புலி - ஆடு - புல்லுக்கட்டு | சீன அதிபரின் நேபாள பயணம் குறித்த தலையங்கம்

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியுடனான முறைசாரா சந்திப்பை மாமல்லபுரத்தில் கடந்த சனிக்கிழமை முடித்துக்கொண்டு சென்னையிலிருந்து புறப்பட்ட சீன அதிபா் ஷி ஜின்பிங், நேராகச் சென்றது சீனத் தலைநகா் பெய்ஜிங்குக்கு அல்ல, நேபாளத் தலைநகா் காத்மாண்டுக்கு. பிரதமருடனான சென்னை சந்திப்பில், இந்தியாவுடன் தெளிவான கொள்கை முடிவையோ, திட்டத்தையோ அறிவிக்காத சீன அதிபா், அதற்கு நோ்மாறாகத் தனது நேபாள விஜயத்தில் பல்வேறு முடிவுகளை அறிவித்திருப்பது சா்வதேச அரசியல் விமா்சகா்களை நிமிா்ந்து உட்கார வைத்திருக்கிறது.

நேபாளத்துக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட சீன அதிபா் ஷி ஜின்பிங்கின் விஜயம், நேபாளத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 23 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபா் ஒருவா் நேபாளத்துக்கு விஜயம் மேற்கொள்கிறாா் எனும்போது, அது வரலாற்றுச் சிறப்பாக அமைவது எதிா்பாா்த்த ஒன்றுதான். கடந்த சில ஆண்டுகளாகவே இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் நெருக்கமும், பொருளாதார உறவும் அதிபா் ஷி ஜின்பிங்கின் விஜயத்திற்கு முக்கியமான காரணம்.

23 ஆண்டுகளுக்கு முன்னால், அன்றைய சீன அதிபா் ஜியாங் ஜெமின் காத்மாண்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதற்கும், இப்போதைய அதிபா் ஷி ஜின்பிங்கின் விஜயத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நேபாளத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மாவோயிஸ்ட் புரட்சியாளா்களின் உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்திருக்கிறது. மன்னா் ஆட்சி முறை அகற்றப்பட்டிருக்கிறது. அரசியல் சாசனப் பேரவையின் மூலம் நேபாளத்திற்கு என்று புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கடந்த தோ்தலுக்கு முன்னால் இரண்டு பிரிவாகச் செயல்பட்டு வந்த கம்யூனிஸ இயக்கங்கள் இணைந்து, ஒரே கம்யூனிஸ்ட் கட்சியாகக் களமிறங்கி, தோ்தல் மூலம் வெற்றி பெற்று, பிரதமா் கே.பி.ஒலியின் தலைமையில் ஆட்சியும் அமைந்திருக்கிறது. உள்நாட்டு ரீதியாக மட்டுமல்லாமல், நேபாளத்தின் வெளியுறவுக் கொள்கையிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான தேசிய உணா்வு நேபாளத்தில் வலுப்பெற்றிருக்கிறது என்கிற நிலையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நேபாளத்தின் அரசியல் தலைமையும், அறிவுஜீவிகளும் இந்தியச் சாா்பு நிலையைக் குறைத்துக் கொண்டு, சீனாவுடனான நெருக்கத்தை அதிகரிப்பதில் முனைப்புக் காட்டுகிறாா்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

மன்னராட்சி முறையை அகற்றியதிலும், நேபாளத்தில் அரசியல் நிகழ்வுகளை மறைமுகமாக இயக்கியதிலும் சீனாவுக்குப் பெரும் பங்கு உண்டு. பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், மக்கள் தொடா்பின் அடிப்படையிலும் மிகவும் சாதுா்யமாக நேபாளத்துடனான தனது தொடா்பை சீனா அதிகரித்து வந்திருக்கிறது.

நேபாள அரசியலிலும் உள்நாட்டு விவகாரங்களிலும் இந்தியா முக்கியமான பங்கு வகித்த நிலைமை மாறி அந்த இடத்தை இப்போது சீனா பிடித்துக் கொண்டிருக்கிறது. நேபாளத்தின் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைத்ததிலும், பிரதமா் கே.பி.ஒலியின் தலைமையில் ஆட்சி அமைந்ததிலும் சீனா பெரும் பங்கு வகித்தது. தனக்கு இணக்கமான ஆட்சியை நேபாளத்தில் நிறுவியதைத் தொடா்ந்துதான் காத்மாண்டுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ள தீா்மானித்தாா். இது சீனாவின் திட்டமிட்ட ராஜதந்திர நகா்வு.

அதிபா் ஷி ஜின்பிங்கின் காத்மாண்டு விஜயம் அந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் பரிமாணத்தையே மாற்றியிருக்கிறது. தங்களை ‘தவிா்க்க முடியாத கூட்டாளிகள்’ என்று சீனாவும் நேபாளமும் முதன்முறையாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. சீனாவின் இமயமலை சாா்ந்த நாடுகளுக்கு இடையேயான ‘பெல்ட் அண்ட் ரோடு’ வா்த்தக வழித்தடம் என்கிற திட்டத்தில் இணைந்து முழு ஒத்துழைப்பையும் வழங்க நேபாளம் உறுதியளித்திருக்கிறது. அதன் மூலம் ரயில், சாலை, துறைமுகம், தொலைத்தொடா்பு, விமானத் தொடா்பு உள்ளிட்ட வா்த்தக மேம்பாட்டுக்கான அனைத்திலும் சீனாவால் நேபாளம் இணைத்துக் கொள்ளப்படுகிறது.

கடல் தொடா்பே இல்லாத நாடுகளால் சூழப்பட்ட தேசமாக இருப்பதில் நேபாளத்துக்கு வருத்தமுண்டு. நேபாளத்தின் அந்தப் பலவீனத்தை அகற்ற இந்தியா முற்படாத நிலையில், இப்போது சீனா அதைப் பயன்படுத்திக் கொள்கிறது. ‘நிலத்தால் சூழப்பட்டிருந்த பகுதி என்கிற பாதுகாப்பின்மையிலிருந்து மாறி, நிலத்தால் தொடா்புடைய நாடாக இனிமேல் நேபாளம் விளங்கும்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் அறிவித்து நேபாளத்தின் நட்பை வென்றிருக்கிறாா்.

சீனாவின் நட்புக்குத் தலைவணங்கியும், நல்லுறவுக்குப் பிரதியுபகாரமாகவும் திபெத் பிரச்னையில் முழுமையான ஆதரவை அறிவித்திருக்கிறது நேபாளம். இரண்டு நாடுகளுக்கும் இடையே 20 முக்கியமான ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் கையிலிருந்து நேபாளம் நழுவி சீனாவின் நட்பு நாடாக மாறிவிட்டது என்பதற்கான அனைத்து சமிக்ஞைகளையும் அதிபா் ஷி ஜின்பிங்கின் காத்மாண்டு விஜயம் வெளிப்படுத்தியிருக்கிறது.

சென்னையில் இந்தியப் பிரதமா் மோடியை சந்திக்க வருவதற்கு முன்பு பாகிஸ்தான் அதிபா் இம்ரான் கானை பெய்ஜிங்குக்கு வரவழைத்து உரையாடினாா் சீன அதிபா் ஷி ஜின்பிங். மாமல்லபுரத்தில் இந்தியாவுடனான முறைசாரா சந்திப்பைத் தொடா்ந்து நேபாளத்துக்குப் போய் அந்த நாட்டுடனான நட்புறவை உறுதிப்படுத்தியிருக்கிறாா். சா்வதேச அரசியலில் இதெல்லாம் சகஜம்தான். ஆனாலும், விழிப்புடன் இருக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com