எதற்கும் தயாராக இருப்போம்!| தென்மேற்கு- வடகிழக்குப் பருவமழைப் பொழிவு குறித்த தலையங்கம்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. மிகவும் தாமதமாகத்தான் தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வந்தது. கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை அதனால் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. 
வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் நிலையில், ஏற்கெனவே கர்நாடகத்திலும், கேரளத்திலும் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் கேரளத்தில் வடகிழக்குப் பருவமழை மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தால் அதை எதிர்கொள்வதற்கு 6,000-க்கும் அதிகமான காவலர்கள் மீட்பு - நிவாரணப் பணிகளுக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்திருக்கிறார். வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய 4,000-க்கும் அதிகமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது வரவேற்புக்குரியது. இதனால், தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழையின் பாதிப்புகளை முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாவிட்டாலும், இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் முடியும்.
9,000-க்கும் அதிகமான பெண்கள் அடங்கிய 21,000 முதல்நிலை மீட்பாளர்களும், கால்நடைகளைப் பாதுகாக்க 8,800 பேரும், பருவமழையின் சீற்றத்தால் வேரோடு சாய்க்கப்படும் மரங்களை வெட்டி அகற்ற சுமார் 10,000 பேரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். 3,662 ஆற்றுப்படுகைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 8,749 பாலங்களிலும், 1,40,000 
சிறு பாலங்களிலும் அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் அமைச்சர் வெளியிட்டிருக்கும் தகவல்கள். 
தாழ்வான, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் பொதுமக்களை தங்க வைக்க பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், சமூகக் கூடங்கள் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மின் கம்பங்கள் பாதிப்பை எதிர்கொண்டால் உடனடியாகச்  செப்பனிட  ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். 
தென்மேற்குப் பருவமழையை ஆய்வு செய்திருப்பதுபோல, வடகிழக்குப் பருவமழை பெரிய அளவில் ஆய்வு செய்யப்படாமல் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. மத்திய பசிபிக் கடலிலும், வடமேற்கு ஐரோப்பாவிலும் காணப்படும் தட்பவெப்ப நிலையால் தென்மேற்குப் பருவமழையின் மழைப்பொழிவு நிர்ணயிக்கப்படுகிறது. அதுபோல, வடகிழக்குப் பருவமழையின் அளவைத் தீர்மானிப்பதற்கான வானிலை ஆய்வுகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
தென்மேற்குப் பருவமழையால் வழக்கத்தைவிட 15% அதிகமான மழைப்பொழிவை ஏற்கெனவே தென்னிந்தியா பெற்றிருக்கிறது. ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள 30-க்கும் அதிகமான நீர்த்தேக்கங்களை மத்திய நீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது. தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் முடிவில் அவற்றின் மொத்த தண்ணீர் கொள்ளளவு 4400 கோடிக்யூபிக் மீட்டர்கள். அதாவது, அந்த 30 நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவில் 84%. தென்மேற்குப் பருவமழைக் காலத்தின் முடிவில், கடந்த 10 ஆண்டுகளில் சராசரிக் கொள்ளளவு 66% எனும் நிலையில், இப்போது 84% காணப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்கள் நீண்டு நிற்கும் வடகிழக்குப் பருவமழை இந்தியாவின் வருடாந்திர மழைப்பொழிவில் 20% அளவில் பங்களிக்கிறது. ஏற்கெனவே இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான மழைப்பொழிவு தென்மேற்குப் பருவமழையால் கிடைத்திருக்கிறது. பசிபிக் கடலில் காணப்படும் தட்பவெப்ப மாற்றங்களால் ஏற்படும் எல் நினோ விளைவால் தென்மேற்குப் பருவமழை பாதிக்கப்படுகிறது என்றால், எல் நினோ ஆண்டுக் காலங்களில் நேரெதிரான நிலையை வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்கிறது. அதனால், அக்டோபர் - டிசம்பர் குளிர்காலப் பருவத்தில் வடகிழக்குப் பருவமழையின் பொழிவு அதிகரித்து, விந்திய மலைக்குக் கீழேயுள்ள இந்தியாவின் தென்மாநிலங்களில் மழைப் பொழிவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். 
இந்த ஆண்டு எல் நினோ தாக்க ஆண்டாக இருந்த நிலையில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், வழக்கத்தைவிட அதிகமான மழைப் பொழிவு இருக்கப்போகிறது. ஏற்கெனவே நீர்த்தேக்கங்களும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் நிறைந்து காணப்படும் நிலையில், வடகிழக்குப் பருவமழையின் அளவு அதிகரிக்கும்போது அதன் விளைவாக நகர்ப்புறப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் நிறையவே காணப்படுகிறது. 
2015-இல் சென்னையும், 2018-இல் கேரளமும் எதிர்கொண்டதுபோல இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையால் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் நிறையவே இருக்கிறது. அதன் பாதிப்பை கர்நாடகம் அனுபவிக்கிறது. கேரளம் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது.
தமிழகம் தயார் நிலையில் இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. தயார் நிலையில் இருந்தால் மட்டும் போதாது, மழையின் சீற்றத்தை எதிர்கொள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com