எங்கே போவார்கள்?

சட்டப் பிரச்னைகள் குறித்து விளக்கமளிப்பதும், வாதிடும் கட்சிகளின் சட்ட உரிமைகள் குறித்து தீர்ப்பு வழங்குவதும்தான் நீதித் துறையின் பணி. தனி மனிதனுடைய உரிமை ஆட்சியாளர்

சட்டப் பிரச்னைகள் குறித்து விளக்கமளிப்பதும், வாதிடும் கட்சிகளின் சட்ட உரிமைகள் குறித்து தீர்ப்பு வழங்குவதும்தான் நீதித் துறையின் பணி. தனி மனிதனுடைய உரிமை ஆட்சியாளர்களாலோ, நிர்வாகத்தாலோ பறிக்கப்படும்போதும் மறுக்கப்படும்போதும் நியாயம் வழங்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது நீதிமன்றங்களே ஆட்சியாளர்களைப் போலவோ, தேசத்தை நிர்வகிக்கும் அதிகாரிகளைப் போலவோ நடந்துகொள்ளத் தொடங்கும்போது சாமானியர்கள் பாதிக்கப்படுகின்றனர். 
நீதித் துறை, நிர்வாகம் இரண்டின் பணிகளையும் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும்போது பறிக்கப்பட்ட தனது உரிமைகளுக்காக அதே நீதிமன்றத்தில் தனி மனிதன் முறையிட வேண்டிய அவலம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மீண்டும் உச்சநீதிமன்றத்திடம்  கோர முடியுமே தவிர, அவர்களுக்கு வேறு புகலிடம் கிடையாது. 
இந்தியக் காடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஆதிவாசிகளும், பல தலைமுறைகளாக காடுகளில் வசிக்கும் குடும்பங்களும் அப்படியொரு தர்மசங்கடத்தை எதிர்கொள்கின்றன. உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஓர் இடைக்கால உத்தரவை கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி வழங்கியது. வன உரிமைச் சட்டம் குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, 11,72,931 வனவாழ் மக்கள் ஜூலை 12-ஆம் தேதிக்குள் காடுகளிலிருந்து அகற்றப்பட வேண்டும். 
மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி உச்சநீதிமன்றம் தனது உத்தரவுக்கு இடைக்காலத் தடை வழங்கியிருக்கிறது. ஆதிவாசிகளைப் பொருத்தவரை இது தற்காலிக நிம்மதியை வழங்குமே தவிர, வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அவர்களது உரிமை நிரந்தரமாகப் பாதுகாக்கப்படுவதை அது உறுதிப்படுத்தாது. மக்களவையின் பதவிக்காலம் முடிவடையும் வேளையில் அவசரச் சட்டம் கொண்டுவரும் வாய்ப்பும் இல்லாததால், காடுகளில் வாழும் ஆதிவாசிகளும், மலைவாழ் மக்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். 
2006-இல் வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில், பல தலைமுறைகளாக வனங்களில் வசிப்பவர்கள், ஆதிவாசிகள் ஆகியோருக்கு வனப் பகுதி நிலத்தின் மீதான உரிமை அங்கீகரிக்கப்பட்டது. இதன் அரசியல் சாசன அங்கீகாரம் குறித்து சூழலியல் பாதுகாவலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 13 ஆண்டுகளாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. வன உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தும் விதத்தை நீதிமன்றமே நேரிடையாகக் கண்காணிக்க வேண்டும் என்று பல்வேறு தன்னார்வக் குழுக்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. அதனடிப்படையில்தான் 11 லட்சத்துக்கும் அதிகமானோரைக் காடுகளிலிருந்து வெளியேற்ற உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
வன உரிமைச் சட்டப்படி, ஒருவர் கோரும் உரிமை மறுக்கப்படுவதன் அடிப்படையில், அவர்களை வெளியேற்றும் உத்தரவு இறுதி முடிவாகக் கருதப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை.  எந்தவொரு சட்டத்தின் அடிப்படையிலும் ஒருவர் கோரும் உரிமை மறுக்கப்பட்டால் உடனடியாக அவர் அகற்றப்படுவதில்லை. தன்னுடைய கோரிக்கையை மறுபரிசீலனை செய்யக் கோரும் உரிமை எந்த ஒரு குடிமகனுக்கும் உண்டு. 
வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமை மறுக்கப்படுவது நியாயமேயல்ல. வன உரிமை குறித்த கோரல்களில் தவறான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தடாலடித் தீர்ப்பு திகைப்பை ஏற்படுத்துகிறது. 
வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் போதுமான ஆதாரமில்லை என்று கூறி 11,72,931 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 31 டிசம்பர் 2005-க்கு முன்னால் குறைந்தது மூன்று தலைமுறைகளாக காடுகளில் குடியிருந்தால் அவர்கள் குடியிருக்கும் இடம் அவர்களுக்கு உரிமையாக்கப்படுகிறது. 
ஆதிவாசிகள் மற்றும் ஏனைய காட்டுவாசிகளின் வன உரிமைச் சட்ட அங்கீகாரம் 2006, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது.  அப்படியொரு சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முக்கியமான காரணம் இருந்தது. இந்திய வனச் சட்டம் 1927-இன்படி பிரிட்டிஷ் காலனிய அரசு ஆதிவாசிகளையும், பல தலைமுறைகளாக காடுகளில் வசிப்பவர்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிட்டு அவர்கள் காடுகளில் வசிப்பதை சட்டவிரோதமாக்கி இருந்தது. அந்த அநீதியை மாற்றுவதற்குப் பல ஆண்டுகள் நடத்தப்பட்ட போராட்டத்தால்தான் வன உரிமைச் சட்டம் 2006-இல் கொண்டு வரப்பட்டது. 
பூமிப்பந்தின் நலன் கருதி வனங்களும் வன விலங்குகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு ஆதிவாசிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தி, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களிலிருந்து அகற்றுவது என்ன நியாயம்? உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அவர்கள் காடுகளிலிருந்து அகற்றப்பட்டால் லட்சக்கணக்கான காட்டுவாசிகள் எங்கே போவார்கள்? 
உலகளாவிய அளவில் தலைமுறை தலைமுறையாகக் காடுகளே உலகம் என்று வாழும் ஆதிவாசிகளை முன்னிறுத்தித்தான் வனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வன அழிப்புக்கும், மனித- விலங்கு போராட்டங்களுக்கும் காரணம், மர வணிகமும், சுரங்கப் பணி உள்ளிட்ட வர்த்தக முயற்சிகளும்தானே தவிர, காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள் அல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com