சரியான நேரம், சரியான அறிவுரை!

தனது அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விடுத்திருக்கும் எச்சரிக்கை,

தனது அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விடுத்திருக்கும் எச்சரிக்கை, சரியான தருணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தேவையான அறிவுரை. ஒவ்வொரு நாளும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆளுங்கட்சியின் சார்பில் நெறிப்படுத்தும் பொறுப்பு சில அமைச்சர்களுக்குத் தரப்படும். ஆனால், அமைச்சர்களில் பலரும் அந்தப் பொறுப்பை அதற்குரிய கெளரவத்துடன் எடுத்துக்கொள்வதில்லை, சிலர் அவைக்கே வருவதில்லை. அதைத்தான் பிரதமர் கண்டித்திருக்கிறார்.
எட்டாவது நாடாளுமன்றத்தில், இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த அசுர பலத்தின் விளைவால், எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அந்த அவையில் இல்லாமல் போனது அமைச்சர்களின் மெத்தனத்துக்கு வழிகோலியது, அதுவே வழக்கமாகிவிட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் கிடைத்திருப்பது அதன் உறுப்பினர்களின் பொறுப்பை அதிகரித்திருக்கிறதே தவிர, தங்களது நாடாளுமன்ற கடமையைச் செய்வதிலிருந்து தவறுவதற்கு அனுமதிக்கவில்லை என்பதை பிரதமருடைய எச்சரிக்கை தெரிவிக்கிறது. ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் தங்களது நாடாளுமன்ற கடமையை முறையாகக் கடைப்பிடிக்காமல் இருக்கும்போது, நாடாளுமன்ற ஜனநாயகம் அர்த்தமற்றதாகிவிடும் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் பிரதமர். 
கடந்த மாதம் 17-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு,  எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளும் முக்கியத்துவம் பெறுகிறது. நாடாளுமன்றத்தின் செயல்பாடு, கடந்த 16-ஆவது மக்களவையைப் போலல்லாமல் முறையாக நடைபெற வேண்டும் என்கிற பிரதமரின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது அந்த வேண்டுகோள். 
எண்ணிக்கை குறைவாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் முழு மனதுடன் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளுக்கு  பிரதமர் விடுத்த வேண்டுகோள். எதிர்க்கட்சியினரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் மரியாதையும், மதிப்பும் அரசு கொடுக்கும் என்கிற உறுதியை அவர் அளித்தது, எதிர்க்கட்சிகளே எதிர்பாராத அறிவிப்பு.
எதிர்க்கட்சிகளிடம் தங்களது நாடாளுமன்றக் கடமையை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்த பிரதமரின் எண்ணத்தை அவரது அமைச்சர்களே புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் அவர்களில் பலர் தங்களது கடமையை மறந்து அவைக்கு வராமல் இருப்பது வெளிப்படுத்துகிறது. இதனால் பிரதமருக்கு ஏற்பட்ட மன வேதனையின் வெளிப்பாடுதான் அவர் அமைச்சர்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை.
அது ஆளுங்கட்சியானாலும், எதிர்க்கட்சியானாலும் உறுப்பினர்களின் பங்களிப்பின் அடிப்படையில்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்படும். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்கூட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது திறமையான வாதத்தாலும், ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளாலும் ஆளுங்கட்சியை நிலைகுலையச் செய்ய முடியும். இதற்கு இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் பல முன்னுதாரணங்கள் உண்டு. 
கேள்வி நேரத்தின்போது முன்வைக்கப்படும் பிரச்னைகள், முக்கியமான அரசு முடிவுகள் குறித்து எழுப்பப்படும் விவாதங்கள், கவனஈர்ப்புத் தீர்மானங்கள் ஆகியவை அமைச்சர்களை நிலைகுலையச் செய்துவிடும். அவையில் இருந்து எதிர்க்கட்சிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் துணிவும், சாதுர்யமும் அமைச்சர்களுக்கு இருந்தாக வேண்டும். இதற்கு பயந்து அவைக்கு வராமல் இருப்பது என்பது அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடும். 
உலகிலேயே மிக அதிகமான வாக்காளர்களைக் கொண்ட நாடு என்பதாலேயே இந்திய ஜனநாயகம் உலகுக்கு முன்மாதிரி ஜனநாயகமாக ஆகிவிடாது. விவாதம், கருத்துவேறுபாடு, அதன் அடிப்படையில் முடிவெடுப்பது என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை. மக்களவையின் 543 உறுப்பினர்களும் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் தேர்ந்தெடுக்கும் 245 மாநிலங்களவை உறுப்பினர்களும் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் 788 உறுப்பினர்களும், அவர்களது கருத்துகளும் முக்கியமானவை. 
14-ஆவது மக்களவையில் 13% நேரமும், 15-ஆவது மக்களவையில் 37% நேரமும், 16-ஆவது மக்களவையில் 16% நேரமும் கூச்சல் குழப்பத்தாலும் ஒத்திவைப்பாலும் வீணாகி இருக்கின்றன. இந்தப் பின்னணியில் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்று சொன்னால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் அமையும். 
பண்டித ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்றம் கூடும் நாள்களில் அவையில் இருப்பது என்பதைத் தனது கடமையாகவே கருதினார். மிக அவசரமான அலுவல்கள் இருந்தாலும்கூட, தனது நாடாளுமன்ற அலுவலகத்தில் அமர்ந்து அவையில் நடக்கும் விவாதங்களைக் கூர்ந்து கவனிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் வந்த பிரதமர்களும் அதைப் பின்பற்றினார்கள். 
அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்களைப் போன்ற வலிமையான ஆளுமைகள் இன்றைக்கு இல்லை என்றாலும்கூட, எதிர்க்கட்சியின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்கிற பிரதமரின் எண்ணம் வரவேற்புக்குரியது. அமைச்சர்களின் தவறை சுட்டிக்காட்டிக் கண்டித்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த உணர்வின் அடிப்படையில் செயல்பாடு தொடருமேயானால், 17-ஆவது மக்களவை வரலாறு படைக்கும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com