நமக்கு யாா் பாதுகாப்பு? | அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு அந்தஸ்து குறித்த தலையங்கம்


அரசுமுறைப் பயணமாக இந்தியா வருவதற்கு ஸ்பெயின் நாட்டு அரசரும், அரசியும் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் பயணிக்க இருந்த ராஜகுடும்ப விமானத்தில் சிறிய பிரச்னைகள் எழுந்தபோது தங்களது அரசுமுறைப் பயணத்தை அவர்கள் ரத்து செய்யவில்லை. 

அப்போது ஸ்டாக்ஹோமிலிருந்து தில்லிக்குக் கிளம்பத் தயாராக இருந்தது ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம். கொஞ்சம்கூடத் தயங்காமல் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானத்தில் தங்களது இந்திய அரசுமுறைப் பயணத்தைத் தொடர முற்பட்டனர் அரசர் கால் குஷ்டாப்பும், அரசி சில்வியாவும்.

தில்லியில் வந்திறங்கியது ஏர் இந்தியா விமானம். ஸ்பெயின் நாட்டு தூதரகமும், இந்திய அரசும் பயணிகள் விமானத்தில் வந்திறங்கும் அரச தம்பதியருக்கு பெரும் வரவேற்பை அளித்து அவர்களுக்கு ஏற்பட்ட மரியாதைக் குறைவை ஈடுகட்டத் தயார் நிலையில் இருந்தனர். ஆனால், விமானத்தில் இருந்து இறங்கிய அரசரும் அரசியும் தங்களுடைய கைப்பெட்டிகளைத் தாங்களே எடுத்துச் சென்றனரே தவிர, உதவிக்கு வந்தவர்களை மிகுந்த பணிவுடன் தவிர்த்துவிட்டனர்.

ஏர் இந்தியாவில் பயணித்தவர்களும், விமான ஓட்டிகளும், விமானப் பணிப் பெண்களும் மட்டுமல்லர், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமே ஸ்பெயின் நாட்டு அரசரையும், அரசியையும் அண்ணாந்து பார்த்து வியப்பில் ஆழ்ந்தது. 
ஒருபுறம் ஸ்பெயின் அரசர் சாமானியராக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. இன்னொருபுறம் சாமானியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படும் ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தில் தனிச் சலுகைகள் வழங்கப்படுவது குறித்த விவாதம். 

நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டு வரும் சிறப்புப் பாதுகாப்பை ரத்து செய்யும் நோக்கில், சிறப்புப் பாதுகாப்புப் படையில் (எஸ்பிஜி) மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களுக்கான மசோதா இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புக்கு இடையில் நிறைவேறியது. தங்களுக்கு சிறப்புச் சலுகை வேண்டாம் என்று ஸ்பெயின் ராஜ தம்பதியர் தவிர்க்கிறார்கள் என்றால், தங்களது தலைவியின் குடும்பத்துக்கு சிறப்புப் பாதுகாப்புப் படை சலுகை வழங்கப்பட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியினர் வற்புறுத்துகிறார்கள்.

1984-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, சிறப்புப் பாதுகாப்புப் படையை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. பிரதமருக்கும், முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கும் சிறப்புப் பாதுகாப்பு அளிக்கும் சட்டம் 1988-இல் நிறைவேற்றப்பட்டது. 

இப்போது அந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தால் அவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதன்படி, பிரதமரும், அவருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படும். பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை சிறப்புப் பாதுகாப்பு தொடரும். 

அவர்களைத் தவிர, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மிக முக்கியமான ஏனைய பிரமுகர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்கு முன்னால், முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்ம ராவ், ஐ.கே. குஜ்ரால், சந்திரசேகர் ஆகியோருக்கான சிறப்புப் பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டு இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புப் பாதுகாப்பு இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டது. 

இந்தப் பிரச்னையில் சோனியா காந்திக்கும், அவரது வாரிசுகளான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேராவுக்கும் சிறப்புப் பாதுகாப்பு அகற்றப்பட்டது குறித்து காங்கிரஸ்காரர்கள் பிரச்னை எழுப்புவதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சிறப்புப் பாதுகாப்பு அகற்றப்பட்டபோது அது குறித்துக் கவலைப்படாத காங்கிரஸ்காரர்கள், இப்போது சோனியா காந்திக்கும் அவரது வாரிசுகளுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியிருப்பதில் குற்றம்காண முற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இந்தியாவில் காணப்படும் அரசியல் தலைவர்களின் சிறப்பு அந்தஸ்து கலாசாரம், அவர்களது அரசியல் போலித்தனத்தை வெளிச்சம் போடுகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு மிக மோசமாக சிறப்பு அந்தஸ்து கோருபவர்கள் கிடையாது. சிறப்பு அந்தஸ்து, சிறப்புப் பாதுகாப்பு, இசட் பிளஸ் பாதுகாப்பு இவையெல்லாம் இந்தியாவில் பலருக்கும் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றனவே தவிர, பாதுகாப்புக்காக கோரப்படுவதில்லை. 

பிரிட்டனில் மிக முக்கியமான பிரமுகர் (விவிஐபி) என்று அதிகாரப்பூர்வமாகக் கருதப்படுபவர்கள் 84 நபர்கள் மட்டுமே; பிரான்ஸ் (109), ஜப்பான் (125), ஜெர்மனி (142), ஆஸ்திரேலியா (205),  அமெரிக்கா (252), தென்கொரியா (282), ரஷியா (312), சீனா (435) ஆகிய நாடுகளில் மிக முக்கியமான பிரமுகர்களாக அடையாளம் காணப்படும் அனைவருக்கும் சிறப்புப் பாதுகாப்பு அல்ல, சாதாரண பாதுகாப்பேகூட வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசு கருதினால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் 5,79,092 பிரமுகர்கள் சிறப்பு அந்தஸ்து பெறுகிறார்கள். இதில் இசட் பிளஸ் பாதுகாப்பு, இசட் பாதுகாப்பு, ஒய் பாதுகாப்பு, எக்ஸ் பாதுகாப்பு என்று பல பிரிவுகளில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் புடைசூழ மக்கள் பிரதிநிதிகள் வலம் வருவது ஜனநாயகத்துக்கு இழுக்கு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com