கர்'நாடக' குழப்பம்!

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்ததைத் தொடர்ந்து கர்நாடக அரசியல் புதியதொரு திருப்பத்தை (குழப்பத்தை) நோக்கி நகர்ந்திருக்கிறது. முதலமைச்சர் விரும்பினால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வழிகோலுவதாக சட்டப் பேரவைத் தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார் அறிவித்திருக்கிறார் என்றாலும், அந்த அறிவிப்புக்குப் பின்னால் சில சூட்சுமங்கள் அடங்கியிருக்கின்றன. 
கடந்த ஆண்டு  நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. முந்தைய தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டு, வெறும் 80 இடங்களில் மட்டுமே  வெற்றி பெற முடிந்தது.  மதச்சார்பற்ற ஜனதாதளமும் கடந்த தேர்தலில் பெற்றிருந்ததைவிட, 3 இடங்கள் குறைவாக 37 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 104 இடங்களுடன் மிக அதிகமான எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்றாலும், தனிப் பெரும்பான்மையை எட்ட அந்தக் கட்சிக்கு 9 இடங்கள் தேவைப்பட்டன.
மிக அதிகமான இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்பதால், சட்டப்பேரவை பாஜக தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு அவகாசமும் வழங்கினார்.  224 இடங்கள் உள்ள அவையில் 104 இடங்கள் மட்டுமே பெற்றிருக்கும் கட்சி  ஆட்சி அமைக்கும்போது, தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஏனைய கட்சிகளிலிருந்து உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுப்பதைத் தடுக்க முடியாது. அதன் பின்னணியில் குதிரை பேரம் நடைபெறும் என்பதைக் காரணம் காட்டி, அதிக பலம் கொண்ட கட்சி பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதைத் தடுப்பதைவிட, சட்டப்பேரவையைக் கலைத்து மறு தேர்தலுக்கு வழிகோலுவதுதான் தீர்வு.
1952-இல் அன்றைய சென்னை ராஜதானியில் ராஜாஜியின் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இருந்து  அதற்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அமைந்த சிறுபான்மை அரசுகள் அனைத்துமே ஏதாவது பேரங்களோ, சமரசங்களோ இல்லாமல்  அமைந்ததில்லை. அந்த முன்னுதாரணங்களின் அடிப்படையில்தான் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜகவுக்கு  ஆட்சி  அமைக்க வாய்ப்பளித்து, பெரும்பான்மையை நிரூபிக்க போதிய அவகாசமும் வழங்கினார்.
இந்தப் பின்னணியில்தான் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு முன்னால் கடுமையாக எதிர்த்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க வாய்ப்பு கோரியது. 224 உறுப்பினர்கள் கொண்ட அவையில்  80 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸும், 37 உறுப்பினர்கள் கொண்ட மதச்சார்பற்ற ஜனதாதளமும் தங்களுக்குள் குதிரை பேரத்துக்குப் பதிலாக இன்னொரு வகையான  பதவிப் பேரத்தை செய்து கொண்டன. அதன்படி 37 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு முதலமைச்சர் பதவியையே விட்டுக்கொடுக்க முன்வந்தது காங்கிரஸ் கட்சி. 
தங்களது உறுப்பினர்களை இழுப்பதற்கு பாஜக  குதிரை பேரம் நடத்துகிறது என்கிற குற்றச்சாட்டுடன் உச்சநீதிமன்றத்தை அணுகி முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கால அவகாசம் வழங்காமல்  உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவருவதற்கான தீர்ப்பையும் காங்கிரஸ்-மஜத பெற்றது. உச்சநீதிமன்றம்  அந்தக் கோரிக்கையை ஏற்காமல், ஆளுநரின் அதிகார வரம்புக்குள் நுழையாமல், தலையிடாமல் இருந்திருந்தால்  ஒன்று எடியூரப்பா அரசு  நிலையான ஆட்சி அமைத்திருக்கும் அல்லது ஆட்சி அமைக்க முடியாமல்  மறு தேர்தலுக்கு வழிகோலப்பட்டிருக்கும்.
முதல்வர் குமாரசாமி தலைமையில்  காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கடந்த ஆண்டு அமைந்ததிலிருந்தே அந்தக் கூட்டணி நித்ய கண்டம் பூர்ண ஆயுசாகத்தான் பதவியில்  தொடர்ந்து வருகிறது. 37 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற  மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைமையில் ஆட்சி அமைந்ததை  முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதல்வர் குமாரசாமியின் பல்வேறு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்புடையதாக இல்லை. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே காணப்படும்  கோஷ்டிப் பூசல் நாளும் பொழுதும்  அதிகரித்து வந்தது. இந்தப் பின்னணியில்தான், 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவி விலகத் தீர்மானித்தார்கள்.  மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்தும் 6 பேர் பதவி விலக முற்பட்டிருக்கின்றனர்.
பதவி விலகல் கடிதத்தை ஏற்பதில் முதலில் தயக்கம் காட்டிய சட்டப்பேரவைத் தலைவர்  இப்போது முடிவெடுக்க தனக்குக் கால அவகாசம் வேண்டும் என்று  பதவி விலகல் கடிதங்களைக் கிடப்பில் போட்டிருக்கிறார். இந்தப் பிரச்னையில் ஜூலை 16 அன்று தீர்ப்பு வழங்கும் வரை சட்டப்பேரவைத் தலைவர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
 உச்சநீதிமன்றம் ஆரம்பம் முதலே தலையிடாமல் இருந்திருக்கலாம்.  ஆளுநரின் முடிவுக்கும்  சட்டப்பேரவை உறுப்பினர்களின் முடிவுக்கும் விடப்படுவதுதான் அரசியல் சாசனத்தின் உணர்வையும், ஜனநாயகத்தின்  மாண்பையும்  பிரதிபலிப்பதாக இருக்கும். 
விலைபோகும்  உறுப்பினர்களைத் தேர்வு செய்தால், ஜனநாயகத்தில்  அதன் பலனை  வாக்காளர்கள் அனுபவிக்க வேண்டும். குதிரை பேரத்தைக் காரணம் காட்டி மக்கள் தீர்ப்பை  தடம்புரளச் செய்வது ஜனநாயகம் அல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com