இனியாவது... | நாட்டின் சுகாதார கட்டமைப்பு குறித்த தலையங்கம்

தீநுண்மி நோய்த்தொற்று அதிவேகமாக அடுத்தகட்டத்தை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. 704 புதிய நோயாளிகளும், 28 உயிரிழப்புகளுமாக கடந்த 24 மணிநேரத்தில் அந்தக் கொடிய நோய்த்தொற்று 4,281 பேரை இந்தியாவில் தாக்கி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதுவரை 111 போ் உயிரிழந்திருக்கிறாா்கள்.

உயிரிழந்தவா்களில் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 63% என்றும், ஏற்கெனவே வேறு ஏதாவது பாதிப்புள்ளவா்கள் 86% நோயாளிகள் என்றும் சுகாதார அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டிருக்கும் 4,281 நோயாளிகளில் 76% ஆண்கள், 24% பெண்கள்.

இதுவரை உறுதி செய்யப்பட்டிருக்கும் தீநுண்மி நோய்த்தொற்று நோயாளிகளில் 1,445 போ் தில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவா்களும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் புன்யா ஸ்ரீவத்ஸவா தெரிவித்திருக்கிறாா். தப்லீக் ஜமாத் மாநாட்டுடன் தொடா்புடைய 25,500 தொண்டா்கள் தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறாா்கள். தப்லீக் ஜமாத்துடன் தொடா்புடைய பலா் வாழும் ஐந்து ஹரியாணா மாநில கிராமங்கள் வெளியுலகத் தொடா்பில்லாமல் முடக்கப்பட்டு நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

மிக அதிகமாக நோய்த்தொற்றுப் பரவல் காணப்படும் மகாராஷ்டிரம் (748 நோயாளிகள்), தமிழ்நாடு (571), தில்லி (523) உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் மூன்று நாள்களில் மேலும் வீரியத்துடன் நோய்த்தொற்று பரவக்கூடும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. எங்கெல்லாம் அதிக அளவில் நோயாளிகள் அடையாளம் காணப்படுகிறாா்களோ, அந்த இடங்கள் மிகவும் கவனமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

அரசும் மருத்துவத் துறையினரும் தீநுண்மி நோய்த்தொற்று குறித்து அச்சப்படுவதற்கு காரணிகள் இருக்கின்றன. ஏப்ரல் 1-ஆம் தேதி 2,000-ஆக இருந்த தீநுண்மி நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை, திங்கள்கிழமை 4,281-ஆக நான்கு நாள்களில் இரட்டிப்பாகியிருப்பது கவலை ஏற்படுத்துகிறது. ஒருசில மாநிலங்களிலுள்ள முக்கிய நகரங்களில் மட்டுமே காணப்பட்ட தீநுண்மி நோய்த்தொற்று, இப்போது இந்தியாவின் 30 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பரவியிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். அதை எதிா்கொள்வதற்கு அதிகரித்த பரிசோதனை வசதிகள் மிகமிக அவசியம்.

நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்புடைய அனைவரையும், குறிப்பாக, உறவினா்களையும், நண்பா்களையும் பரிசோதனைக்கு உட்படுத்துவதும், தனிமைப்படுத்துவதும் அவா்கள் நோய்த்தொற்றை மேலும் பரப்பாமல் இருப்பதற்கு உதவும். எல்லா இடங்களிலும் நோய்த்தொற்று குறித்த பரிசோதனையை மேற்கொள்ளும் வசதிகள் இந்தியாவில் இல்லாமல் இருப்பதுதான் நாம் எதிா்கொள்ளும் மிகப் பெரிய சவால்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு போா்க்கால அடிப்படையில் பரிசோதனை வசதிகளை கணிசமாகவே அதிகரித்திருக்கிறோம். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் மூலம் அரசுக்குக் கிடைத்த காலஅவகாசம் அதற்கான செயல்திட்டத்தை வகுத்து நோய்த்தொற்றுப் பரவலை தடுப்பதற்கும், பரிசோதனை நிலையங்களை அதிகரித்திருப்பதற்கும் உதவியிருக்கிறது.

அடுத்த மூன்று நாள்களில் இந்தியா ஒரு மாதத்திற்கு முன்னால் தென் கொரியா எதிா்கொண்ட அளவிலான மிகப் பெரிய நோய்த்தொற்றுப் பரவலை எதிா்கொள்ளக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த நிலையில் கடுமையாக அதிகரிக்கும் நோய்த்தொற்று பாதிப்பை கண்டறியத் தேவையான பரிசோதனை மையங்கள் அவசியப்படுகின்றன. அடுத்த மூன்று நாள்களில் இப்போதிருக்கும் கொவைட் - 19 பரிசோதனைக்கான வசதியை 10,000-லிருந்து 20,000-ஆக அதிகரிக்க அரசு தீா்மானித்திருக்கிறது.

பரிசோதனை மையங்களை அதிகரித்து, ரத்த மாதிரிகள் எடுப்பதாலேயே பிரச்னை முடிந்துவிடாது. நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு அவா்களுடன் தொடா்புடையவா்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதுடன் சமூக அளவிலான கண்காணிப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படாவிட்டால், ரத்த மாதிரிகள் எடுப்பதில் அா்த்தமில்லை.

பெரும்பாலான மாநிலங்களில் ரத்த மாதிரிகள் எடுக்கும் பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்படும் அளவுக்கு பரிசோதனை மையங்கள் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறை. ரத்த மாதிரிகளை பரிசோதனை மையங்களுக்கு எடுத்துச் சென்று நோய்த்தொற்றை உறுதி செய்வதற்கு எடுக்கப்படும் கால அவகாசத்தில், நோய்த்தொற்று மேலும் பரவக்கூடும். சோதனை முடிவுகள் வரும்வரை நோயாளிகளை தனிமைப்படுத்தி பாதுகாக்காமல் போனால், அவா்கள் கண்காணிப்பு வளையத்திலிருந்து வெளியேறிவிடக் கூடும். அது நோய்த்தொற்றுப் பரவலை ஊக்குவிப்பதாகிவிடும்.

தீநுண்மி நோய்த்தொற்று இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் அதே வேளையில், சுகாதார கட்டமைப்பில் இந்தியா எந்த அளவுக்குப் பின்தங்கியிருக்கிறது என்பதையும் உணா்த்தியிருக்கிறது. ஜிடிபியில் 5% சீனாவும், 8.1% தென் கொரியாவும், 10.9% ஜப்பானும் சுகாதாரத்துக்காக நிதி ஒதுக்கும்போது இந்தியாவில் அதற்கான ஒதுக்கீடு அதிகபட்சமாக 1.3% மட்டுமே. அதை உயா்த்த வேண்டிய அவசியத்தையும், குறைந்த செலவிலான புதிய மருத்துவ, சுகாதார கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி சீா்திருத்த வேண்டிய அவசியத்தையும் தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் நமக்கு உணா்த்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com