அவலை நினைத்து...

ஊர் வாயை அடைக்க முடியாது என்கிற அடிப்படை எதார்த்தத்தைக்கூட நமது ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளாமல்

ஊர் வாயை அடைக்க முடியாது என்கிற அடிப்படை எதார்த்தத்தைக்கூட நமது ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது. மக்களாட்சியில் மட்டுமல்ல, எந்தவிதமான ஆட்சி முறையாக இருந்தாலும் கூட ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களும், எதிரான நடவடிக்கைகளும் இருக்கத்தான் செய்யும். அவற்றை எப்படி பக்குவமாகக் கையாள்கிறார்கள் என்பதில்தான் ஆட்சியாளர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது.
மத்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் சில கடுமையான பிரிவுகளைச் சேர்க்க நினைக்கிறது. இது குறித்து, தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வலியப்போய் விமர்சனங்களை விலைக்கு வாங்க நரேந்திர மோடி அரசு முற்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
பொய்யான தகவல்களையும், ஆதாரமற்ற வதந்திகளையும், சட்டவிரோதமான செய்திகளையும் பரப்பும் இணையதளங்களையும், செயலிகளையும் முடக்குவதற்குத் தேவையான விதிகளையும், சட்டங்களையும் இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதுதான் இப்போது அரசால் விவாதிக்கப்படும் நடவடிக்கை. எந்த நோக்கத்துடன் இந்தப் புதிய விதிமுறைகளை அரசு சேர்க்க விரும்புகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறாது என்பது மட்டுமல்ல, அதற்கு நேர் எதிரான விளைவுகளை ஏற்படுத்தும்.
நரேந்திர மோடி அரசு மட்டுமல்ல, இதற்கு முன்னால் இருந்த எல்லா அரசுகளுமே மக்களுக்குக் கூடுதல் அதிகாரமும் சுதந்திரமும் வழங்குவதற்குப் பதிலாக, எப்படியெல்லாம் குடிமக்களின் செயல்பாடுகளையும், சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த முடியுமோ அவற்றையெல்லாம் முனைப்புடன் செயல்படுத்த முற்பட்டதை கடந்த கால வரலாறு பதிவு செய்கிறது. அதற்கு அவசரநிலைச் சட்டம் ஓர் எடுத்துக்காட்டு!
மக்களின் எல்லாச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் எடுக்கப்படும் அரசின் முயற்சிகள், காவல் துறைக்கும் அதிகாரிகளுக்கும் வரம்பில்லாத அதிகாரங்களை வழங்கி விடுகின்றன. அது கண்காணிப்பு ஆட்சி முறையில் முடிகிறது. காவல் துறையோ அரசு அதிகாரிகளோ நினைத்தால் எந்தவொரு பிரச்னையையும் ஏதாவது ஒரு சட்டப் பிரிவின் கீழ் கொண்டுவர முடியும் என்கிற நிலையை ஏற்படுத்துகிறது. அதுதான் லஞ்ச ஊழலின் ஊற்றுக்கண்!
கோடிக்கணக்கான இணையதள, சமூக ஊடகப் பயனாளிகளைக் கண்காணிப்பது என்பது எளிதான பணியல்ல. அவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் செய்திகள் அனைத்தையும் தணிக்கை செய்வதோ, கட்டுப்படுத்துவதோ இயலாது. இப்போதிருக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் காணப்படும் விதிமுறைகளின்படி, சில குறிப்பிட்ட தகவல்களை, செய்திகளை முடக்கிவிட முடியும். அதுதான் அரசின் கண்காணிப்பு அமைப்புகளால் செய்ய முடிகின்ற அதிகபட்ச ஒழுங்காற்றுதல் நடவடிக்கை.
இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் செய்யப்படும் பதிவுகளுக்கு அந்த இணையதளத்தையோ, செயலியையோ பொறுப்பேற்க வைப்பது என்பது அறிவார்ந்த செயல் அல்ல. தொலைபேசி மூலம் செய்திப் பரிமாற்றங்கள் நடந்தன என்பதற்காகத் தொலைபேசி நிறுவனத்தைக் குற்றப்படுத்துவதுபோல இருக்கிறது இந்த முயற்சி. நமது அதிகாரிகளால் எப்படி இப்படியெல்லாம் விபரீதமாகவும், விசித்திரமாகவும் சிந்திக்க முடிகிறது என்பதுதான் வியப்பாகவும், நகைப்புக்கிடமாகவும் இருக்கிறது.
இணையதளங்கள் மூலமாகவும், சமூக ஊடகங்களிலும் பொய்யான தகவல்களும், அடிப்படை ஆதாரமே இல்லாத வதந்திகளும் பரப்பப்படுகின்றன என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்தில்லை. தரக்குறைவான பகடிகள் மீம்ஸ் என்கிற பெயரில் கட்செவி அஞ்சல் மூலமாகவும், முகநூல் வழியாகவும் பரப்பப்படுகின்றன என்பதும் உண்மை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல் தளங்களில் மட்டுமல்லாமல், எல்லாத் துறையினரும், தனி நபர்களும் இவற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.
நொடிப் பொழுதில் கோடிக்கணக்கானவர்களைப் போய்ச் சேர்ந்துவிடும் அதுபோன்ற பதிவுகளைக் கண்காணிப்பதோ, தணிக்கை செய்வதோ அசாத்தியம். திரைப்படங்களின் திருட்டு விசிடிக்களைக்கூட தடுக்க முடியாத நிலையில், இணையதள, செயலிப் பதிவுகளைத் தடுக்க முற்படுவது சாத்தியமல்ல. தவறான செய்தி, தரக்குறைவான பதிவு போன்றவற்றை மக்கள்தான் தரம் பிரித்துத் தவிர்க்க வேண்டும். அவற்றை மறுபதிவு செய்தும், ஆமோதித்தும் பெரிதுபடுத்தக் கூடாது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், பல பொய்யான தகவல்களும், விமர்சனங்களும், பகடிகளும் சமூக வலைதளங்களின் மூலமும், செயலிகள் மூலமும் பரப்பப்படுவது இயற்கை. இதற்கு அமைச்சர்கள் பலரும், முன்னணி எதிர்க்கட்சி, ஆளும் கட்சித் தலைவர்களும்கூட விதிவிலக்கல்ல. இந்த நேரத்தில் இப்படியொரு சட்ட விதிமுறையைத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் கொண்டுவருவது என்பது, எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு வாய்ப்பூட்டு போடும் முயற்சியாகத்தான் கருதப்படும். அது அரசுக்கு எதிரான மன நிலையைத்தான் தோற்றுவிக்குமே தவிர சாதகமாக இருக்காது.
இந்தியாவில் இணைய சேவைத் துறையையே முடக்கிப் போட்டுவிடக்கூடிய அரசின் முடிவால், பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். உலகமயச் சூழலில், வெளிநாடுகளிலிருந்து பதிவு செய்யப்படும் செய்திகளை நாம் எப்படி தடுத்துவிட முடியும்?
தொழில்நுட்ப வளர்ச்சியால் சமுதாயம் அடையும் நன்மைகளைப் போலவே இதுபோன்ற தீமைகளும் ஏற்படத்தான் செய்யும். அதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமே தவிர, தவிர்த்துவிட முடியாது. சட்டம் போட்டுத் தடுக்கவும் முடியாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com