தோல்வியா, நீட்சியா?

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தேர்தல் வெற்றியை வரலாற்று வெற்றி என்று குறிப்பிடுவதில் தவறே இல்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தேர்தல் வெற்றியை வரலாற்று வெற்றி என்று குறிப்பிடுவதில் தவறே இல்லை. 1971-இல் தனிப் பெரும்பான்மையுடன் இந்திரா காந்தி வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானதற்குப் பிறகு, இப்போதுதான் அதே போன்றதொரு வெற்றி ஒரு பிரதமருக்குச் சாத்தியமாகி இருக்கிறது எனும்போது, அதை வரலாற்று வெற்றி என்றல்லாமல் வேறு எப்படிக் கூறுவது? ஏறத்தாழ 1971-லும் இதேதான் நிலைமை என்பதால், இந்திரா காந்தியையும் பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
2014 தேர்தலில் 80-இல் 71 இடங்களை உத்தரப் பிரதேசத்தில் பாஜக வென்றது என்றாலும், அதன் வாக்கு விகிதம் 42.6% தான். இப்போது 62 இடங்களில்தான் வெற்றி அடைந்திருக்கிறது என்றாலும்கூட, பாஜகவின் வாக்கு விகிதம் 49.5%-ஆக அதிகரித்திருக்கிறது. இத்தனைக்கும் உத்தரப் பிரதேசத்தில் மாநிலக் கட்சிகளான சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும், ராஷ்ட்ரீய லோக் தளமும் மகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
குஜராத், ராஜஸ்தான், தில்லி, உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அத்தனை இடங்களையும் பாஜக கைப்பற்றியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 28 இடங்களை வென்றிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 இடங்களில், கடந்த 2014 தேர்தலைப் போலவே இந்த முறையும் 41 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார் மாநிலங்களில் இழந்த இடங்களை மேற்கு வங்கம், ஒடிஸா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகரித்திருக்கும் எண்ணிக்கை மூலம் பாஜகவால் ஈடுகட்ட முடிந்திருக்கிறது.
2014-இல் 31%-ஆக இருந்த பாஜகவின் வாக்கு விகிதம், இந்தத் தேர்தலில் 37.5%-ஆக அதிகரித்திருப்பதுதான், காங்கிரஸ், பாஜக அல்லாத ஏனைய கட்சிகளின் வாக்கு விகிதம் சரிந்திருப்பதற்கு முக்கியமான காரணம். பாஜகவின் வாக்கு விகிதம் அல்லது செல்வாக்கு அதிகரித்திருப்பதற்குப் பின்னணி என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் இதற்கு அடிநீரோட்டமாக சில சமூக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் காண முடிகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கும் சில கருத்துகள் ஆழமான சிந்தனைக்குரியவை. தேர்தல் வெற்றிக்குப்  பிறகு அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் பார்வை குறித்து அவர் வலியுறுத்தியிருக்கிறார். குறிப்பாக, மதச்சார்பின்மை என்கிற பெயரால் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும், அந்த அச்சுறுத்தலில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் மத்தியில் காணப்படும் பாஜக மீதான நம்பிக்கையின்மை அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பது, பாஜகவின் புதிய பார்வை என்றுதான் சொல்ல வேண்டும்.
சிறுபான்மையினர் குறித்த பார்வை எப்படி இருந்தாலும், பாஜகவின் தேர்தல் வெற்றிக்கும், அதிகரித்த செல்வாக்குக்கும் ஜாதி அடிப்படையிலான சமூக மாற்றங்கள் முக்கியமான காரணம் என்று தெரிகிறது. அந்த வெற்றிக்கு சில வலுவான காரணங்கள் இருந்ததை இப்போதுதான் அரசியல் நோக்கர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.
யாதவ், ஜாதவ் ஜாதியினரின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏனைய பிற்படுத்தப்பட்ட, பட்டியலினப் பிரிவுகளின் ஒட்டுமொத்த ஆதரவையும் பாஜக  பெற முடிந்ததன் விளைவுதான் ஹிந்தி பேசும் மாநிலங்களில் அந்தக் கட்சியின் அதிகரித்த செல்வாக்குக்குக் காரணம்.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவசரச் சட்டம் கொண்டுவந்து நரேந்திர மோடி அரசுதான் தடுத்து நிறுத்தியது. இருந்தும்கூட தலித் மக்களின் ஆதரவை பாஜகவால் பெற முடியவில்லை. 
ஆனால், அந்த முடிவு ஏனைய ஜாதியினர் அனைவரையும் பாஜகவின் மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. குறிப்பாக, தலித்துகளுடன் நேரிடையான மோதலில் இருக்கும் இடைப்பட்ட, பிற்பட்ட வகுப்பினரின் ஆதரவையும், ஜாதி இந்துக்களின் ஆதரவையும் பாஜக இழக்கத் தொடங்கியது. அதன் விளைவுதான் ஆறு மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் அந்தக் கட்சி எதிர்கொண்ட பின்னடைவு.
பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அறிவித்ததன் மூலம், பாஜகவினர் மீது அதிருப்தியில் இருந்த ஜாதி இந்துக்களின் ஆதரவை பாஜகவால் திரும்பப் பெற முடிந்தது. பூணூல் அணிந்து கொண்டு தன்னை தத்தாத்ரேய கோத்திர பிராமணன் என்று ராகுல் காந்தி அடையாளம் காட்ட முற்பட்டது, பிராமணர்களையோ, ஜாதி இந்துக்களையோ கவரவில்லை என்பது மட்டுமல்ல, சிறுபான்மை மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. மென்மையான இந்துத்துவா கொள்கையை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது என்கிற தோற்றத்தை அது ஏற்ப டுத்தியது.
மண்டல் கமிஷனால் உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கி என்பது ஒரு சில கட்சிகளின் தனிச் சொத்தாக இருந்தது மாறிவிட்டிருக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் பிராமணர் அல்லாத ஒருவர் பிரதமராகத் தனது பதவிக் காலத்தை முழுமை செய்திருப்பது நரேந்திர மோடிதான் (மன்மோகன் சிங் இந்துவல்ல, சீக்கியர்). ஜாதியப் பார்வை இல்லாத, வளர்ச்சியை நோக்கி நகரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியாக நரேந்திர மோடி காட்சியளிப்பதேகூட, பாஜகவின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.
பாஜகவின் வெற்றி, ஜாதிய அரசியலின் தோல்வியா அல்லது அடுத்தகட்ட நீட்சியா என்பதை அடுத்தடுத்த தேர்தல்கள் தீர்மானிக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com