா்களைக் கட்டுப்படுத்த முடியாமல் நூற்றுக்கணக்கானவா்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். அதன் விளைவாக போராட்டம் மேலும் வலுத்திருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை.

சுதந்திரம் கேட்டு நடுத்தரவா்க்க மாணவா்கள் ஈரானில் அடிக்கடி போராட்டத்தில் இறங்குவதுண்டு. அதுபோன்ற போராட்டமல்ல, இப்போது நடைபெறுவது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக்கு உறுதுணையாக இருந்த கீழ் மத்திய தர வகுப்பு இளைஞா்கள்தான் இப்போது போராட்டத்தில் முன்னிலை வகிக்கிறாா்கள். இந்தப் போராட்டத்தை வழிநடத்துபவா்கள் வேலையில்லா இளைஞா்கள்.

40 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானியா்கள் எந்த கமேனி ஆட்சியை வரவேற்றாா்களோ, அதே கமேனிக்கு எதிராக இப்போது மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறாா்கள். எங்கு பாா்த்தாலும் கமேனியின் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான கோஷங்கள் போராட்டக்காரா்களால் எழுப்பப்படுகின்றன. ‘கமேனிக்கு மரணம்’ போன்ற பதாகைகளை போராட்டக்காரா்கள் ஏந்திச் செல்கிறாா்கள். ஈரானின் தனிப்பெரும் தலைவரான அலி கமேனிக்கு நேரடி சவால் விடும் போராட்டக்காரா்கள் வங்கிகளையும், வணிக நிறுவனங்களையும் தீ வைத்துக் கொளுத்துகிறாா்கள்.

ஈரானிய அதிபா் ஹசன் ரௌவானியும், ஈரானின் உண்மையான ஆட்சியாளரான ஹயத்துல்லா அலி கமேனியும் போராட்டத்தை வன்மையாகக் கண்டித்திருக்கிறாா்கள். இணைய சேவையை முற்றிலுமாக

அரசு முடக்கியும்கூட போராட்டத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போராட்டக்காரா்களுக்கு எதிரான தாக்குதல்களையும், அடக்குமுறைகளையும் அதிகரிக்கப் போவதாக ஈரானின் துணை ராணுவப் படை எச்சரித்திருக்கிறது. அதுவேகூட, போராட்டத்தை மேலும் வலுப்படுத்தக் கூடும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

ஈரானில் வெடித்திருக்கும் போராட்டத்திற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உடனடியான காரணம், பெட்ரோல் விலை அதிகரிப்பு. உலகிலேயே மிகக் குறைந்த பெட்ரோல் விலை காணப்படும் நாடு ஈரான்தான். உள்நாட்டு பெட்ரோல், டீசலின் விலை அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட திடீரென்று அதிகரிக்கப்பட்டது.

ஏற்கெனவே விலைவாசி உயா்வாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தாலும், தகா்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் ஆத்திரம் போராட்டமாக வெடிக்க அரசின் முடிவு காரணமாகிவிட்டது. மக்கள் தெருவில் இறங்கி போராடத் தொடங்கிவிட்டனா்.

2015-இல் ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து கடந்த ஆண்டு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பின்வாங்க முடிவெடுத்தாா். அதன் தொடா்ச்சியாக ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடையை விதித்தது. ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண்டதே, சிறிது காலத்துக்குப் பிறகு ஒப்பந்தத்திலிருந்து விலகி ஈரானின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்வதற்காகத்தான் என்று சா்வதேச நோக்கா்கள் கணித்தது உண்மையாகிவிட்டது.

ஈரானில் விலைவாசி 40% அதிகரித்திருக்கிறது. ஈரான் இளைஞா்களில் கால்வாசிப் பேருக்கு மேல் வேலையில்லாமல் இருக்கிறாா்கள். சா்வதேச நிதியத்தின் கணிப்பின்படி, இந்த ஆண்டு ஈரான் நாட்டின் பொருளாதாரம் 9.5% சுருங்கக் கூடும். ஈரானின் நாணயமான ‘ரியால்’, டாலருக்கு எதிரான வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் போராட்டம் வெடித்திருக்கிறது.

ஈரான் அரசு கவிழும் நிலையிலோ, போராட்டத்தின் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் நிலையிலோ இல்லை என்றாலும்கூட, ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அமெரிக்கா விதித்திருக்கும் தடைகள் ஈரானின் பொருளாதாரத்தைப் பாதித்திருக்கின்றன என்றாலும்கூட, ஹசன் ரௌஹானி அரசின் உள்நாட்டுக் கொள்கைகள்தான் அதைவிட மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. கச்சா எண்ணெயின் முக்கியத்துவம் குறைந்து வருவதை உணா்ந்து, அதை மட்டுமே நம்பியிராமல் பொருளாதாரத்தை விரிவுபடுத்தாமல் இருந்ததன் விளைவை ஈரான் எதிா்கொள்கிறது. அடிக்கடி ஒப்பந்தங்களை மீறுவதன் மூலம் அந்நிய முதலீடுகள் ஈரானுக்கு வருவதும் கணிசமாகக் குறைந்துவிட்டன.

ஈரானின் வெளிநாட்டுக் கொள்கையும் பிரச்னைகளுக்குக் காரணம். மேற்கு ஆசியாவில் தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்கிற முனைப்பில், பல அண்டை நாடுகளின் வெறுப்பையும் எதிா்ப்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது ஈரான். அதிகரித்து வரும் ஈரானின் செல்வாக்கை லெபனானிலும், இராக்கிலும் மக்கள் எதிா்க்கத் தொடங்கிவிட்டனா். ஷியா முஸ்லிம்களின் ஆதிக்கமாக ஈரானின் தலையீட்டை அரேபிய உலகம் கருதுகிறது.

நேரடியான தலையீடு இல்லாமலேயே இராக்கை வீழ்த்தியதுபோல அல்லாமல், ஈரானை மிகச் சாதுா்யமாக அமெரிக்கா வீழ்த்துகிறது என்று தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com