பூச்சாண்டித் தீர்மானம்!| அமெரிக்க அதிபருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் குறித்த தலையங்கம்

அமெரிக்காவின் வரலாற்றில் நான்காவது முறையாக அதிபருக்கு எதிராகப் பதவி நீக்க நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. அதிபராக இருந்த ரிச்சர்டு நிக்ஸன் தன் மீது பதவி நீக்க நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே, தனது கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள, அவராகவே பதவியிலிருந்து விலகிவிட்டார். அதிபர்களாக இருந்த ஆண்ட்ரூ ஜான்ஸனும், பில் கிளிண்டனும் அமெரிக்காவின் மக்களவையான காங்கிரஸால் பதவி நீக்கத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டார்கள் என்றாலும், அமெரிக்காவின் மேலவையான செனட், அந்தத் தீர்மானத்தை நிராகரித்து அவர்களைக் காப்பாற்றிவிட்டது.
 தேசத் துரோகம், கையூட்டு, கடுமையான குற்றங்கள், முறைகேடான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக பதவியிலிருந்து அதிபரை அகற்றுவதற்கு அமெரிக்க அரசியல் சாசனத்தில் வழிகோலப்பட்டிருக்கிறது. அதிபர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைக்கும் விதத்திலும், அதிபர் பதவியின் கெளரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொள்வதும்கூட பதவியிலிருந்து அகற்றுவதற்கான காரணங்களாக அமெரிக்காவின் அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது. இதுவரை எந்தவோர் அதிபரும் அமெரிக்காவில் பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
 மக்களவையான காங்கிரஸில், அவையில் இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வாக்களித்ததன் மூலம் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. அந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவர் அடுத்தகட்ட பதவி நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துத் தீர்மானிப்பார். நீதித் துறை அமர்வு, அறிக்கையில் குறிப்பிடும் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட பதவி நீக்க நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கும்.
 அதற்குப் பிறகு மேலவையான செனட்டில் பதவி நீக்கப் பரிந்துரை விசாரணைக்கு வரும். அந்த விசாரணைக்கு அமெரிக்காவின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமை வகிப்பார். காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுத் தரப்பு வழக்குரைஞர்களாகச் செயல்படுவார்கள். தன்னுடைய தரப்பு வாதத்தை அதிபர் எடுத்துரைக்க வழக்குரைஞர்களை நியமிப்பது மட்டுமல்லாமல், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த எல்லாவித ஆவணங்களையும் கோரிப் பெறும் உரிமையும் பெறுகிறார்.
 பதவி நீக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் வாக்களித்த பிறகு, செனட்டில் விசாரணை தேவைதானா என்பதை அரசியல் சாசனம் வலியுறுத்தி இருக்கிறதா என்கிற விவாதம் நீண்ட காலமாகவே நிலவுகிறது. ஆனால், தற்போதைய செனட் விதிமுறைகளின்படி விசாரணை அவசியமாகிறது.
 விசாரணை நடைபெறும்போதே அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவரும் அதிகாரம் செனட் உறுப்பினர்களுக்கு உண்டு. அந்தத் தீர்மானத்துக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தால் பதவி நீக்க நடவடிக்கை அத்துடன் கைவிடப்படும். செனட்டில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. அதாவது, 67 செனட் உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் அதிபர் டிரம்ப்பைப் பதவியிலிருந்து அகற்ற முடியும். பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவரும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 45 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்பது உறுதி.
 அதிபர் டிரம்ப்பின் மீது இரண்டு காரணங்களுக்காக பதவி நீக்க நடவடிக்கையை ஜனநாயகக் கட்சி மேற்கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு விரோதமாக 2020 அதிபர் தேர்தலில் தனக்கு உதவும்படி உக்ரைன் நாட்டுக்கு அவர் அழுத்தம் கொடுத்தது முதலாவது காரணம். அவரின் செயல்பாடுகள் மீது விசாரணை நடத்த முற்பட்ட காங்கிரஸின் முயற்சிகளைத் தடுக்க முற்பட்டது இரண்டாவது காரணம்.
 ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்புள்ள ஜோ பிடனின் குடும்பத்தினரின் வியாபாரத் தொடர்புகள் குறித்து விசாரிக்கும்படி உக்ரைன் நாட்டுக்கு மறைமுகமான அழுத்தத்தை அதிபர் டிரம்ப் கொடுத்தார் என்பது ஜனநாயகக் கட்சியின் குற்றச்சாட்டு. ஜோ பிடனுக்கு எதிராக விசாரணை நடத்த ஒப்புக்கொண்டால்தான் வெள்ளை மாளிகையில் தன்னைச் சந்திக்க உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு வாய்ப்பளிக்க முடியும் என்று அதிபர் டிரம்ப் கூறியதாக ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
 உக்ரைன் நாட்டுக்கு 391 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,781 கோடி) ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது. அதைக் கொடுக்காமல் நிறுத்தி வைத்து அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாகவும் ஜனநாயகக் கட்சி கூறுகிறது. உள்நாட்டில் அதிபரின் தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக அந்நிய நாட்டு உதவியைக் கோருவதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறார் என்பதுதான் முதலாவது குற்றச்சாட்டு. காங்கிரஸின் விசாரணையை முடக்கும் விதத்தில் ஒத்துழைப்பு தர வேண்டாம் என்று அரசுத் துறைகளை வெள்ளை மாளிகை தடுத்தது இன்னொரு குற்றச்சாட்டு.
 தன் மீது தொடுத்திருக்கும் பதவி நீக்க நடவடிக்கை குறித்து அதிபர் டிரம்ப் சற்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கைகள் தனது வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்தி அதிபர் தேர்தலைத் தனக்குச் சாதகமாக மாற்றும் என்று அவர் கருதுகிறார். கருத்துக்கணிப்புகளும் அவருக்குச் சாதகமாகத்தான் காணப்படுகின்றன.
 பதவி நீக்க நடவடிக்கையின் மூலம் நடுநிலை வாக்காளர்களின் ஆதரவை ஈர்க்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
 ஜனநாயகக் கட்சி வேட்பாளர் யார் என்பதுதான் அதிபர் டிரம்ப்பின் சவாலாக இருக்குமே தவிர, செனட்டில் உறுதியாக நிராகரிக்கப்பட இருக்கும் பதவி நீக்கத் தீர்மானம் அவரைப் பொருத்தவரை வெறும் பூச்சாண்டி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com