தவிர்க்கலாம், மறைக்க முடியாது! ! பி.வி.நரசிம்ம ராவ் நூற்றாண்டை காங்கிரஸ் கொண்டாடாதது குறிந்த தலையங்கம்

தனக்கு 16 மொழிகளில் எழுதவும், பேசவும் தெரிந்தும்கூட தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை மௌனமாகவே நகர்த்தியவர் பி.வி.நரசிம்ம ராவ்.


முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த நூற்றாண்டு கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கியது. வேடிக்கை என்னவென்றால், அவரது நூற்றாண்டை விமரிசையாகக் கொண்டாட முடிவெடுத்திருப்பது, அவர் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியல்ல, தெலங்கானா ராஷ்டிர சமிதி! அவருக்குத் தபால் தலை வெளியிட்டு கௌரவிக்க முடிவெடுத்திருப்பது பாஜக!

இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படாத இரண்டு பிரதமர்கள் மொரார்ஜி தேசாயும், நரசிம்ம ராவும் மட்டும்தான். மொரார்ஜி தேசாயாவது காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர். ஆனால் நரசிம்ம ராவ், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து ஆண்டுகள் பிரதமராகவும் இருந்தவர். அவரது வாழ்க்கையில் எந்தக் காலகட்டத்திலும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதுமில்லை, தனக்குப் பெரிய பட்டங்களும் கௌரவங்களும் தரப்பட வேண்டும் என்று விரும்பியதும் இல்லை. தனக்கு 16 மொழிகளில் எழுதவும், பேசவும் தெரிந்தும்கூட தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை மௌனமாகவே நகர்த்தியவர் அவர்.

1971-இல் நரசிம்ம ராவ் ஆந்திர மாநிலத்தின் முதல்வரானதற்குக் காரணம், அப்போது தீவிரமாகியிருந்த தெலங்கானா போராட்டம். அடுத்த 15 மாதங்கள் மட்டுமே ஆந்திர முதல்வராக இருந்தவர் அவர். ஆனால், அந்த 15 மாதங்களில் ஆந்திரத்தின் போக்கையே  மாற்றி அமைத்த பெருமை அவருக்கு உண்டு.

நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்த நரசிம்ம ராவ், ஆந்திர மாநிலத்தில் நிலச்சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தபோது, அது எவருமே எதிர்பாராத  முடிவு. நிலச்சுவான்தார்கள் தங்களது சொத்துகளை பினாமிகளின் பெயரில் மாற்றிவிடாமல் இருக்க அவசரச் சட்டம் பிறப்பித்த அவரது சாதுர்யத்தை இன்றளவும் நினைத்து  பலர் வியக்கிறார்கள். அவரது அந்த முடிவால்தான், நிலச்சுவான்தார்கள் தங்களது முதலீடுகளை வர்த்தகம், உற்பத்தித் துறை என்று மாற்றத் தலைப்பட்டனர்.  இன்று  ஹைதராபாத் மிகப்பெரிய நகரமாக மாறியதற்கும், ஆந்திரம் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்ததற்கும் நரசிம்ம ராவின் அந்த துணிச்சலான முடிவுதான் காரணம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

1991-இல் நரசிம்ம ராவ் பிரதமரானது உண்மையிலேயே ஒரு விபத்து. மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்து, ஓய்வுபெற இருந்த நரசிம்ம ராவைத் தேர்தல் முடியும்வரை,  தில்லியில் இருந்து கட்சிப் பணிகளை கவனித்துக்கொள்ள ராஜீவ் காந்தி பணித்தபோது, அது தனது வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வு என்று நரசிம்ம ராவேகூட எதிர்பார்த்திருக்க மாட்டார். 

ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து கட்சித் தலைமையும், பிரதமர் பதவியும்  அவரைத் தேடிவந்தன.  மக்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் நரசிம்ம ராவ் தலைமையில் அமைந்தது சிறுபான்மை அரசு.  அதைவிடப் பெரிய சோதனையாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு அநேகமாக வறண்டுவிட்ட நிலைமை. அடுத்த 15 நாள்களில், இந்தியா வாங்கியிருக்கும் கடன்களுக்கான வட்டித் தவணையைக் கட்டியாக வேண்டும். இல்லையென்றால், சர்வதேச அவமானத்துக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாக நேரும்.

பொருளாதார சீர்திருத்தம், தாராளமயம், உலகமயம் என்று நரசிம்ம ராவ் அரசு அறிவித்தது, அது ஏதோ தற்காலிகப் பொருளாதார இடரிலிருந்து தப்பிப்பதற்காக மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் போக்கையே தடம் மாற்றுவதற்கான முடிவு என்பதைக் கடந்த முப்பது ஆண்டுகள் உறுதிப்படுத்துகின்றன. அதற்குப் பிறகு ஐந்து பிரதமர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து விட்டனர். ஆனால், நரசிம்ம ராவ் போட்ட பாதையில்தான் பயணிக்கிறார்கள்.

நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சியில் செய்த மிகப்பெரிய புரட்சியைப் பற்றி ஏனோ யாரும் அதிகம் பேசுவதில்லை.  நீண்ட காலத்துக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும், அதன் செயற்குழுவுக்கும் தேர்தல் நடத்திக் காட்டியவர் அவர். அவருக்குப் பின்னால், காங்கிரஸ் மீண்டும் பழைய நியமன முறைக்கே மாறிவிட்டது அந்தக் கட்சியின் துர்பாக்கியம். 

நரசிம்ம ராவின் அரசியல் வாழ்க்கையில் இரண்டு முக்கியமான விமர்சனங்கள் உண்டு. 1984-இல் இந்திரா காந்தியின் மறைவை ஒட்டி சீக்கியருக்கு எதிராக எழுந்த கலவரத்தின்போது, உள்துறை அமைச்சராக இருந்தவர் நரசிம்ம ராவ். 1992, டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பின்போது பிரதமராக இருந்தவரும் நரசிம்ம ராவ். அந்த இரண்டு நிகழ்வுகளையும் அவர் மறுக்கவோ, அதற்கு விளக்கம் அளிக்கவோ  முற்படவே இல்லை. காலம் பதில் சொல்லும் என்று நினைத்து மௌனம் சாதித்தாரோ என்னவோ?

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை மாற்றி அமைத்தவர் அவர்தான். மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தி அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்தவர் அவர்தான். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக்குவதற்கான அனைத்துப் பணிகளும் பிரதமர் நரசிம்ம ராவ் அரசால் செய்யப்பட்டுவிட்டதாக டாக்டர் அப்துல் கலாமே தெரிவித்திருக்கிறார். ஆனால், இவை எதையும் தனது சாதனையாக அவர் பேசியதே  இல்லை. காலம் சொல்லட்டும் என்று நினைத்து மௌனம் சாதித்தாரோ என்னவோ?

நரசிம்ம ராவின் நூற்றாண்டு விழாவை அவர் தலைமை வகித்த காங்கிரஸ் கட்சி கொண்டாடாமல், தெலங்கானா ராஷ்டிர சமிதி கொண்டாட முற்பட்டிருப்பதில் ஆச்சரியப்பட வேண்டாம். முன்னாள் காங்கிரஸ் தலைவரான அவர் இறந்தபோது,  பொதுமக்கள்  மரியாதை செலுத்துவதற்காகக் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அவரது உடலை வைக்க அனுமதிக்காத சோனியா தலைமை, இப்போது நூற்றாண்டு விழா கொண்டாடுமா என்ன?

நேரு குடும்பத்தைச் சேராதவர்கள் என்பதால்,  சர்தார் வல்லபபாய் படேலை பாஜகவுக்கும், பி.வி.நரசிம்ம ராவை தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார்கள். இதுவும் ஆச்சரியப்படுத்தவில்லை. எத்தனையோ தடவை சென்னைக்கு விஜயம் செய்திருக்கும் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அண்ணா சமாதிக்கும், கருணாநிதி சமாதிக்கும்தான் போயிருக்கிறார்கள். காமராஜர் நினைவகத்துக்கு ஒரு முறையாவது போயிருக்கிறார்களா? அதுபோலத்தான் இதுவும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com