வெற்றியில் தோல்வி; தோல்வியில் வெற்றி!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தைப் பொருத்தவரை 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தைப் பொருத்தவரை எந்தவித மாற்றத்தையோ, எதிர்பாராத திருப்பத்தையோ ஏற்படுத்திவிடவில்லை. இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போலல்லாமல், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வலுவாகவே இருக்கிறது என்பதன் வெளிப்பாடாக வேண்டுமானால் திமுக அணியின் வெற்றியைக் குறிப்பிடலாம்.
திமுக தலைமையிலான அணி தேர்தல் நடந்த 38 இடங்களில், 37 இடங்களைக் கைப்பற்றியதுகூட வியப்பை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், 1967 முதலே தமிழகத்தைப் பொருத்தவரை ஏதாவதொரு அணிக்குச் சாதகமாகத்தான் தேர்தல் முடிவுகள் அமைந்து வந்திருக்கின்றனவே தவிர, வெற்றி வாய்ப்பு சரிபாதியாகவோ, சிதறியோ அமைந்ததே இல்லை. 
2004 தேர்தலில் திமுக கூட்டணி அத்தனை இடங்களையும் (39) வென்றதை, இப்போதைய வெற்றியுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், 2004-இல் திமுக தனது 39 இடங்களுடன் மத்திய ஆட்சியில் இடம் பெற முடிந்தது. 
2014-இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றதுடனும் ஒப்பிடவும் முடியவில்லை. 2014-இல் அதிமுகவால் மத்திய ஆட்சியில் இடம்பெற முடியவில்லை என்றாலும், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இப்போது திமுக கூட்டணி 37 இடங்களில்  வெற்றி பெற்று எதிர்க்கட்சியில் அமர முடிந்திருக்கிறதே தவிர, அந்த வெற்றியால் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை. 
இடைத்தேர்தல் நடந்த சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப்போல திமுக வெற்றி பெற்றிருந்தால், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும்கூட ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கக் கூடும். அதற்கு வாய்ப்பில்லாமல், திமுகவால் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. 
அண்டை மாநிலமான கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அடைந்திருக்கும் மிகப் பெரிய வெற்றிக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸூக்குக் காணப்பட்ட வரவேற்புதான் காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல, தமிழகத்திலும் காங்கிரஸூக்கு ஆதரவாக இருந்த மனநிலை திமுகவின் பெரும் வெற்றிக்குக் காரணம் என்று காங்கிரஸார் கருதினால் தவறு காண முடியாது. 
தமிழக தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை இடதுசாரிகள் மகிழ்ச்சி அடைய காரணம் இருக்கிறது. மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டு, ஆட்சியில் இருக்கும் கேரளத்திலும் ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், 17-ஆவது மக்களவைக்கு நான்கு இடதுசாரி உறுப்பினர்களை தமிழகம் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறது. 
சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் அதிமுக 9 இடங்களில் வெற்றியையும், ஏனைய 13 தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் பின்னடைவுக்கு பாஜகவுக்கு எதிராகக் காணப்பட்ட அலை முக்கியமான காரணம் என்று தெரிகிறது. நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், கொங்கு மண்டல விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் அமையும் கெயில் எரிவாயுக் குழாய்கள் திட்டம், நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தமிழக வாக்காளர்கள் மத்தியில், பாஜகவுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியிருப்பது தெளிவாகிறது. நீட் தேர்வு, ஸ்டெர்லைட் பிரச்னை, கெயில் எரிவாயுக் குழாய் திட்டம் போன்றவற்றுக்கு நீதிமன்றத் தீர்ப்புகள்தான் காரணம் என்றாலும்கூட, அந்தத் தீர்ப்புகளை பாஜகவினர் நியாயப்படுத்த முற்பட்டதன் விளைவுதான் பாஜக சார்ந்த ஒட்டுமொத்த அதிமுக அணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக மிகப் பெரிய பின்னடைவை எதிர்கொண்டாலும், அந்தக் கூட்டணி மகிழ்ச்சி அடைய நிறையவே காரணங்கள் இருக்கின்றன. 38 மக்களவைத் தொகுதிகளில் ஓர் இடத்தில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது என்றாலும்கூட, 37 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி செயலிழந்துபோய் மக்களவையில் எதிர்க்கட்சியில் அமர்கிறது என்பதேகூட ஆளும்கட்சிக்கு மிகப் பெரிய ஆறுதல். 
சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் 9 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஆளும்கட்சி பெரும்பான்மை பலம் பெற்று விட்டிருக்கிறது. ஆட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த உறுப்பினர்களேகூட இனிமேல் தங்கள் நிலையை உணரத் தலைப்படுவார்கள். தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழப்பதற்கு இனிமேல் தயாராக மாட்டார்கள்.
ஆளும் கட்சிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி, பிரிந்து போன டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சந்தித்திருக்கும் மிகப் பெரிய தோல்வியாகும். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வைப்புத் தொகையை இழந்திருப்பது மட்டுமல்ல, பல இடங்களில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தைவிடவும் குறைவான வாக்குகளைத்தான் அந்தக் கட்சியால் பெற முடிந்திருக்கிறது. விலகிப்போன 
அதிமுக தொண்டர்கள் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என்பதால், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய பலத்துடன் ஆளும் அதிமுக களமிறங்க முடியும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய ஆறுதல். 
38-இல் 37 இடங்களில் வெற்றி பெற்றும் பயனில்லாத நிலையில் திமுக. மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் ஆளும் அதிமுக. இதுதான் 2019 தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் செய்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com