காங்கிரஸ், இனி..?

17-ஆவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது

17-ஆவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது ஆளும் பாஜகவின் வெற்றியைவிட காங்கிரஸ் கட்சி எதிர்கொண்ட பின்னடைவுதான் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது 2014 எண்ணிக்கை பலத்தை இரட்டிப்பாக்கக்கூட முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய சோகம்.

2014-இல் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, 19% வாக்குகளுடன் வெறும் 44 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இப்போது எட்டு இடங்கள் அதிகமாகப் பெற்றிருக்கிறது என்றாலும் தனது வாக்கு வீதத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. பஞ்சாப், கேரளம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் காங்கிரஸின் மானத்தைக் காப்பாற்றி இருக்கின்றன. ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியடைந்திருப்பதிலிருந்து, எந்த அளவுக்கு காங்கிரஸ் தேசிய அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

2014 மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யும் பொறுப்பு மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் இந்தியா முழுவதும் பயணித்து, காங்கிரஸ் தொண்டர்களையும், அரசியல் விமர்சகர்களையும் பொதுமக்களையும் சந்தித்து ஓர் அறிக்கை தயாரித்தார். அந்த அறிக்கை அப்போதைய தலைவர் சோனியா காந்தியிடம் தரப்பட்டது. அந்த அறிக்கை என்ன ஆனது, அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி என்ன முடிவெடுத்தது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால், 2014-இல் காங்கிரûஸத் தோல்விக்கு  வழிநடத்தியவர்கள், இப்போதும்கூட 2019-இல் கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

1967 முதல் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து வருகிறது என்பதுதான் உண்மை. வங்கிகளை தேசியமயமாக்கல் போன்ற முற்போக்குக் கொள்கைகளும் கட்சி பிளவும் 1971-லும், ஜனதா ஆட்சியில் காணப்பட்ட குழப்பம் 1980-லும், இந்திரா காந்தியின் படுகொலை 1984-லும், ராஜீவ் காந்தியின் படுகொலை 1991-லும் காங்கிரஸூக்கு செயற்கையான சுவாசம் அளித்தன. தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 1989 முதல் தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் சக்தியை இழந்துவிட்டது. 2004-லும், 2009-லும் வலுவான கூட்டணியை அமைத்துக் கொண்டு மாநிலக் கட்சிகளின் தயவில், அவற்றின் விருப்பு வெறுப்புகளுக்கு அடிபணிந்து ஆட்சி அமைக்க முடிந்ததே தவிர, தன்னை வலுப்படுக்கொள்ள முடியவில்லை.

காங்கிரஸ் கட்சி வம்சாவளித் தலைமையின் உறைவிடமாக மாறிவிட்டிருக்கிறது என்பதை அதன் தலைவர் ராகுல் காந்தி சமீபத்திய தோல்விக்குப் பிறகுதான் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரமும் தங்களது வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கும், அவர்கள் வெற்றி பெறுவதிலும் காட்டிய முனைப்பை கட்சியின் வெற்றிக்கு காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த கோரிக்கைகள் ராகுல் காந்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதிலிருந்து அவர் எந்த அளவுக்குப் பலவீனமான தலைவராக இருக்கிறார் என்பது வெளிப்படுகிறது.

எந்தவொரு கட்சியும் தன்னை மாற்றிக்கொள்ள விரும்பும்போது, முதல் கட்டமாக தலைமை மாற்றத்துக்கு வழிகோல வேண்டும். ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது குறைந்தபட்சம் பழைய தலைவர்களான கமல்நாத்தையும், அசோக் கெலாட்டையும் அகற்றிவிட்டு ஜோதிராதித்ய சிந்தியாவையும், சச்சின் பைலட்டையும் அந்த மாநிலங்களின் முதல்வர்களாக தேர்வு செய்திருந்தால், ராகுல் காந்தியின் தலைமையில் மாற்றம் ஏற்படுகிறது என்கிற தோற்றத்தையாவது ஏற்படுத்தி இருக்க முடியும். 

காங்கிரஸின் பிரசாரம் இந்த முறை மிகவும் நன்றாகவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் காங்கிரஸூம் அதன் தலைவர் ராகுல் காந்தியும் மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்குவதில் முனைப்புக் காட்டியது மிகப் பெரிய அணுகுமுறைத் தவறு. 

திமுக தலைவர் ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை, முன்மொழியத் தயாராகவும் இல்லை. காங்கிரஸூம் பல்வேறு மாநிலக் கட்சிகளுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு 2004 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி போல ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. நரேந்திர மோடி என்கிற பாஜகவின் வலிமையான தலைமைக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் நிகரல்ல என்கிற பலவீனத்துடன்தான் 2019 மக்களவைத் தேர்தலின் பிரசாரம் நடைபெற்றது. 

காங்கிரஸூக்கு இப்போது ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அமைப்பு ரீதியான பலம் கிடையாது. 2004 முதல் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், கடந்த ஐந்தாண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கட்சித் தலைவர்களும் சரி, வாரிசு அடிப்படையில் கட்சித் தலைமையால் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள். புதியவர்களுக்கு இடமில்லை என்பதுதான் உண்மை நிலை. 

காங்கிரஸில் தலைமுறை மாற்றம் நிகழ்கிறதே தவிர, தலைமை மாற்றம் ஏற்படுவதில்லை என்கிற நிலைமை தொடர்ந்தால், வீழ்ச்சி தொடருமே தவிர, எழுச்சி ஏற்படப்போவதில்லை. இது காங்கிரஸூக்கு மட்டுமல்ல, குடும்ப அரசியலைப் பின்பற்றும் எல்லா கட்சிகளுக்குமே பொருந்தும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com