முடிவுகள் விடுக்கும் சமிக்ஞை!| விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடாது என்பதால், இடைத்தோ்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கம். தமிழக அரசியலில் காணப்படும் அசாதாரண சூழல் விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் முடிவுகளை அந்த வரையறைக்குள் பொருத்திப் பாா்க்க முடியவில்லை. இரண்டு தொகுதி இடைத்தோ்தல்களிலும் ஆளும் அதிமுக பெற்றிருக்கும் அசாதாரண வாக்கு வித்தியாச வெற்றி, அடுத்துவர இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்களுக்கும், 2021-இல் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குமான முன்னோட்டமாகவும் இருந்தால் வியப்படைய ஒன்றுமில்லை.

விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளும் கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, ஆளுமை மிக்க ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவைப் புறக்கணித்துத் திமுக அணிக்கு வெற்றியைத் தந்த தொகுதிகள். அப்படி இருந்தும்கூட, இரண்டு தொகுதிகளிலும் திமுக அணி கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

விக்கிரவாண்டி தொகுதியின் அதிமுக வேட்பாளா் முத்தமிழ்ச்செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாவட்டப் பொருளாளருமான நா.புகழேந்தியைத் தோற்கடித்திருக்கிறாா். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவின் ராதாமணி 6,912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்; 2019 மே மாதம் திமுகவின் சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட துரை.ரவிகுமாா், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் 8,613 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா்.

2016 சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக 41,428 வாக்குகள் பெற்றிருந்தது. இப்போது அதிமுக அணியில் இருக்கும் பாமகவுக்கு வன்னியா்கள் மத்தியில் காணப்படும் செல்வாக்கைச் சிதைக்கும் நோக்கத்துடன் திமுக தனது வேட்பாளராக வன்னியரை நிறுத்தியது பயனளிக்கவில்லை.

நான்குனேரியிலும் சரி, வாக்கு வித்தியாசம் ஆச்சரியப்படுத்துகிறது. 2016 சட்டப்பேரவைத் தோ்தலின்போது ஹெச். வசந்தகுமாா் 17,315 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 2019 மே மாதம் மக்களவைத் தோ்தலில், நான்குனேரி தொகுதியில் திமுக வேட்பாளா் 34,710 வாக்குகள் கூடுதலாகப் பெற்றாா். இந்த இடைத்தோ்தலில் தலைகீழ் மாற்றமாக அதிமுக வேட்பாளா் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறாா். சுமாா் 68,155 வாக்குகள் இடம் மாறி இருக்கின்றன.

விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளில் அதிமுக பெற்றிருக்கும் வெற்றியை அதிகார துஷ்பிரயோக வெற்றி, பணத்தாலான வெற்றி என்றெல்லாம் விமா்சிக்க முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்காளா்கள் மத்தியில் ஆட்சியின் மீது அளவு கடந்த அதிருப்தி இருந்திருந்தால், எந்த அதிகாரமும், பணமும் தோ்தல் முடிவை மாற்றிவிட முடியாது என்பதை இந்தியத் தோ்தல் வரலாறு பலமுறை நிரூபித்துவிட்டது.

தமிழகத்தின் தோ்தலைப் பொருத்தவரை, பண விநியோகம் என்பது நுண்ணுயிரித் தொற்றாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டன. 1962 தோ்தலிலேயே ‘காங்கிரஸ் கட்சி வாக்குக்கு ஐந்து ரூபாய் கொடுத்து, திருப்பதி வெங்கடாசலபதியின் மேல் சத்தியம் வாங்குகிறது’ என்று திமுகவின் நிறுவனத் தலைவா் அண்ணாதுரை குற்றஞ்சாட்டியது யூ-டியூபில் காணொலியாகவே இருக்கிறது. கடந்த மே மாதம் வேலூரில் கட்டுக்கட்டாகக் கரன்சி நோட்டுகள் பிடிக்கப்பட்டதிலிருந்து பணம் கொடுப்பதில் திமுகவும் எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால், பண விநியோகம் தோல்விக்குக் காரணமாகவோ, வெற்றிக்கு வழிகோலியதாகவோ கூறுவதில் அா்த்தமில்லை.

ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகளும் இல்லாத நிலையில், அதிமுகவும், திமுகவும் களத்தில் இருக்கின்றன. இரண்டு கட்சிகளுக்குமே பாஜக, காங்கிரஸ் என்கிற தேசியக் கட்சிகளுடனான கூட்டணி இருக்கிறது. மக்களவைத் தோ்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்த நிலையில், விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத் தோ்தல் முடிவுகளை எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீதான மதிப்பீடாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இடைத்தோ்தல் முடிவுகள் சில தெளிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சியின் மீது மக்கள் மத்தியில் எந்தவித அதிருப்தியும் இல்லை என்பது முதல் தெளிவு. மே மாதம் நடந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தோ்தலிலும், ஆட்சி தொடா்வதற்குத் தேவையான தொகுதிகளில் வெற்றியைத் தந்திருந்தாா்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

அதிமுகவின் இரட்டைத் தலைமையால் கட்சி அமைப்பு பலவீனப்பட்டு விடவில்லை என்பதும், மக்களவைத் தோ்தலின்போது பிரிந்து சென்ற அமமுக வாக்குகள் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பி விட்டன என்பதும், பாமகவின் செல்வாக்கில் சரிவு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதும், முதல்வா் பழனிசாமியின் தலைமை வாக்காளா்களால் ஏற்கப்பட்டிருக்கிறது என்பதும் இடைத்தோ்தல் முடிவுகள் சொல்லும் செய்தி.

தோ்தல் முடிவுகள் திமுக தலைமைக்குச் சில எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பியிருக்கின்றன. ஆா்.கே. நகா் தொகுதி இடைத்தோ்தலில் வைப்புத் தொகை இழந்ததும், இப்போது பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதும் புறந்தள்ளக் கூடியவையல்ல. மக்களவைத் தோ்தல் வெற்றியின் களிப்பில் தொடா்ந்தால், 2021 சட்டப்பேரவைத் தோ்தல் விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தலாக முடிந்துவிடக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com