மூன்றாகப் பிரிக்க வேண்டும்!| பெருநகர சென்னை மாநகராட்சி குறித்த தலையங்கம்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு அவசரச் சட்டத்தின் மூலம் மறைமுகத் தேர்தலுக்கு வழிகோலப்பட்டிருக்கிறது. இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் செயல்படும் நிலையில், மாநகராட்சி, நகராட்சிகளின் நேரடித் தேர்தல் என்பது சரியான வழிமுறை அல்ல. மாநகராட்சி மேயர் அல்லது நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், உள்ளாட்சி அமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களாவும் இருந்தால் அதனால் நடைமுறைச் சிக்கல்கள் எழும். 
1986 முதல் 2001 வரை அனைத்து உள்ளாட்சித் தேர்தல்களிலும் நேரடித் தேர்தல் முறை இருந்தது. 2006-இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது அந்த நடைமுறையை மாற்றி, ஊராட்சி நீங்கலாக ஏனைய அமைப்புகளில் மறைமுகத் தேர்தலை அறிமுகப்படுத்தியது. 2011-இல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் நேரடித் தேர்தல் கொண்டு வரப்பட்டது. 2016-இல் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பொறுப்புகளுக்கு நேரடித் தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நேரடித் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது மீண்டும் மறைமுகத் தேர்தலுக்கு வழிகோலப்பட்டிருக்கிறது. 
உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில்,  இன்னொரு மிக முக்கியமான முடிவை அரசு எடுத்தாக வேண்டும். மாறிவிட்டிருக்கும் சூழலில் பெருநகர சென்னை மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்படாமல் போனால் மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தாலும்கூட நிர்வாகம் முறையாகச் செயல்படாது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
உலகில் லண்டனுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பழைமையான உள்ளாட்சி அமைப்பு என்கிற பெருமை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உண்டு. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் பரிந்துரையில் 1688-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி சென்னை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதன் முதல் மேயராக கிழக்கிந்திய கம்பெனியின் நாதேனியல் டிக்கின்ஸன் என்பவர் நியமிக்கப்பட்டார். 1801-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி கலைக்கப்பட்டது. 1919-ஆம் ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டு, 1931-ஆம் ஆண்டு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு 1973-ஆம் ஆண்டு வரை ஜாதி, சமய அடிப்படையில் ஆண்டுக்கு ஒருமுறை மேயர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டது. 
1973-ஆம் ஆண்டு மஸ்டர் ரோல் ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில் சென்னை மாநகராட்சி கவுன்சில் கலைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1996-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து சிறப்பு அதிகாரிகளால் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வகிக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டுக்குப் பின்பு, உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படாததால் இப்போது வரை அதிகாரிகளால் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வகிக்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 
174 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் 16 சட்டப்பேரவை தொகுதிகள், 10 மண்டலங்கள் மற்றும் 155 வார்டுகளுடன் செயல்பட்டு வந்த சென்னை மாநகராட்சி, கடந்த 2011-ஆம் ஆண்டு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த சென்னையை ஒட்டியுள்ள 42 உள்ளாட்சி அமைப்புகள் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இப்போது 426 ச. கி.மீ. பரப்பளவுடன் 22 சட்டப்பேரவைத் தொகுதிகள், 15 மண்டலங்கள், 200 வார்டுகள் எனப் பெருநகர சென்னை மாநகராட்சி பரந்து விரிந்து காணப்படுகிறது. 
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை 62,53,669. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். நாளொன்றுக்கு சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து போகிறார்கள். விரைவிலேயே சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை எட்டுமென்று கணிக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளான சுகாதாரம், கல்வி, சாலைகள் பராமரிப்பு, கழிவுப் பொருள்கள் மேலாண்மை என்று 14 துறைகள் மாநகராட்சியில் செயல்பட்டு வருகின்றன. 2019-20-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு (பட்ஜெட்) ரூ.3,547 கோடி. 
நாளொன்றுக்கு 5,400 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் சேர்கின்றன. கட்டுமானக் கழிவுகள் 700 டன்னுக்கும் அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியை முறையாக நிர்வகிக்க வேண்டுமானால் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டாக வேண்டும். சுமார் 80 லட்சம் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாநகராட்சியின் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். 200 வார்டுகளைக் கொண்ட பெரும்பகுதியை ஒரு மேயர், ஓர் ஆணையர் தலைமையில் நிர்வகிப்பது சாத்தியமில்லை என்பதை பெருநகர சென்னை மாநகராட்சியின் சாலைகளும், எல்லாத் தெருக்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளும் எடுத்தியம்புகின்றன. 
நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, சென்னை மாநகராட்சியை மட்டும் பெருநகர மாநகராட்சியாக வைத்திருப்பது என்ன நியாயம்? தில்லி மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டிருப்பதுபோல பெருநகர சென்னை மாநகராட்சியும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி மேயர், ஆணையரின் கீழ் செயல்பட்டால் மட்டும்தான், சாக்கடை ஓடாத தெருக்கள், குண்டும் குழியுமில்லாத சாலைகளுடன் முறையான கழிவு மேலாண்மை உறுதிப்படுத்தப்பட்டு சென்னைவாழ் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com