பந்திப்பூர் எச்சரிக்கை!

பந்திப்பூர் வனப்பகுதியில் பரவியிருக்கும் காட்டுத் தீ கடந்த ஆறு நாள்களாக கட்டுக்கடங்காமல் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

பந்திப்பூர் வனப்பகுதியில் பரவியிருக்கும் காட்டுத் தீ கடந்த ஆறு நாள்களாக கட்டுக்கடங்காமல் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள தலைசிறந்த புலிகள் சரணாலயம் அமைந்திருக்கும் வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகள் சாம்பலாகியிருக்கின்றன. காட்டிலுள்ள மரங்கள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான பறவைகள், சிறு மிருகங்கள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்டவற்றின் குட்டிகள், ஏனைய விலங்குகள் என்று காட்டுத் தீயால் கபளீகரம் செய்யப்பட்டிருப்பவை ஏராளம் ஏராளம். தங்களது இருப்பிடங்களிலிருந்து இடம் பெயர்ந்து தப்பியிருக்கும் பறவைகளும் மிருகங்களும் அதிர்ஷ்டம் செய்தவை.
கடந்த வெள்ளிக்கிழமைதான் பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவி வருவது தெரியவந்தது. இந்திய வனக் கண்காணிப்புத் துறை, விண்கோள் தகவல்படி பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவுவதை உணர்ந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு  மாநில வனத்துறைக்கு தகவல் தெரிவித்தது. வனத்துறை சுதாரித்துக் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் தீக்கிரையாகி விட்டிருந்தன. 
247 ச.கி.மீ. பரப்புள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவும், புலிகள் சரணாலயமும் இந்தியாவின் மிகவும் முக்கியமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இங்கே 400-க்கும் அதிகமான புலிகள் இருப்பதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான யானைகள் இந்த வனப் பகுதியில்தான் காணப்படுகின்றன. அழிந்து வரும் பல விலங்கினங்கள் பந்திப்பூர் வனப்பகுதியில் இருப்பவை. அதனால்தான் பந்திப்பூர்  வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ சூழலியல்வாதிகளையும், வனவிலங்குப் பாதுகாவலர்களையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியிருக்கிறது. 
கர்நாடகத்திலுள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவும், நாகர்ஹோலே தேசிய பூங்காவும், தமிழ்நாட்டிலுள்ள முதுமலை பகுதியையும், கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியையும் ஒட்டியிருப்பவை. இந்தியாவின் மிகப் பெரிய வனப்பகுதியை உள்ளடக்கியவை. கடந்த சில நாள்களாகவே கடுமையான வெயில் காணப்பட்டதாலும், பலமான காற்று வீசுவதாலும் அசுர வேகத்தில் காட்டுத் தீ பரவி கடந்த ஆறு நாள்களில் 3,000-த்துக்கும் அதிகமான ஹெக்டேர் வனப்பகுதியை சாம்பலாக்கி இருக்கிறது. தீயை அணைப்பதற்குப் போதுமான தண்ணீர் வசதி அந்தப் பகுதியில் இல்லாமல் இருந்ததும் அதற்கு ஒரு முக்கியமான காரணம். 
பந்திப்பூர் வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ உருவானதற்கு தட்பவெட்ப நிலை மட்டுமே காரணமல்ல என்று தெரியவந்திருக்கிறது. வேண்டுமென்றே பழிவாங்கும் எண்ணத்துடன் பந்திப்பூர் வனப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. 
கர்நாடக வனத்துறையினர் ஆண்டுதோறும் கோடைக் காலத்திற்கு முன்பாக உள்ளூர்வாசிகளை தீ கண்காணிப்பு ஊழியர்களாக தற்காலிகப் பணிக்கு நியமிப்பது வழக்கம். பந்திப்பூர் வனத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வனத் தீ கண்காணிப்பாளர் என்று 10 பேர் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு வனத்துறை நாள்தோறும் ரூ.320 ஊதியம் வழங்கும். வனப் பகுதியில் தீ ஏற்பட்டால் உடனடியாக அது குறித்துத் தகவல் தெரிவிப்பதும், காட்டுத் தீயை அணைப்பதும்தான் அவர்கள் பணி. 
இந்த ஆண்டு இன்னும் தீ கண்காணிப்பு  ஊழியர்கள் நியமிக்கப்படாததால், அவர்களில் சிலர் வேண்டுமென்றே அரசை எச்சரிப்பதற்காக மூட்டிய நெருப்புதான் இப்போது காட்டுத் தீயாகப் பரவி 3,000-த்துக்கும் அதிகமான ஹெக்டேர் வனப்பகுதி சாம்பலாகியிருக்கிறது. ஆயிரக்கணக்கான விலங்குகளையும், பறவைகளையும், ஊர்வனவற்றையும், லட்சக்கணக்கான பூச்சிகளையும், விலைமதிப்பில்லாத மரங்களையும் சுட்டெரித்து சாம்பலாக்கி இருக்கிறது. காட்டுத் தீக்குக் காரணம் எதுவாக இருந்தாலும் இப்போது ஏற்பட்டிருக்கும் இழப்பை மீட்டெடுக்க குறைந்தது கால் நூற்றாண்டு காலமாகும் என்பதுதான் வேதனையிலும் வேதனை. 
இந்தியாவின் காடுகள் மிகப்பெரிய பொக்கிஷங்கள். சுயநலவாதிகள் ஆளுக்குஆள் அதிலிருந்து ஆதாயம் பெறத் துடிக்கிறார்கள். சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், கனிம வளங்களைத் தோண்டி எடுத்தல், வனங்களை ஆக்கிரமித்துத் தோட்டங்களாக்குதல் என்று இந்தியாவின் வனச் செல்வங்கள் கொள்ளை போகின்றன. 
ஆக்கிரமிப்பாளர்களையும் உண்மையான காட்டுவாசிகளாக இல்லாதவர்களையும் வெளியேற்ற உச்சநீதிமன்றம் முற்பட்டால், அரசியல் கட்சிகளும் ஆட்சியிலிருப்பவர்களும் அதிகாரிகளும் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்கின்றனர். உண்மையான வனப்பகுதியினருக்கு அங்கே வசிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமானால், அதிகார வர்க்கம் அகற்றி நிறுத்தப்பட வேண்டும். அது நடக்கப்போவதில்லை, அதனால், வனங்கள் சூறையாடப்படுவதும் தடுக்கப்படப் போவதில்லை.
அன்றைய இந்திரா காந்தி அரசு கானுயிர் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், அதே கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங் அரசு 35 ஆண்டுகளுக்குப் பிறகு வன உரிமைச் சட்டத்தை இயற்றியது. இவை ஒன்றுக்கொன்று முரணானவையாக இருப்பதால் ஏற்பட்டிருக்கும் குழப்பம்தான் வனங்கள் சூறையாடப்படுவதற்கு மிக முக்கியமான காரணம். 
வனப் பாதுகாப்பைப் பொருத்தவரை, தற்காலிகத் தீர்வுகளை ஏற்படுத்த முற்படுகிறோமே தவிர, நிரந்தரத் தீர்வு காண யாரும் தயாராக இல்லை. தேசிய வனவிலங்கு ஆணையம் என்கிற அமைப்பு கூடியே பல வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் பின்னணியில்தான் இப்போது பந்திப்பூரில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ,  பேரழிவை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 
இன்றைய தலைமுறை மனித இனத்தை இயற்கை மன்னிக்காது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com