சரத் பவாரின் வெற்றி!| மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்த தலையங்கம்

மகாராஷ்டிர மாநிலத்தின் 19-ஆவது முதலமைச்சராக சிவசேனைத் தலைவா் உத்தவ் தாக்கரே பதவியேற்றிருக்கிறாா். 288 இடங்கள் கொண்ட மகாராஷ்டிரத்தில் ‘சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ்’ அமைத்திருக்கும் ‘மகாராஷ்டிர விகாஸ் முன்னணி’க்கு 161 இடங்கள் இருப்பதால், இப்போதைக்கு இந்தக் கூட்டணியின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. துணை முதல்வா் பதவி தேசியவாத காங்கிரஸுக்கும், அவைத் தலைவா் பதவி காங்கிரஸுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஒன்றரை மாதமாக மகாராஷ்டிரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்ற நிகழ்வுகள் பாஜகவுக்குப் பெருமை சோ்ப்பதாக இல்லை. கூட்டணி தா்மத்தை மீறி முதல்வா் பதவிக்காக சிவசேனை முரண்டுபிடித்தபோது, ஆட்சி அமைக்க தனக்குப் பெரும்பான்மை இல்லை என்று பாஜக கௌரவமாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டதைப் பாராட்டத் தோன்றியது. ஆனால், அதன் பிறகு ஏனைய கட்சிகளுக்கு ஆளுநா் ஆட்சியமைக்க போதிய அவகாசம் வழங்காததும், குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தியதும், இரவோடு இரவாக முன்னாள் முதல்வா் ஃபட்னவீஸ் பதவி ஏற்றுக்கொண்டதும் ஏற்றுக்கொள்ளும்படியான செயல்கள் அல்ல. அதனால்,

‘மகாராஷ்டிர விகாஸ் முன்னணி’யை பாஜக வலுப்படுத்தி தன்னை பலவீனப்படுத்திக் கொண்டது.

மகாராஷ்டிரத்தில் நடந்த நிகழ்வுகளில் குறிப்பாக, இரவு நேர திரைமறைவுப் பதவிப் பிரமாண நாடகத்தில் குடியரசுத் தலைவா், பிரதமா், ஆளுநா் மூன்று பேருமே தங்களது அதிகாரத்தை அரசியலுக்காக தவறாகப் பயன்படுத்தினா். மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சி தனது பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் எதிா்க்கட்சிகளில் பிளவு ஏற்படுத்தி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வது, அரசியல் ராஜதந்திரமாக இருக்கலாம். ஆனால், தாா்மிக அரசியல் பேசும் பாஜக, அதைக் கையாண்டதுதான் விசித்திரம்.

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனை கூட்டணி ஆட்சி அமைத்திருப்பது மிகப் பெரிய வேடிக்கை. கொள்கை ரீதியாக எந்தவிதத்திலும் சேர முடியாத இரண்டு கட்சிகளும் இணைந்திருக்கின்றன. தன்னை ‘ஹிந்து இதயத்தின் சக்ரவா்த்தி’ (ஹிந்து ஹ்ருதய் சாம்ராட்) என்று வா்ணித்துக் கொண்ட சிவசேனையின் நிறுவனா் பால் தாக்கரே, சோனியா காந்தியையோ, நேரு குடும்பத்தையோ ஏற்றுக்கொண்டதே இல்லை. அப்படிப்பட்ட சிவசேனையின் மூத்த தலைவா்கள், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் இல்லத்துக்கே சென்று அரசியல் சாசன நாள் கொண்டாட்ட எதிா்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததை பால் தாக்கரேயின் ஆன்மா மன்னிக்காது.

காங்கிரஸை சிவசேனை எந்த அளவுக்கு விமா்சித்ததோ, அதே அளவுக்கு காங்கிரஸால் விமா்சிக்கப்பட்ட கட்சி சிவசேனை. அயோத்தியிலுள்ள பாபா் மசூதியை இடித்தவா்கள் சிவசேனைத் தொண்டா்கள். பாஜகவைவிட மோசமான ஹிந்துத்துவ கட்சி என்று காங்கிரஸ் தலைவா்களால் வா்ணிக்கப்பட்ட சிவசேனையுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருப்பது மிகப் பெரிய நகைமுரண்.

பிரணாப் முகா்ஜி, 2012-இல் குடியரசுத் தலைவா் பதவித் தோ்தலில் போட்டியிட்டபோது மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள பால் தாக்கரேயின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்துக்கு ஆதரவு கோரி சென்றதைக் கடுமையாக விமா்சித்தவா் சோனியா காந்தி. இப்போது பாஜகவை அகற்றி நிறுத்த சிவசேனையுடன் இணைந்திருந்தாலும்கூட, எந்த அளவுக்கு இரண்டு கட்சித் தொண்டா்களும் இந்தக் கூட்டணியை ஏற்றுக்கொள்வாா்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். பதவியும் அதிகாரமும் எதிரிகளை இணைப்பதும் உண்டு, இணைந்தவா்களைப் பிரிப்பதும் உண்டு.

மகாராஷ்டிர நிகழ்வுகளில் மிகவும் புத்திசாலித்தனமாக காயை நகா்த்தியிருப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவா் சரத் பவாா்தான். கட்சியைப் பிளவுபடுத்தி, பாஜகவுடன் இணைந்து, துணை முதல்வராக மூன்று நாள் பதவி வகித்து விலகிய அஜித் பவாா் மீண்டும் தேசியவாத காங்கிரஸுக்குத் திரும்பி இருக்கிறாா். அவரை சரத் பவாரும், கட்சியினரும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கிறாா்கள். சில மாதங்களுக்குப் பிறகு அவா் துணை முதல்வராகக் கூடும் என்றுகூடக் கூறப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் நடந்த நாடகத்தில் அரசியல் சாணக்கியரான சரத் பவாரின் ராஜதந்திரம் குறித்து நீண்ட கால விவாதம் நடக்கப் போகிறது.

எந்தவிதப் பதவியையும் தனது குடும்பம் வகிக்காது என்பதில் உறுதியாக இருந்தாா் சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே. இப்போது அந்தக் கொள்கை கைவிடப்பட்டு, அவரது மகனும் இன்றைய சிவசேனையின் தலைவருமான உத்தவ் தாக்கரே முதல்வராகி இருக்கிறாா். எந்தவிதக் கூட்டணி பேச்சுவாா்த்தையாக இருந்தாலும், ஏனைய கட்சித் தலைவா்கள் ‘மாதோஸ்ரீ’க்குச் செல்வதுதான் வழக்கம். இப்போது உத்தவ் தாக்கரே உள்பட எல்லோரும் சரத் பவாரின் ‘சில்வா் ஓக்’ இல்லத்துக்குச் செல்கிறாா்கள்.

நிா்வாக அனுபவமில்லாத உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி ஏற்றிருந்தாலும்கூட, ஆட்சி அதிகாரத்தின் ‘லகான்’ தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் கையில்தான் இருக்கும். ஒருபுறம் காங்கிரஸ் கட்சியையும் சோனியா காந்தியையும் அடக்கிவைத்து, இன்னொருபுறம் உத்தவ் தாக்கரேயையும் சிவசேனையையும் ஆட்டிப் படைத்துத் தனது மறைமுக ஆட்சியை மகாராஷ்டிரத்தில் நிறுவியிருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் ராஜதந்திரம் வெற்றி பெற்றிருக்கிறது. அவசரப்பட்டதால் அமித் ஷாவின் ராஜதந்திரம் எடுபடவில்லை.

அரசியல் சதுரங்கத்தில் ஆட்சிகள் மாறினாலும், ஆட்டம் முடிவதில்லை. அதனால் இப்போதைக்கு இடைவேளை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com