பின் யோசனை! | பொருளாதார மந்தநிலை குறித்த தலையங்கம்


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கும் வரிக் குறைப்புகளும் சலுகைகளும் நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து இரண்டு மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், பல அறிவிப்புகளை அரசு திரும்பப் பெற்றிருப்பது வழக்கத்துக்கு விரோதமானது. நிதிநிலை அறிக்கை சற்று முன் யோசனையுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தயாரிக்கப்பட்டிருந்தால் இதற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கும் சுமார் ரூ.1.45 லட்சம் கோடி அளவிலான வரிக் குறைப்புகள் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பொருளாதார மந்த நிலையை மாற்றி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் அவசியம் என்கிற கருத்தை முற்றிலுமாக மறுத்துவிடவோ நிராகரித்துவிடவோ முடியாது. அரசின் நிதிநிலைமை தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது. எதிர்பார்த்த அளவில் வரி வருவாய் அதிகரிக்கவில்லை. நிதிப் பற்றாக்குறை இலக்கை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு பட்ஜெட் ஒதுக்கீடுகளுக்கு வெளியே அரசு கடன் வாங்கி வருகிறது. தேசிய சிறு சேமிப்பு நிதியிலிருந்து அரசின் பல்வேறு துறைகள் கடனுதவி பெற்றுக்கொள்ள வழிகோலப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தனி நபர் சேமிப்புகள் அரசின் திட்டங்களுக்கும் அரசு நிறுவனங்களின் தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

சில முடிவுகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் துணிந்து அறிவித்திருக்கிறார். வேறு எந்தவிதமான வரிச் சலுகையையும் அனுபவிக்காத நிறுவனங்களின் பெருநிறுவன வரி ("கார்ப்பரேட் டேக்ஸ்') 30 சதவீதத்திலிருந்து 22%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது அந்த நிறுவனங்களின் மீதான கூடுதல் வரிகளையும் சேர்த்த வரிப் பளு 34.94 %-லிருந்து 25.17 %-ஆகக் குறையும்.  அதைப்போல, வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்கள் 2023 மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்களது உற்பத்தியைத் தொடங்கினால், அந்த நிறுவனங்களின் மீதான வரி தற்போதைய 25 %-லிருந்து 15 %-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. 

பெருநிறுவனங்களுக்கு இந்த அளவிலான வரிச் சலுகைகளை மத்திய அரசு வாரி வழங்குவது ஏன் என்கிற விமர்சனம் எழுப்பப்படுகிறது. அதற்குச் சில காரணங்கள் இல்லாமல் இல்லை. அமெரிக்காவுடனான வரி யுத்தம் தொடங்கியதிலிருந்து சீனாவிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பலர் வெளியேறுகிறார்கள். பல நிறுவனங்களும் சீனாவிலிருந்து தங்களது தொழிற்சாலைகளை மூடிவிட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர்கின்றன. நியாயமாகப் பார்த்தால், சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களும் முதலீடுகளும் இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், வியத்நாம், கம்போடியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு அவை சென்று கொண்டிருக்கின்றன. அதற்கு மிக முக்கியமான காரணம், அந்த நாடுகளின் பெருநிறுவன வரி இந்தியாவைவிட மிகக் குறைவாக இருக்கிறது என்பதுதான்.
இப்போதைய அறிவிப்பின்படி,  தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகக் குறைவான பெருநிறுவன வரி விதிக்கும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. அதனால் சீனாவிலிருந்து வெளியேறும் அந்நிய முதலீட்டாளர்கள் இனிமேல் இந்தியாவை நோக்கியும் தங்களது பாதையைத் திருப்ப வழிகோலப்பட்டிருக்கிறது. 

புதிதாகக் தொடங்கப்படும் நிறுவனங்களின் மீதான வரி 15% என்று குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் உற்பத்தித் துறையில் அந்நிய முதலீட்டை பெரிய அளவில் ஈர்க்க முடியும் என்கிற அரசின் எதிர்பார்ப்பும் வரவேற்புக்குரியது. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தியைத் தொடங்குவதன் மூலம் வேலைவாய்ப்பையும் அதிகரிக்க முடியும் என்கிற அரசின் எதிர்பார்ப்பில் தவறு காண முடியாது. 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வரிக் குறைப்பு, சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகளால் அரசுக்கு ஏற்பட இருக்கும் வருவாய் இழப்பு ரூ.1,45,000 கோடி. இரண்டு மாதங்கள் முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், எதிர்பார்ப்புக்கு அதிகமான அளவில் வருவாய் காட்டப்பட்டிருந்தது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், பட்ஜெட்டில் எதிர்பார்த்த வரி வருவாய் அளவு எட்டப்படவில்லை. 

கடந்த 2018-19 நிதியாண்டின்  ரூ. 13.16 லட்சம் கோடி வருவாயைவிட 25% அதிகரித்து, 2019-20 பட்ஜெட்டில் மொத்த வரி வருவாய் ரூ.16.49 லட்சம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே எதிர்பார்த்த வரி வருவாய் இலக்கு எட்டப்படுமா என்பதே ஐயப்பாடாக இருக்கும் நிலையில், இப்போது நிதியமைச்சர் அறிவித்திருக்கும் வரிக் குறைப்புகள் பட்ஜெட் எதிர்பார்ப்பை மேலும் பலவீனப்படுத்தும். 

அரசு நிர்ணயித்திருக்கும் நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.3% இப்போதைய அறிவிப்பு அதை 4% அளவுக்கு அதிகரிக்கக் கூடும். ரிசர்வ் வங்கியிலிருந்து அரசுக்கு கிடைத்திருக்கும் எதிர்பாராத ரூ.1.75 லட்சம் கோடியை கணக்கில் எடுத்துக் கொண்டாலும்கூட, அரசால் நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்ட முடியுமா என்பது சந்தேகம்தான். ஒருவேளை மிகப் பெரிய அளவில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் சமன் செய்ய முயற்சிக்கலாம். 

அரசு தனது நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தாமலும்  முதலீட்டாளர்கள் கையூட்டுகளால் இம்சிக்கப்படாமலும் இருந்தால் மட்டும்தான்  பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகுமே தவிர, வரிச் சலுகைகள் பாலைவனத்தில் பெய்த மழையாக மாறிவிடும் என்கிற எச்சரிக்கையை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com